மாம்பழ சீசன் துவங்கி விட்டது! கெமிக்கல் இல்லாத இயற்கையான மாம்பழங்களை கண்டறிவது எப்படி? இத தெரிஞ்சுக்காம மாம்பழம் வாங்காதீங்க!

- Advertisement -

மாம்பழம் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது? குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மிகவும் விரும்பி சாப்பிடும் இந்த மாம்பழம் முக்கனிகளில் ஒன்றாக இருக்கிறது. மாம்பழத்தின் சுவையை ருசித்தவர்களுக்கு வேறு பழத்தின் சுவை அவ்வளவு எளிதாக நாவில் ஒட்டுவதில்லை. இத்தகு சிறப்பு மிகுந்த மாம்பழம் சீசன் துவங்கி விட்டது. முந்தைய காலத்தை போல இயற்கையாக மரத்திலேயே பழுக்கப்பட்ட மாம்பழங்கள் இப்போது விற்பனைக்கு வருவது கணிசமாக குறைந்துவிட்டது. கார்பைடு கற்கள் கொண்டு செயற்கையாக பழுக்க வைத்து விற்பனைக்கு வரக்கூடிய மாம்பழங்களை சாப்பிட்டால் புற்றுநோய் கூட வரக்கூடும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

விவசாயிகள் தோட்டத்திலிருந்து மாம்பழங்களைப் பறித்து கொடுப்பது வரை இயற்கையாக இருக்கும் மாம்பழங்கள் இடைத்தரகர்களிடம் சென்றதும் செயற்கையாக பழுக்க வைத்து அதன் இயற்கைத் தன்மையை முற்றிலும் சீரழித்து பின் மக்களிடம் எந்த சுவையும் இன்றி விற்பனைக்கு வருகிறது. இதிலிருந்து எப்படி இயற்கையாகப் பழுக்கப்பட்ட மாம்பழங்களை நாம் கண்டறிவது? மாங்காய்களை எப்படி இயற்கையாக மாம்பழங்களாக பழுக்க வைப்பது? என்பது போன்ற முக்கிய தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

- Advertisement -

கொத்துக் கொத்தாக மாம்பழங்களைப் பறித்து ஓரிடத்தில் வைத்து அதன் மீது எத்திலீன் மற்றும் கார்பைடு கற்களை கொண்டு மூடப்படுகிறது. இதனால் உருவாகக்கூடிய ஒரு வகையான வாயு வெகுவிரைவில் மாங்காய்களை மாம்பழங்களாக பழுக்க வைத்து விடுகிறது. இத்தகைய மாம்பழங்களை கண்டறிவது ரொம்பவே சுலபம் தான். இயற்கையாக பழுக்கப்பட்ட மாம்பழங்கள் ஒரே மாதிரியான நிறங்களில் கட்டாயம் இருப்பதில்லை! ஓரிடத்தில் ஒரு நிறத்திலும், இன்னொரு இடத்தில் வேறு ஒரு நிறத்திலும் இருக்கும். குறிப்பாக அதனுடைய காம்பு பகுதிகளில் நிற மாற்றம் நிச்சயம் இருக்கும். எந்த விதமான நிற மாற்றமும் இல்லாமல் ஒரே மாதிரியான நிறம் கொண்டுள்ள மாம்பழங்கள் இந்த முறையில் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

மக்கள் ரொம்பவும் பளபளப்பாக பளிச்சென மாம்பழங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். இதனால் செயற்கையை நாடி செல்ல வேண்டிய கட்டாயத்தில் வியாபாரிகள் இருக்கின்றனர். இயற்கையாகப் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் புள்ளிகள் மற்றும் அழுக்குகள், ஆங்காங்கே நிற மாற்றங்களுடன் தான் இருக்க செய்யும் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட இத்தகைய மாம்பழங்களை நாம் தோலுடன் சாப்பிடும் பொழுது வயிற்று உபாதைகள், தோல் பிரச்சினைகள், புற்று நோய் போன்றவையும் ஏற்படும் அபாயம் உண்டு.

- Advertisement -

செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் ருசியும் குறைவாகத் தான் இருக்கும். இதை வாங்கி வந்தால் அதை நன்கு சுடு தண்ணீரில் கழுவி தோலை நீக்கிவிட்டு உள்ளே இருக்கும் மாம்பழத்தை மட்டும் சாப்பிடுவது மிகவும் நல்லது. இதை விட நல்ல மாம்பழங்களை காயாக இருந்தாலும் வாங்கி வந்து அதை தார்ப்பாயில் அடுக்கி வைத்து அதன் மீது வைக்கோலை சிறிதளவு போட்டு வைத்தால் கொஞ்ச நாட்களிலேயே அது இயற்கையாக பழுத்து விடும்.

மாம்பழத்துடன் வேப்பிலை போட்டு வைப்பது, ஆவார இலை போட்டு வைப்பதும் இயற்கையாக பழுக்க வைக்கும். மிகவும் பழமையான முறையில் அரிசியில் போட்டு வைத்தாலும் மாம்பழங்கள் விரைவாக பழுத்துவிடும். இயற்கையான முறையில் பழுக்க வைக்கப்பட்ட ஆரோக்கியமான மாம்பழங்களை இந்த சம்மர் சீசனில் நாமும் ருசித்து விடுவோம்.

- Advertisement -