பருப்புப்பொடி பிரியர்களா நீங்க? மணக்க மணக்க ஹோட்டல் சுவையில் சூப்பரான பருப்பு பொடி அரைப்பது எப்படி?

paruppu-podi
- Advertisement -

சில ஹோட்டல்களில், குறிப்பாக ஆந்திரா பக்கம் பருப்புப்பொடி பிரபல்யமாக கிடைக்கும். சிலருக்கு இந்த பருப்பு பொடி ரொம்ப ரொம்ப பிடிக்கும். பருப்பு பொடியை இன்னும் இன்னும் சாப்பிட வேண்டுமென்று தோன்றும். ஹோட்டலில் கிடைக்கும் அதே சுவையில் ஒரு பருப்புப் பொடியை நம்முடைய வீட்டில் எப்படி அரைப்பது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தான் தெரிந்து கொள்ள போகிறோம். இந்த பருப்பு பொடியை அரைத்து பாட்டிலில் போட்டு வைத்து கொள்ளுங்கள். தினமும் சுடச்சுட சாதத்தில் 1 ஸ்பூன் போட்டு நெய் விட்டு அல்லது நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். இதில் பருப்பு வகைகளை சேர்த்து இருப்பதால் உடலுக்கு ஆரோக்கியம் தரும் ரெசிபியும் கூட.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் துவரம் பருப்பு -5 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு – 3 டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு – 3 டேபிள்ஸ்பூன், பாசிப்பருப்பு – 3 டேபிள்ஸ்பூன், முதலில் இந்த நான்கு பருப்பு வகைகளையும் போட்டு மிதமான தீயில் முக்கால் பாகம் வறுத்துக் கொள்ள வேண்டும். பருப்பு நன்றாக வறுபட்டு வாசம் வரும் போது இறக்குவதற்கு ஒரு நிமிடம் முன்பு பொட்டுக்கடலை – 3 டேபிள்ஸ்பூன் சேர்த்து நன்றாக வறுத்து இந்த எல்லா பருப்பு வகைகளையும் தனியாக ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்தபடியாக அதே கடாயில் மிளகு – 1 டேபிள்ஸ்பூன், சீரகம் – 2 டேபிள்ஸ்பூன், வெள்ளை எள்ளு – 3 டேபிள்ஸ்பூன், இந்த மூன்று பொருட்களையும் போட்டு எள்ளு வெடித்து வரும் அளவிற்கு வறுத்து இதையும் அப்படியே பருப்பு வகைகளுடன் கொட்டி ஆற வைத்துவிடுங்கள்.

அடுத்தபடியாக அதே கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் சிறிய துண்டு கட்டி பெருங்காயம் – 2 போட்டு நன்றாகப் பொரிய விடுங்கள். அதன் பின்பு தோல் உரித்த பூண்டு பல் – 10, வரமிளகாய் – 5, சேர்த்து இந்த எல்லா பொருட்களையும் நன்றாக வறுத்துக் கொள்ளுங்கள். இதையும் வறுத்து வைத்திருக்கும் பருப்பு வகைகளோடு ஒன்றாகக் கொட்டி ஆற வைத்துவிடுங்கள். (தேவைப்பட்டால் வரமிளகாயை நீங்கள் அதிகமாக வைத்துக் கொள்ளலாம்.)

- Advertisement -

அடுத்தபடியாக அதே கடாயில் தேவையான அளவு கல்லுப்பு, 2 அல்லது 3 கொத்து கறிவேப்பிலை போட்டு கருவேப்பிலை மொறுமொறுப்பாக வரும் வரை வறுத்து அடுப்பை அணைத்து விடுங்கள். இப்போது வருத்த இந்த பொருட்களையும், வறுத்த பருப்பு வகைகளோடு கொட்டி நன்றாக ஆற வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது எல்லாம் மசாலாப் பொருட்களும் வறுத்து ஆற வைத்து தயாராக உள்ளது. இதை அப்படியே மிக்சி ஜாரில் போட்டு, நைசாக பொடி போல அரைத்துக் கொள்ளுங்கள். இந்தப்பொடி நறநறப்பாக இருக்கக்கூடாது. எவ்வளவு நைசாக அரைக்க முடியுமோ அவ்வளவு நைசாக அரைத்துக்கொள்ளுங்கள்.

அரைக்கும் போது இந்த பொடி லேசாக சூடாகும். நைசாக அரைத்த பின்பு, பொடியை ஒரு தட்டில் கொட்டி நன்றாக ஆற ஆற வைத்து ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மாதம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.  சுடச்சுட சாதத்தில் ஒரு ஸ்பூன் போட்டு, நெய் அல்லது நல்லெண்ணை ஊற்றி ருசித்துப்பாருங்கள். அத்தனை அருமையாக இருக்கும்.

- Advertisement -