காலை நேர புதுமையான பிரேக்பாஸ்ட் வேண்டுமா? ஆரோக்கியமும், சுவையும் அள்ளிக் கொடுக்கும் இந்த சிகப்பு அவல் கிச்சடி இப்படி செஞ்சு பாருங்க இனி அடிக்கடி இதைத்தான் செய்வீங்க!

sigappu-aval-kichadi
- Advertisement -

சிகப்பு அவலில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. இதை எல்லா வகைகளிலும் நம்மால் எடுத்துக் கொள்ள முடியாவிட்டாலும், இது போல சமையலில் சிறிது சிறிதாக சேர்த்து அடிக்கடி சாப்பிடுவது ரொம்பவே நல்லது. அதில் சிகப்பு அவல் கொண்டு செய்யப்படும் இந்த கிச்சடி ரொம்பவே சுவையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கப் போகிறது. அருமையான சிகப்பு நிற அவல் கிச்சடி எளிமையாக எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

சிகப்பு அவல் கிச்சடி செய்ய தேவையான பொருட்கள்:
சிகப்பு அவல் – அரை கப், பெரிய வெங்காயம் – ஒன்று, தக்காளி – ஒன்று, தேங்காய் பால் – ஒரு கப், வேர்க்கடலை – ஒரு டேபிள் ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, சமையல் எண்ணெய் – 2 டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி தழை – சிறிதளவு ,நறுக்கிய கருவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவைக்கு ஏற்ப.

- Advertisement -

சிகப்பு அவல் கிச்சடி செய்முறை விளக்கம்:
முதலில் கெட்டியான சிகப்பு அவல் அரை கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு முறை கழுவி தண்ணீரை வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கப் அளவிற்கு கெட்டியான தேங்காய் பால் எடுக்க வேண்டும். இதற்கு தேவையான தேங்காய் துண்டுகளை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து பால் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த தேங்காய் பாலுடன் கழுவிய சிகப்பு அவலை சேர்த்து நன்கு ஊற விட்டு விட வேண்டும். பால் முழுவதுமாக உறியும் வரை ஊற விடுங்கள். கொஞ்ச நேரத்திலேயே அவல் முழுவதுமாக பாலை உறிந்து கொள்ளும்.

பின் தேவையான மற்ற பொருட்களை நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் காய்ந்த மிளகாய் நான்கை சேர்த்து லேசாக சூடு பறக்க வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். காய்ந்த மிளகாய் கருகி விடக்கூடாது. பின்னர் அதே வாணலியில் வேர்க்கடலையை சேர்த்து லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். இவை இரண்டையும் மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். தனி தனியாக அரைப்பதும் நல்லது தான். பின்னர் வாணலியில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு சூடேற்றுங்கள்.

- Advertisement -

எண்ணெய் காய்ந்ததும் சீரகம் போட்டு தாளிக்க வேண்டும். பின்னர் தோலுரித்து பொடி பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதம் வர நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கி வந்ததும், தக்காளி துண்டுகளை சேர்த்து நன்கு வதக்குங்கள். வெங்காயம் மற்றும் தக்காளி இரண்டும் வசிய வதங்கியதும் தேங்காய் பாலில் ஊற வைத்துள்ள சிகப்பு அவலை அப்படியே சேர்த்து ஒரு முறை நன்கு கலந்து விடுங்கள்.

பின்னர் இதற்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து பிரட்டிய பின்பு, பொடித்து வைத்துள்ள வேர்க்கடலை தூள் மற்றும் மிளகாய் தூள் ஆகியவற்றை தூவி நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி தழை, கருவேப்பிலை ஆகியவற்றையும் சேர்த்து ஒரு முறை நன்கு கிண்டி விட்டு, அடுப்பை அணைத்து விடுங்கள். தேங்காய் பால் சேர்த்து ஊற வைத்துள்ளதால் இந்த சிகப்பு அவல் கிச்சடி ஆரோக்கியமும், சுவையையும் கூடுதலாகவே கொடுக்கும். நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி அசத்துங்க.

- Advertisement -