ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ்சை இவ்வளவு சுலபமாக வீட்டிலேயே செய்யலாமா? இதை இனி நிறைய காசு கொடுத்து கடைகளில் வாங்க வேண்டிய அவசியம் இல்லை.

french fries tamil
- Advertisement -

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சிற்றுண்டி வகைகளில் ஃப்ரெஞ்ச் பிரைசும் ஒன்று. ஆனால் இதனை கடைகளில் வாங்கினோம் என்றால் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டும். ஆனால் கிடைப்பதோ குறைந்த அளவு ஃப்ரென்ச் ஃப்ரைஸ் தான். அதுவே இதை வீட்டில் சமைத்தால் குழந்தைகளுக்கு போதுமான அளவு கொடுக்க முடியும். இதை செய்வது மிகவும் கடினம் என்று எண்ணி பலரும் இதை வீட்டில் செய்வது இல்லை. ஆனால் இதனை எவ்வாறு எளிமையாக செய்யலாம் என்று இந்த பதிவில் பதிவிட்டுள்ளோம் படித்து பயன் பெறுங்கள்.

French fries tamil

ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் செய்ய தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 2
சோள மாவு –1ஸ்பூன்
அரிசி மாவு –1 ஒரு ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு

- Advertisement -

ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் செய்முறை:
முதலில் எடுத்து வைத்துள்ள இரண்டு உருளைக் கிழங்குகளை தோல் நீக்கி சுத்தம் செய்துகொள்ள வேண்டும். பிறகு அதனை நீளவாக்கில் மெல்லியதாக 4 அல்லது 5 துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வெட்டிய துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து அதனையும் நீளவாக்கில் மெல்லியதாக சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவேண்டும். நம்மால் எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு மெல்லியதாக வெட்டி எடுத்துக் கொள்ளலாம். பின்னர் வெட்டிய துண்டுகளை ஒரு கிண்ணத்தில் மாற்றி அதன் மீது தேவையான அளவு உப்பு தூவி அணைத்து இடத்திலும் உப்பு படரும்படி பிரட்டி விட வேண்டும். இவ்வாறு செய்வதால் உருளைக்கிழங்கு கலர் கருப்பாக மாறாமல் இருக்கும்.

French fries tamil

பிறகு ஒரு இட்லி பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதனை அடுப்பின் மீது வைக்க வேண்டும். இட்லி தட்டில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து ஒவ்வொரு இட்லி குழியிலும் தடவி விட வேண்டும். பின்னர் வெட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டுகளை ஒவ்வொரு குழியிலும் நான்கைந்து துண்டுகள் இருக்குமாறு வைக்க வேண்டும். இவ்வாறு அனைத்து துண்டுகளையும் இட்லி பாத்திரத்தில் வைத்து பாத்திரத்தை மூடி சரியாக 3 நிமிடம் மிதமான தீயில் வேக விட வேண்டும். சரியாக 3 நிமிடம் கழித்து இட்லி குக்கரை திறந்து உருளைக்கிழங்கு துண்டுகளை வெளியில் எடுத்து காய்கறி வெட்டும் பலகையில் வைத்து உலர விட வேண்டும். உருளைக்கிழங்கு அதிகமாக வெந்துவிடக் கூடாது, அதனால் 3 நிமிடத்தில் எடுப்பது அவசியம்.

- Advertisement -

பிறகு ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் ஒரு ஸ்பூன் சோள மாவு, ஒரு ஸ்பூன் அரிசி மாவு போட்டு கலந்துவிட வேண்டும். இப்பொழுது உலர்த்தப்பட்ட உருளைக்கிழங்கு துண்டுகளை இந்த மாவில் சேர்த்து நன்றாக பிரட்டி எடுக்க வேண்டும். நான்கைந்து துண்டுகளாக ஒன்றன் பின் ஒன்றாக பிரட்டி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த மாவு உருளைக்கிழங்கு துண்டுகள் மீது லேசாக ஒட்டினால் மட்டும் போதும். இதனை நீங்கள் மொத்தமாக உடனேயும் சமைக்கலாம் அல்லது சிறிதளவு அலுமினியம் ஃபாலிக் இருந்தால் அதில் எடுத்துவைத்து ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து எப்போது தேவைப்படுகிறதோ அப்போது எடுத்தும் சமைக்கலாம்.

French fries tamil

அடுப்பில் கடாயை வைத்து கடாய் நன்றாக சூடானதும் அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் பிரட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டுகளை எண்ணெயில் சேர்த்து நன்றாக பொரித்தெடுக்க வேண்டும். அடுப்பை அதிக தீயில் வைத்து கூட பொரித்து எடுக்கலாம். உருளைக்கிழங்கு பொன்னிறமாக மாறும் வரை இதை பொரியவிடவேண்டும். இப்படி மீதமுள்ள அனைத்து உருளைக்கிழங்கு துண்டுகளையும் பொரித்து எடுக்க வேண்டும்.

French fries tamil

பொரித்து எடுத்த ஃப்ரெஞ்ச் ப்ரைஸ்ஐ ஒரு சிறிய தட்டில் வைத்து அதனுடன் சிறிதளவு தக்காளி சாஸை சேர்த்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி உண்பார்கள். இது நீங்கள் கடையில் வாங்கும் அளவிற்கு மிகவும் சுவையாகவும் இருக்கும். இதனை நீங்கள் வீட்டில் செய்து உங்கள் குழந்தைகளை மகிழ்விக்கலாம்.

- Advertisement -