ஹோட்டலில் சோலா பூரி சென்னா மசாலா சாப்பிட்டதுண்டா? அதே போல நம்ம வீட்டிலேயும் ‘சுவையான சென்னா மசாலா’ சுலபமாக எப்படி செய்யலாம்?

- Advertisement -

ஹோட்டலில் பூரி, சோலா பூரி போன்றவற்றிற்கு தொட்டுக் கொள்ள அட்டகாசமான சென்னா மசாலா கிரேவியாக வைத்துக் கொடுப்பார்கள். பார்க்கும் பொழுதே நாவில் ஜலம் ஊற செய்யும் அந்த அட்டகாசமான சென்னா மசாலா நம் வீட்டிலும் அதே சுவையில் எளிதாக செய்து விடலாம். பூரிக்கு மட்டுமல்லாமல் சப்பாத்திக்கு கூட சூப்பரான காம்பினேஷன் ஆக இருக்கும் இந்த சென்னா மசாலா ஹோட்டல் சுவையில் எப்படி செய்வது? என்பதை கற்றுக் கொள்ள இந்த பதிவை பின் தொடர்வோம்.

சென்னா மசாலா செய்ய தேவையான பொருட்கள்:
வெள்ளை மூக்கடலை – கால் கிலோ, முந்திரி பருப்பு – 5, தேங்காய்த் துருவல் – 3 டேபிள்ஸ்பூன், பூண்டு பற்கள் – 10, இஞ்சி – இரண்டு இன்ச், வெண்ணை – ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், பட்டை – 2, பிரிஞ்சி இலை – 1, கிராம்பு – 3, சோம்பு – அரை ஸ்பூன், ஏலக்காய் – 3, பெரிய வெங்காயம் – 2, இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன், மல்லித் தூள் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, தக்காளி – நான்கு, மல்லித்தழை – சிறிதளவு, தயிர் – 2 டேபிள் ஸ்பூன், வெல்லம் – ஒரு துண்டு.

- Advertisement -

சென்னா மசாலா செய்முறை விளக்கம்:
கால்கிலோ மூக்கடலையை முந்தைய நாள் இரவே தண்ணீர் ஊற்றி நன்கு ஊற வைத்து விடுங்கள். மூக்கடலை குறைந்தது 8 மணி நேரம் ஊறி இருந்தால் தான் சீக்கிரம் வேகும். ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் முழு முந்திரிப் பருப்பு 5 சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் 3 டேபிள்ஸ்பூன் அளவிற்கு தேங்காய் துருவல் சேருங்கள். 10 பூண்டு பற்களை தோல் உரித்து சேர்த்துக் கொள்ளுங்கள். ரெண்டு இன்ச் அளவிற்கு இஞ்சியை சேருங்கள். இந்த எல்லா பொருட்களையும் சேர்த்து நன்கு நைசாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். குக்கரில் மூக்கடலையை போட்டு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி தேவையான அளவிற்கு உப்பு போட்டு 3 விசில் விட்டு எடுங்கள்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு குக்கரை வைத்துக் கொள்ளுங்கள். அதில் வெண்ணெய் சேர்த்து செய்தால் ஹோட்டலில் செய்தது போலவே சுவை அபாரமாக இருக்கும். எனவே ஒரு டீஸ்பூன் அளவிற்கு வெண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் தேவையான அளவிற்கு நல்லெண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, சோம்பு, ஏலக்காய் ஆகியவற்றை தாளித்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் ரெண்டு பெரிய வெங்காயத்தை மிக்ஸியில் அரைத்து சேருங்கள். அரைத்து சேர்க்கும் பொழுது சென்னா மசாலா கிரேவி ஆக நமக்கு கிடைக்கும். தக்காளியையும் அதே போல அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். வெங்காயம் நன்கு பச்சை வாசம் போக வதக்க வேண்டும். பின்னர் அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்குங்கள். வாசத்திற்கு இரண்டு பச்சை மிளகாய்களை அப்படியே சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது மசாலாக்களை சேர்க்க வேண்டும். வெறும் மிளகாய்த்தூள், மல்லித்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்குங்கள்.

பின்னர் மசாலாவிற்கு தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது அரைத்து வைத்துள்ள தக்காளி பேஸ்ட்டையும் சேர்த்து நன்கு வதக்குங்கள். இப்போது வேக வைத்த மூக்கடலைகளை மட்டும் எடுத்து சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன் ஒரு துண்டு வெல்லம், 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பிறகு மூக்கடலை வேக வைத்த தண்ணீரை தேவைக்கு ஏற்ப சேர்த்து குக்கரை மூடி 2 விசில் விட்டு எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் நறுக்கிய மல்லித்தழை தூவி சுடச்சுட சப்பாத்தி அல்லது பூரி உடன் பரிமாற வேண்டியது தான். ரொம்பவே சுலபமாக செய்யக்கூடிய இந்த ஹோட்டல் சுவை தரும் சென்னா மசாலா வீட்டிலேயே நீங்களும் இதே மாதிரி செய்து அசத்துங்கள்.

- Advertisement -