தலைபாரம் நீங்க புத்துணர்ச்சி பெற எளிமையாக மசாலா டீ இப்படித் தான் போடணுமா? ஒருமுறை குடிச்சா அப்படி ஒரு ஃபீல் இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க!

masala-tea
- Advertisement -

சதா வேலை, வேலை என்று அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு எப்போதும் தலை பாரம் தொடர்ந்து கொண்டே இருக்கும் ஒரு தீராத பிரச்சனையாக இருக்கும். இல்லத்தரசிகளாக இருந்தாலும் பம்பரம் போல் சுழன்று வேலை செய்யும் பெண்களுக்கு இந்த தலைபாரம் நீங்குவதில்லை. தலையில் ஏதோ ஒரு சுமையை சுமப்பது போல உங்களுக்கு தோன்றினால் டக்குனு இது போல ஒரு டீ போட்டு குடிச்சிடுங்க! வந்த துன்பம் எல்லாம் மாயமாய் மறைந்தது போல் ஒரு உணர்வை கொடுக்கும், இந்த அற்புதமான மசாலா டீ ரொம்பவே எளிமையாக எப்படி போட்டு குடிப்பது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் கற்றுக் கொள்ள இருக்கிறோம்.

மன பாரம், தலை பாரம், உளைச்சல், இறுக்கம் போன்ற எல்லாவற்றையும் சுக்குநூறாக்கி உங்களுடைய மனதை இறகு போல மென்மையாக்கி, பட்டாம்பூச்சி போல பறக்க செய்யக்கூடிய இந்த அற்புதமான மூலிகை டீ ரொம்பவே எளிமையாக வீட்டிலேயே நாமும் தயாரிக்கலாம். ஒரு சில குறிப்பிட்ட பொருட்களை சேர்த்து முறையாக இப்படி டீ போட்டு குடித்தால் நமக்கு யாருடைய அட்வைசும் தேவைப்படாது! நாம் வேண்டுமானால் 10 பேருக்கு அட்வைஸ் கூறலாம். அந்த அளவிற்கு நம்முடைய மனமும், உடலும் ஆரோக்கியம் பெறும்.

- Advertisement -

மசாலா டீ செய்ய தேவையான பொருட்கள்:
சூடான கெட்டியான பால் – முக்கால் டம்ளர், தண்ணீர் – 2 டம்ளர், தேயிலை தூள் – ஒரு டீஸ்பூன், சர்க்கரை – 2 டீஸ்பூன், ஏலக்காய் – 5, கிராம்பு – 3, பட்டை – ஒரு துண்டு, இஞ்சி – இரண்டு இன்ச், புதினா இலைகள் – நான்கு, துளசி இலை – 2.

மசாலா டீ செய்முறை விளக்கம்:
மசாலா டீ செய்வதற்கு முதலில் தேவையான அளவிற்கு பாலை தண்ணீர் எதுவும் சேர்க்காமல் கெட்டியாக கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். பின் 2 தம்ளர் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் வைத்து நன்கு கொதிக்க விடுங்கள். அதில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு தேயிலைத் தூளை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். 2 டம்ளர் தண்ணீர் என்பதால் 2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொள்ளுங்கள். இதை இரண்டு பேர் பருகும் அளவிற்கு செய்கிறோம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

- Advertisement -

உங்களுடைய எண்ணிக்கைக்கு ஏற்ப நீங்கள் பொருட்களையும் அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். இதை செய்து முடிப்பதற்குள் ஒரு சிறிய உரல் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் முதலில் ஏலக்காய்களைப் போட்டு நன்கு இடித்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் மசாலா வாசனை வருவதற்கு ஒரு துண்டு பட்டை, 3 கிராம்பு போட்டு இடித்துக் கொள்ளுங்கள். நான்கைந்து புதினா இலைகள் மற்றும் துளசி இலைகளை சேர்த்து நசுக்கிய பின்பு, 2 இன்ச் அளவிற்கு தோலுரித்து சுத்தம் செய்த இஞ்சி துண்டுகளை சேர்த்து நன்கு நைஸாக இடித்துக் கொள்ள வேண்டும்.

பின்பு இவற்றை டீ கொதித்துக் கொண்டிருக்கும் தண்ணீருடன் சேர்த்து கலந்து விடுங்கள். பின்பு கெட்டியான சூடான பால் முக்கால் டம்ளர் அளவிற்கு சேர்த்து கொதிக்க விடுங்கள். டீ இப்போது மசாலாவுடன் சேர்த்து நுரைக்க பொங்கி பொங்கி வர வேண்டும். 2 டம்ளர் அளவிற்கு டீ சுண்டி வந்ததும் அடுப்பை அணைத்து சுடச்சுட கப்பில் ஊற்றி பரிமாறவும். இந்த மசாலா டீ நல்ல ஒரு நோய் எதிர்ப்பு சக்தியை நமக்குக் கொடுக்கும் அற்புதமான ஆற்றல் படைத்தது, எனவே அடிக்கடி செஞ்சு சாப்பிடுங்க.

- Advertisement -