முடியை வலுவாக்கும் தேங்காய் எண்ணெய்

hair oil strong hair
- Advertisement -

ஒருவருக்கு எந்த அளவுக்கு அவருடைய உடல் வலுவாக இருக்க வேண்டுமோ அதே அளவிற்கு அவருடைய தலை முடியும் வலுவாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் முடி உதிர்தல் பிரச்சனை என்பது வராது. அதோடு முடி ஆரோக்கியமாக இருப்பதன் மூலம் முடியில் பிளவு ஏற்படுவது என்பது தடுக்கப்படும். மேலும் எந்தவிதமான முடி தொடர்பான பிரச்சனைகளும் ஏற்படாது. இப்படி முடி தொடர்பான பிரச்சனைகள் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்கு முடியை வலுவாக்குவதற்கு வீட்டிலேயே தயாரிக்க கூடிய ஒரு தேங்காய் எண்ணெயை பற்றி இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்ப்போம்.

பொதுவாக பல பொருட்களை பயன்படுத்தி பல விதங்களில் தேங்காய் எண்ணெய்களை வீட்டிலேயே தயார் செய்யும் நபர்கள் பலர் இருக்கிறார்கள். இன்னும் சிலரோ கடைகளில் இருந்து தேங்காய் எண்ணையை வாங்கி உபயோகப்படுத்துவார்கள். எதுவாக இருந்தாலும் நம்முடைய தலைமுடிக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய தேங்காய் எண்ணையாக பார்த்து பயன்படுத்துவது தான் மிகவும் நன்மையை தரும். அந்த வகையில் இன்று நாம் தேங்காய் எண்ணெய் தயார் செய்வது பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த தேங்காய் எண்ணையை தயார் செய்வதற்கு சுத்தமான மரச்செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் வேண்டும். இதோடு நெல்லிக்காய், கருவேப்பிலை மற்றும் வெந்தயம் இவை மூன்றும் வேண்டும். இந்த எண்ணெயை தயார் செய்வதற்கு நமக்கு அடுப்போ, மிக்சியோ எதுவும் தேவையில்லை. இரண்டு நெல்லிக்காய்களை கழுவி ஈரமில்லாமல் துடைத்துவிட்டு அதை கேரட் உரசுவது போல் நன்றாக பொடியாக உரசிக்கொள்ள வேண்டும். உரசிய இந்த நெல்லிக்காயை ஒரு தட்டில் பரப்பி வெயிலில் நன்றாக காய வைக்க வேண்டும்.

இதே போல் மற்றொரு தட்டில் சுத்தமான கருவேப்பிலையை உருவி அதையும் வெயிலில் காய வைக்க வேண்டும். இதே போல் வெந்தயத்தையும் வெயிலில் காய வைத்துக் கொள்ளுங்கள். இது வெயில் காலம் என்பதால் வெப்பத்தின் காரணமாக இரண்டு நாட்களிலேயே இவை அனைத்தும் நன்றாக காய்ந்து விடும். இது நன்றாக காய்ந்த பிறகு இடி கல்லை பயன்படுத்தி இவை அனைத்தையும் தனித்தனியாக இடித்துக் கொள்ள வேண்டும். மிக்ஸி ஜாரை பயன்படுத்தாமல் இடிகல்லை பயன்படுத்துவது அதன் சத்துக்கள் குறையாமல் பார்த்துக் கொள்ள உதவும்.

- Advertisement -

இப்படி இடிகல்லை பயன்படுத்தி மூன்றையும் தனித்தனியாக இடித்து வைத்த பிறகு மூன்றிலும் இருந்து ஒரு ஸ்பூன் என்ற வீதம் ஒரு கண்ணாடி பவுலில் இந்த மூன்று பொருட்களையும் போட்டு இதனுடன் ஒரு கப் அளவிற்கு தேங்காய் எண்ணெயை ஊற்ற வேண்டும். அதாவது 100 எம்எல். பிறகு ஒரு காட்டன் துணியை அந்த கண்ணாடி பவுலின் மேல் போட்டு நன்றாக கட்டிவிட வேண்டும். பிறகு இந்த எண்ணையை அப்படியே வெயிலில் வைத்து விட வேண்டும். நன்றாக வெயில் அடித்தால் இரண்டு நாட்கள் போதும். வெயில் சற்று குறைவாக இருக்கும் பட்சத்தில் மூன்றிலிருந்து நான்கு நாட்களாவது வெயிலில் வைக்க வேண்டும்.

எண்ணெய் பச்சை நிறமாக மாறிவிட்டால் அதுதான் சரியான பதம். நன்றாக பச்சை நிறமாக எண்ணெய் மாறிய பிறகு வெயிலிலிருந்து எடுத்துவிட்டு தலைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படி தேங்காய் எண்ணெய் தயார் செய்வதன் மூலம் கருவேப்பிலை, வெந்தயம் மற்றும் நெல்லிக்காயில் இருக்கக்கூடிய சத்துக்கள் எந்த விதத்திலும் குறையாமல் இருக்கும். இதனால் நம்முடைய தலைமுடி விரைவிலேயே வலுப்பெறும்.

இதையும் படிக்கலாமே: பொடுகு தொல்லையை நீக்க உதவும் எண்ணெய்
அடுப்பு, மிக்சி என்று எதையும் பயன்படுத்தாமல் சூரிய வெப்பத்திலேயே அனைத்தையும் நாம் தயார் செய்வதன் மூலம் சத்துக்கள் குறையாமல் ஆரோக்கியமான எண்ணெயை தயார் செய்ய முடியும்.

- Advertisement -