பெண்கள் தினமும் இந்த பொடியை சாப்பிட்டு வந்தால், அவர்களுக்கு பிறக்கப் போகும் குழந்தைக்கு கூட இரும்பு சத்து குறைபாடு வராது, முடியும் கொட்டாது, பார்த்துக்கோங்க.

keerai-podi
- Advertisement -

பெரும்பாலும் இன்றைய சூழ்நிலையில் நிறைய பெண்களுக்கு உடம்பில் ஊட்டச்சத்து குறைபாடு இருக்கிறது. இதில் அவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டால், அந்த குழந்தைக்கு ஊட்டச்சத்து குறைபாடு வந்து விடுகிறது. தாய்க்கு தேவையான ஊட்டச்சத்தே கிடைக்கவில்லை எனும் பட்சத்தில் அந்த பிள்ளைக்கு எப்படி ஊட்டச்சத்து நிறைவாக கிடைக்கும். ஆகவே பெண் குழந்தைகள் எப்போதும் வலிமையோடு இருக்க வேண்டும். அதற்காக அவர்களுடைய உணவு பழக்க வழக்கங்களில் நாம் சில நல்ல விஷயங்களை தினம் தோறும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இரும்புச்சத்து அதிகம் நிறைந்தது முருங்கைக்கீரை. முருங்கைக் கீரையை தினமும் பொரியல் கூட்டு என்று செய்து குழந்தைகளுக்கு கொடுக்க முடியாது என்றால் இப்படி பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும் ஒரு டேபிள் ஸ்பூன் இந்த பொடியை சாப்பிட்டில் சேர்த்து வந்தால் கூட உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும்.

சுவையான சுலபமான முருங்கைக்கீரை பொடி அரைப்பது எப்படி. 2 கைப்பிடி அளவு சுத்தமான முருங்கைக்கீரை நமக்கு தேவை. முருங்கைக் கீரையை உருவி தண்ணீரில் அலசி ஒரு வெள்ளைத் துணியில் காய வைத்து ஈரம் இல்லாத முருங்கைக் கீரையை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். அதில் கடலைப்பருப்பு 1 டேபிள் ஸ்பூன், உளுந்தம் பருப்பு 1 டேபிள் ஸ்பூன், வேர்கடலை 2 டேபிள் ஸ்பூன், சீரகம் 1 ஸ்பூன், மிளகு 1/2 ஸ்பூன், வர மல்லி 1/2 ஸ்பூன், வர மிளகாய் 6, பூண்டு பல் 4, எள்ளு 1 டேபிள் ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு எண்ணெய் ஊற்றாமல் மணக்க மணக்க பொன்னிறம் வரும் வரை வாசம் வரும் வரை வறுத்து ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக ஒரு ஓட்டு ஓட்டிக் கொள்ளுங்கள். (புளிப்பு சுவை உங்களுக்கு பிடிக்கும் என்றால் இதில் சிறிய நெல்லிக்காய் அளவு புளியையும் சேர்த்து வறுத்துக் கொள்ளலாம்.)

அடுத்து தயாராக எடுத்து வைத்திருக்கும் முருங்கைக் கீரையை கடாயில் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். முருங்கைக் கீரையில் இருக்கக்கூடிய தண்ணீர் அனைத்தும் நீங்க வேண்டும். அந்த பச்சை நிறம் லேசாக மாறி கொஞ்சம் மொறுமொறுப்பு தன்மை வந்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த முருங்கைக் கீரையை ஆற வைத்து அப்படியே மிக்ஸி ஜாரில் ஏற்கனவே நாம் பொடி செய்து வைத்திருக்கின்றோம் அல்லவா, அந்த பொடியோடு சேர்த்து இரண்டு ஓட்டு ஓட்டினால், சூப்பரான முருங்கைக்கீரை பொடி தயார்.

- Advertisement -

இதை ரொம்பவும் நைசாக அரைக்க கூடாது. இட்லி பொடி போல கொஞ்சமாக கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதை இட்லி பொடி போலவே நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு கலந்து இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிடலாம். (இந்த பொடியை பாட்டிலில் ஸ்டோர் செய்து பிரிட்ஜிலேயே வைத்துக் கொள்ளுங்கள்.)

இதில் வெரைட்டி ரைஸ் கூட செய்யலாம். கொஞ்சம் சாதத்தை ஆற வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் சின்ன தாளிப்பு கரண்டியில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரிப் பருப்பு, வர மிளகாய், கருவேப்பிலை, தாளித்து இதில் இரண்டு ஸ்பூன் அரைத்து வைத்திருக்கும் முருங்கைக்கீரை பொடியை போட்டு இதை உடனடியாக ஆற வைத்திருக்கும் சாதத்தில் கொட்டி புளிசாதம் லெமன் சாதம் போல நன்றாக கலந்து விடுங்கள். தேவைப்பட்டால் இரண்டு சிட்டிகை உப்பை தூவி கலந்து அப்படியே லஞ்ச் பாக்ஸில் போட்டு கொடுத்தால் அருமையான சுவை இருக்கும்.

- Advertisement -