ஒருவருடைய வாழ்வும் தாழ்வும் அவருடைய முயற்சியிலும் உழைப்பிலும் தான் இருக்கிறது. அப்படி முயற்சிகளும் உழைப்பும் இருந்தாலும் அவரால் எந்தவித முன்னேற்றத்தையும் அடையவில்லை என்றால் அவரை சுற்றி எதிர்மறை ஆற்றல்கள் இருப்பதாக அர்த்தம். எந்த ஒரு வீட்டில் எதிர்மறையாற்றல்கள் இருக்கிறதோ அந்த வீட்டில் தெய்வத்தின் அருள் என்பது இருக்காது. தெய்வத்தின் அருளை பெற வேண்டுமானால் எதிர்மறை ஆற்றலை விலக்க வேண்டும். இப்படி எதிர்மறை ஆற்றலை விலக்குவதற்கு செய்யக்கூடிய ஒரு தாந்திரீக பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஒரு வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்வதற்கு பல அறிகுறிகள் இருக்கும். வீட்டில் இருப்பவர்களுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போய்விடும், வீட்டில் நிம்மதியோ சந்தோஷமோ இருக்காது, எதற்கெடுத்தாலும் சண்டைகள் வந்து கொண்டே இருக்கும், மனரீதியாக எந்தவித அமைதியும் இருக்காது, ஏன் வீட்டிற்குள் வருகிறோம் என்ற எண்ணமே வரும், எதிலும் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருக்கும், இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆக மொத்தம் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். இவற்றை நீக்குவதற்கு சில தாந்திரீக பரிகாரங்கள் இருக்கிறது. அவற்றில் ஒன்றைப் பற்றி பார்ப்போம்.
இந்த பரிகாரத்தை சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை செய்ய வேண்டும். மாலை 6:00 மணிக்கு மேல் இரவு படுக்க செல்வதற்கு முன் இந்த பரிகாரத்தை தங்களின் வசதிக்கேற்ப எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். இந்த பரிகாரத்திற்கு புதிதாக ஒரு பெரிய அகல் விளக்கை வாங்கிக் கொள்ளுங்கள் அல்லது சிறிய மண் பாத்திரத்தை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இதை இந்த பரிகாரம் செய்வதற்கு மட்டுமே உபயோகப்படுத்துவது போல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது புதிதாக வாங்கிய இந்த மண் பாத்திரத்தில் ஐந்து கிராம்பு, மூன்று ஏலக்காய், மூன்று கற்பூரம் வைத்து ஏற்ற வேண்டும். இது நன்றாக எரிய ஆரம்பிக்கும். அப்பொழுது இதை எடுத்துக்கொண்டு வீட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு அறைக்கும் சென்று இதன் புகை அந்த அறைக்குள் பரவுவது போல் காட்ட வேண்டும். கிராம்பும் ஏலக்காயும் முழுதாக எரிந்து முடித்த பிறகு இவற்றை ஒரு சிறிய கல்லை பயன்படுத்தி நுணுக்கி தூளாக்கிக் கொள்ளுங்கள்.
இந்த சாம்பலை வீட்டு நுழைவாயிலில் தூவ வேண்டும் அல்லது சிறிது தண்ணீரில் இந்த தூளை போட்டு கரைத்து வீட்டு நிலை வாசலில் தெளித்து விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களும், சக்திகளும் விலகும். இதோடு மட்டுமல்லாமல் வீட்டிற்குள் எந்த வித தீய சக்திகளும் நுழையாமல் இது ஒரு பாதுகாப்பு கவசம் போல் நம்மையும், நம் வீட்டையும் காக்கும்.
இதையும் படிக்கலாமே: லட்சுமி கடாட்சம் உண்டாக லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு
மிகவும் எளிமையான இந்த தாந்திரீக பரிகாரத்தை விருப்பம் இருப்பவர்கள் செய்து வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களை நீக்கி மகிழ்ச்சியுடன் வாழலாம்.