நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி வெள்ளிக்கிழமை கேதார கௌரி விரதம் என்பது அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் விரதம் இருந்து 21 வகையான நெய்வேத்தியங்களை வைத்து நோன்பு இருப்பார்கள். அப்படி நோன்பு இருக்கும் பொழுது கலசம் வைத்து அதில் நோன்பு கயிரை வைத்து வழிபாடு செய்பவர்களும் உண்டு. இந்த நோன்பு முறையை அவர்களுடைய முன்னோர்களின் வழியில் எப்படி செய்கிறார்களோ அதே போல் தான் தொடர்ச்சியாக செய்ய வேண்டும். புதிதாக நோன்பு இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அப்படி நோன்பு இருக்காமல் சிவபெருமான் மற்றும் பார்வதியின் அருளை பெறுவதற்கு செய்ய வேண்டிய வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கேதார கௌரி வழிபாடு
சிவபெருமானை நினைத்து பார்வதி அம்மன் இருந்த விரதத்தை தான் கேதார கௌரி விரதம் என்று கூறுகிறார்கள். இந்த விரதத்தை தொடர்ச்சியாக 21 நாட்கள் இருப்பவர்களும் இருக்கிறார்கள். கடைசி ஒரு நாள் மட்டும் நோன்பு எடுப்பவர்களும் இருக்கிறார்கள். இதற்கு கையில் நோம்பு கயிறு என்று ஒன்றை கட்டுவதையும் அன்றைய தினத்தில் 21 வகையான பழங்களோ 21 வகையான நெய்வேத்தியங்களையோ வைத்து விரதம் இருந்து சிவன் மற்றும் பார்வதியின் வழிபாட்டில் ஈடுபட வேண்டும் என்றும் கூறுவார்கள். இப்படி செய்ய இயலாதவர்கள் எளிமையான முறையில் எப்படி சிவன் மற்றும் பார்வதியின் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று தான் பார்க்க போகிறோம்.
இந்த விரதத்தை நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி காலையில் மேற்கொள்வது என்பது சிறப்பு. சிவன் பார்வதி இவர்கள் இருவரின் படமும் ஒரு சேர இருப்பது போல் ஒரு படத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அவர்களுக்கு வில்வ இலை மாலை, மல்லிகை பூ மாலை போன்றவற்றை சாற்றி அலங்காரம் செய்து கொள்ளுங்கள். தங்களால் இயன்ற ஏதாவது ஒரு நெய்வேத்தியத்தை வைத்து விடுங்கள்.
பிறகு சிவபெருமானின் போற்றிகள் பார்வதி தேவியின் போற்றிகளை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். இப்படி அர்ச்சனை செய்து முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்ட வேண்டும். இந்த வழிபாட்டை செய்வதன் மூலம் கணவன் மனைவி அன்யோனியமாகவும் எந்தவித சண்டை சச்சரவுகளும் இல்லாமல் வாழ்வார்கள் என்று கூறப்படுகிறது. நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் தடைப்பட்டு கொண்டு இருப்பவர்களும் இந்த நாளில் இப்படி வழிபாடு செய்வதன் மூலம் விரைவிலேயே அவர்களுக்கு திருமண பாக்கியம் உண்டாகும் என்றும் கூறப்படுகிறது.
திருமண வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சினைகள் இருக்கிறது, கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை வருகிறது, ஒன்றாக இல்லை திரும்பவும் தம்பதி சகித்தமாக சந்தோஷமாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த வழிபாட்டில் அர்த்தநாரீஸ்வரரின் போற்றிகளையும் ஸ்லோகத்தையும் கூறி வழிபாடு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி செய்வதன் மூலம் சிவன் எப்படி பார்வதியை தன்னில் பாதியாக ஆக்கினாரோ அதேபோல் கணவனும் மனைவியும் ஒன்றாக இணைந்து சந்தோஷமாக வாழ்வார்கள் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே:ஆசைப்பட்ட வேலையில் அமர பரிகாரம்
நோன்பு இருந்து வழிபாடு செய்ய இயலாதவர்கள் கூட இந்த எளிமையான சிவன் பார்வதி வழிபாட்டை மேற்கொண்டால் கேதார கௌரி விரதம் இருப்பதால் கிடைக்கக்கூடிய பலன்களை பெற முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.