காரசாரமான பூண்டு சட்னி 10 நிமிஷத்துல இப்படி செஞ்சா 10 இட்லி கூட பத்தாம போய்விடும்!

poondu-chutney
- Advertisement -

விதவிதமான சட்னி வகைகளில் பூண்டு சட்னி ரொம்பவே ஆரோக்கியம் மிகுந்ததாக கருதப்படுகிறது. பூண்டு வாசனை பிடிக்காதவர்கள் இது போல சட்னி செய்து சாப்பிடும் பொழுது ரொம்பவே விரும்பி சாப்பிட்டு விடுவார்கள். இதனால் ஆரோக்கியம் வலுபெறும். வயது தொடர்பான பிரச்சினைகள் இருப்போர் அடிக்கடி பூண்டு சட்னி சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும். பூண்டில் இருக்கும் மருத்துவ குணங்கள் உடலில் வாய்வு சேராமல் பாதுகாக்கும்.

மேலும் தொடர் இருமல், மார் சளியை கூட நீக்கும் என்பதால் அடிக்கடி இதனை சாப்பிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இந்த பூண்டு சட்னி நிச்சயம் இருக்கும். இட்லி, தோசை, அடை, உப்புமா என்று எல்லாவற்றுக்கும் தொட்டுக் கொள்ள காரசாரமான, சுவையான ஆரோக்கியம் உள்ள பூண்டு சட்னி எளிய முறையில் நம் வீட்டு சமையல் அறையில் எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்கு போகலாம்.

- Advertisement -

பூண்டு சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
பெரிய பூண்டு – 12 பற்கள், பெரிய தக்காளி – 2, மிளகாய் வற்றல் – 4, கல் உப்பு – தேவையான அளவுக்கு, தாளிக்க: சமையல் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், கருவேப்பிலை – ஒரு இணுக்கு.

பூண்டு சட்னி செய்முறை விளக்கம்:
பூண்டு சட்னி செய்வதற்கு முதலில் பூண்டு பற்களை தோலுரித்து வைத்துக் கொள்ளுங்கள். சட்னி செய்யும் பொழுது பூண்டு பற்களை பெரிய பற்களாக எடுத்துக் கொள்வது நல்லது. பின்னர் தேவையான காய்கறிகளை நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். முதலில் அதில் கொஞ்சம் எண்ணெய் விட்டு மிளகாய் வற்றலை போட்டு லேசாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இந்த மிளகாய் வற்றலை போட்டு ஆற வைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் தோல் உரித்து வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இவற்றுடன் சுத்தம் செய்து பொடிப் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி துண்டுகளை சேர்க்க வேண்டும். இந்த சட்னிக்கு தேவையான அளவிற்கு கல் உப்பு சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பில் மிளகாய் வற்றலை வறுத்து எடுத்த அதே வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு கொள்ளுங்கள்.

எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு நன்கு பொரிந்ததும் கருவேப்பிலை இலைகளை உருவி கழுவிக் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்பு அத்துடன் நீங்கள் அரைத்து வைத்துள்ள இந்த சட்னியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். சட்னி சேர்த்து வதக்கும் பொழுது அடுப்பை மீடியமாக வைத்து கொள்ளுங்கள். பூண்டு மற்றும் தக்காளி உடைய பச்சை வாசம் போக நீங்கள் நன்கு வதக்க வேண்டும். எண்ணெய் தெளிந்து சட்னியின் பச்சை வாசம் போக சுவையானதொரு பூண்டு சட்னி தயார். பூண்டு சட்னி இதே முறையில் நீங்களும் ஒரு முறை செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -