என்னதான் பார்த்து பார்த்து தலை சீவி முடித்து கீழே இருக்கும் முடிகளை எடுத்தாலும் நம் கண்ணிற்கு தெரியாமல் எங்காவது ஏதாவது ஒரு முடிபோய் மறைந்து கொண்டு ஃபேனை போட்டவுடன் வெளியில் வர ஆரம்பிக்கும். இப்படி அதிகப்படியான முடி உதிர்வை தடுப்பதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான ஹேர் ட்ரீட்மென்ட் தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.
முடி உதிர்தல் என்பது சாதாரண விஷயம் அல்ல. நம் உடலில் இருக்கக்கூடிய சத்துக்களின் குறைபாட்டாலும் முடி உதிர்தல் ஏற்படும். சிலருக்கு நோய்களின் தாக்கத்தாலும் முடி உதிர்தல் ஏற்படும். சிலருக்கு பரம்பரை ரீதியாகவும் முடி உதிர்தல் ஏற்படும். இன்னும் சிலருக்கு ஹார்மோன் குறைபாடுகளாலும் முடி உதிர்தல் பிரச்சினை ஏற்படும்.
இந்த முடி உதிர்தல் பிரச்சனையை சரி செய்வதற்கு பல வழிகள் இருக்கின்றன. மிகவும் எளிமையான ஒரு வழியை பற்றி இன்று நாம் பார்ப்போம். இதற்கு நமக்கு தேவைப்படும் பொருட்கள் இரண்டே இரண்டு தான். ஒன்று அரிசி மற்றொன்று சின்ன வெங்காயம்.
முதல் நாள் மாலையே ஒரு கைப்பிடி அளவு அரிசியை எடுத்து அதை ஒருமுறை கழுவி ஊற்றிவிட்டு சுத்தமான தண்ணீரை ஊற்றி வைக்க வேண்டும். பிறகு அதில் 5 சின்ன வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி அதனுடன் சேர்த்து ஊற போட்டு விட வேண்டும். குறைந்தது 12 மணி நேரமாவது இது ஊற வேண்டும். மறுநாள் காலையில் எழுந்து இதை நன்றாக கைகளால் கசக்கி எவ்வளவு பிணைய முடியுமோ அவ்வளவு பிணைந்து தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
இப்பொழுது நம்முடைய ஹேர் ட்ரீட்மென்ட் செய்வதற்குரிய தண்ணீர் தயாராகிவிட்டது. இந்த தண்ணீரை தலையில் தேய்த்து அரை மணி நேரம் நன்றாக ஊற வைத்து பிறகு எப்போதும் போல் தலைக்கு குளித்து விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் முடி உதிர்தல் பிரச்சனை என்பது சுத்தமாக நின்றுவிடும். அதே சமயம் முடி வளர்ச்சியையும் தூண்டி முடி அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும். இதோடு மட்டுமல்லாமல் சிறு குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய இளநரை பிரச்சினையும் இதை தேய்ப்பதால் குறைய ஆரம்பிக்கும். இந்த தண்ணீரை ஒரு நாள் விட்டு ஒரு நாளோ அல்லது வாரத்திற்கு இரண்டு முறையோ நம்முடைய முடி உதிர்தலுக்கு ஏற்றவாறு பயன்படுத்த வேண்டும்.
மேலும் அன்றன்றைக்கு புதிதாக தயார் செய்து தான் இந்த தண்ணீரை உபயோகப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் முழு பலனும் பெற முடியும். ஒரு முறை தயார் செய்து வைத்துக் கொண்டு அதை ஃப்ரிட்ஜில் வைத்து மற்றொரு நாள் உபயோகப்படுத்தலாம் என்று நினைத்தால் அதனால் பலன் என்பது குறைவாக தான் கிடைக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இதையும் படிக்கலாமே: சுருக்கம் நீங்கி இளமையான முகத்தோற்றம் பெற ஃபேஸ் பேக்.
அன்றைய காலத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய இந்த அரிசி கலைந்த தண்ணீரையும், சின்ன வெங்காயத்தையும் நாமும் பயன்படுத்தி நம்முடைய முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்.