ஐந்தே நிமிடத்தில் செய்யக்கூடிய இரண்டு விநாயகர் சதுர்த்தி பலகாரங்கள். விநாயகர் சதுர்த்தி நாளான இன்று இதனை வீட்டில் சுலபமாக செய்து விநாயகருக்கு படைத்து பலன் பெறுங்கள்.

aval
- Advertisement -

விநாயகர் சதுர்த்தியன்று விநாயகருக்கு பிடித்த பலகாரங்கள் அனைத்தையும் படையலில் வைத்து பூஜை செய்வதை அனைவரும் வழக்கமாக வைத்திருக்கிறோம். அன்றைய தினம் அனைவரது வீட்டிலும் புதுவிதமான பலகாரங்கள் செய்திருப்பார்கள். அதிலும் முக்கியமாக விநாயகருக்கு பிடித்தமான இனிப்பு பலகாரங்கள் தான் அதிகமாக இருக்கும். இனிப்பு பலகாரம் என்றாலே வேலை அதிகமாக இருக்கும் என்பது அனைவரின் எண்ணமாகும். எனவே விநாயக சதுர்த்தி அன்று எந்த பலகாரத்தை சுலபமாக செய்ய முடியும் என்று பலரும் சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். இவ்வாறானவர்களுக்காக எளிதில் ஐந்தே நிமிடத்தில் செய்யக்கூடிய விநாயகருக்கு பிடித்த பலகாரங்களை எப்படி செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

sweets

இனிப்பு அவல் செய்ய தேவையான பொருட்கள்:
அவல் – ஒரு கப், வெல்லம் – அரை கப், உப்பு – ஒரு சிட்டிகை, ஏலக்காய்த்தூள் – அரை ஸ்பூன், தேங்காய் துருவல் – அரை கப், முந்திரி – 10, திராட்சை – 5, நெய் – 2 ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் வெல்லத்தை நன்றாக பொடி செய்து, ஒரு கிண்ணத்தில் ஒன்றரை டம்ளர் தண்ணீர் சேர்த்து, அதனுடன் பொடித்த வெல்லம், உப்பு மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும். வெல்லம் நன்றாக கரைந்தவுடன் அதனை வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

vellam

பிறகு ஒரு கடாயை அடுப்பின் மீது வைத்து இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து முந்திரி மற்றும் திராட்சையை பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். பிறகு ஒரு கிண்ணத்தில் அவலை எடுத்துக்கொண்டு அதனுடன் துருவிய தேங்காய், ஆற வைத்துள்ள வெல்லக் கரைசல் மற்றும் பொரித்து வைத்துள்ள முந்திரி திராட்சை இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும், அவல் வெல்லக் கரைசலில் நன்றாக ஊறும் வரை அப்படியே வைத்துவிடவேண்டும். சிறிது நேரத்தில் விநாயகருக்கு மிகவும் பிடித்த சுவையான இனிப்பு அவல் தயாராகிவிடும்.

- Advertisement -

பிடி கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்கள்:
அரிசி மாவு – ஒரு கப், வெல்லம் – முக்கால் கப், தேங்காய் துருவல் – ஒரு கப், ஏலக்காய் தூள் – அரை ஸ்பூன், எள் – ஒரு ஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை, நெய் – 2 ஸ்பூன்.

coconut1

செய்முறை:
முதலில் ஒரு கடாயை அடுப்பின் மீது வைத்து ஒரு ஸ்பூன் எள்ளை லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதே கடாயில் ஒரு கப் அரிசி மாவை சேர்த்து மிதமான தீயில் வறுத்து எடுக்க வேண்டும்.

பிறகு ஒரு கிண்ணத்தில் ஒரு கப் வெல்லத்துடன் ஒன்றரை கப் தண்ணீர், ஏலக்காய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விட வேண்டும். வெல்லம் முழுவதுமாக கரைந்ததும் அதனை வேறு ஒரு கிண்ணத்தில் வடிகட்டி விட்டு மீண்டும் அடுப்பின் மீது வைத்து கொதிக்க விட வேண்டும். வெல்லம் நன்றாக கொதித்து வரும் பொழுது அடுப்பின் தீயை சிறியதாக்கி அரிசிமாவை இதனுடன் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். சிறிது நேரம் கழித்து மாவு நன்றாக கெட்டியாகி வரும்பொழுது அடுப்பை அனைத்து விட வேண்டும்.

pidi-kozhukattai2

அதன்பின் இந்த மாவுடன் துருவிய தேங்காய் மற்றும் வறுத்த எள் சேர்த்து நன்றாக பிசைந்து கொண்டு சிறு உருண்டைகளாக கையில் எடுத்து கொழுக்கட்டைகளாகப் பிடித்து கொள்ள வேண்டும். அதன்பின் இட்லி பாத்திரத்தை அடுப்பின் மீது வைத்து, இட்லி தட்டுகளில் நெய் தடவி அதன் மீது பிடித்து வைத்துள்ள கொழுகட்டைகள் அனைத்தையும் வைத்து 5 நிமிடம் வேக வைத்தால் போதும். விநாயகருக்கு பிடித்த சுவையான பிடி கொழுக்கட்டை தயாராகிவிடும்.

- Advertisement -