காலிஃபிளவரை வைத்து குருமா செய்யலாம். சில்லி செய்யலாம். பக்கோடா கூட செய்யலாம். வடை எப்படி செய்வது. கொஞ்சம் வித்தியாசமான சுவையில் சூப்பரான ஸ்னாக்ஸ் ரெசிபி உங்களுக்காக. வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே அருமையான இந்த வடையை வெறும் பத்தே நிமிடத்தில் சுட்டு எடுத்து அசத்தலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ஹெல்தி ஸ்நாக்ஸ் ரெசிபி உங்களுக்காக.
முதலில் ஒரு மீடியம் சைஸில் இருக்கும் காலிஃபிளவரை எடுத்து பெரிய பெரிய பூக்களாக வெட்டி சுத்தம் செய்து, அதை துருவிக் கொள்ள வேண்டும். கேரட் பீட்ரூட் துருவலில் ஒவ்வொரு பூக்களாக எடுத்து துருவிக் கொள்ளுங்கள். துருவிய 2 கப் அளவு காலிஃப்ளவரை தனியாக ஒரு பௌலில் போட்டுக் கொள்ளுங்கள்.
துருவிய காலிஃப்ளவர் – 2 கப், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1/2 கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2, இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன், மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன், கரம் மசாலா – 1/2 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, பொடியாக நறுக்கிய கருவேப்பிலை தழை, இந்த பொருட்களை சேர்த்து முதலில் உங்கள் கையை கொண்டு அழுத்தம் கொடுத்து நன்றாக பிசைய வேண்டும்.
தண்ணீர் எதுவும் ஊற்றி விடக்கூடாது. பிசையும்போது இதிலிருந்து தண்ணீர் விடத் தொடங்கும். அந்த தண்ணீரே போதுமானது. மேலே சொன்ன மசாலா பொருட்களை போட்டு ஒரு முறை பிசைந்து இறுதியாக தான் கடலை மாவு – 1 கப், அரிசி மாவு – 1/2 கப், சேர்த்து மீண்டும் ஒருமுறை உங்கள் கைகளை வைத்து அழுத்தம் கொடுத்து பிசைய வேண்டும். இது நமக்கு கெட்டியான மாவு பதத்திற்கு கிடைத்துவிடும்.
இந்த மாவை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி, உள்ளங்கையில் வைத்து சீராக தட்டி வடை போல அப்படியே எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டியதுதான். அடுப்பில் கடாயை வைத்து அதில் இந்த வடையை போட்டு பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும்.
எண்ணெய் மிதமான சூட்டில் இருக்கும் போது ஒவ்வொரு வடையாக விடுங்கள். ஒரு நிமிடம் வரை எண்ணெயில் வடைகள் வெந்த பின்பு கரண்டியை வைத்து பக்குவமாக இரண்டு பக்கமும் பொன்னிறம் வரும் வரை சிவக்க வைத்து எடுத்தால் சூப்பரான காலிஃபிளவர் வடை அருமையாக தயாராகிவிடும். சூப்பரான புதினா சட்னி, டொமேட்டோ சாஸ் எதை வேண்டுமென்றாலும் தொட்டு இந்த வடையை சாப்பிட்டுக் கொள்ளலாம். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா உங்க வீட்ல மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.