நாம் வாங்கும் பட்டுப்புடவை அசல் காஞ்சிபுரம் பட்டு தானா? அந்த பட்டுப் புடவை ஜரிகையில், தங்கமும் வெள்ளியும் இருக்குதா? இல்லை வெறும் செம்புதானா? இதை எப்படி கண்டுபிடிப்பது?

women1
- Advertisement -

இன்றைய காலகட்டத்தில் தங்கம் எது. டூப்ளிகெட் எது, என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு நகைகள் வந்துவிட்டது. அதேபோல தான் பட்டு சேலைகளும். எது அசல் பட்டு. எது டூப்ளிகேட் பட்டு என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு போலி புடவைகள் சந்தைகளில் வலம் வருகிறது. அதிக அளவில் காசு கொடுத்து பட்டுப்புடவையை வாங்கி இருப்போம். அது அசல் பட்டு என்று நம்பி வாங்கி இருப்போம். ஆனால் போகப் போக அதனுடைய நிறம் மங்கி போய் இருக்கும். அந்தப் பட்டுப்புடவை ஒரு சில நாட்களில் ரொம்பவும் பழையதாகி, பட்டு புடவைகளை மாற்றும்போது தான் நமக்கு தெரியும் இது அசல் பட்டு அல்ல. நிறைய காசு கொடுத்து ஏமாந்து போலி பட்டுப் புடவையை எடுத்து இருக்கிறோம் என்று. இந்த பட்டு புடவையை வாங்கும்போதே அசல் காஞ்சி பட்டு எது. டுப்ளிகேட் பட்டு எது என்று எப்படி தெரிந்து கொள்வது. நீங்க போலியான பட்டை வாங்கி ஏமாறக்கூடாது என்றால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறலாம்.

பட்டு புடவை வாங்கும் போது, அசல் பட்டு நூலை கண்டுபிடிப்பது எப்படி?
முதல் விஷயமாக முத்திரைகளை வைத்து நாம் எடுக்கக்கூடிய புடவை அசல் பட்டு நூலால் நெய்யப்பட்ட புடவை என்பதை உறுதி செய்து கொள்ளலாம். முத்திரைகளிலும் இரண்டு வகை இருக்கிறது. ‘சில்க் மார்க்’ முத்திரை இருக்கும். புடவையில் உள்ள ஜரிகளுக்கு தனியாக ஒரு சர்டிபிகேட் கொடுப்பாங்க.

- Advertisement -

இந்த சில்க் மார்க் முத்திரை என்பது பட்டுப் புடவையில் இருக்கும் நூல் இழையைக் குறிக்கிறது. அதை தான் ‘silk’ என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். இது அசல் பட்டு நூலால், பட்டுப் பூச்சியில் இருந்து எடுக்கப்பட்ட நூலால், நெய்யப்பட்ட புடவை தான் என்பதை அந்த சில்க் மார்க் முத்திரை ஊர்ஜிதப்படுத்திவிடும்.

புடவையில் ஜரிகை இருக்கும் அல்லவா. அந்த பார்டர், முந்தானையில் இருக்கும் ஜரிகையில் போடப்பட்டிருக்கும், ஜரி, அசல் ஜரிகைதானா என்பதை ஒரு சர்டிபிகேட் உறுதிப்படுத்தும். இதுதான் பட்டுப்புடவையில் கொடுக்கப்படும் இரண்டாவது முத்திரை. (இந்த ஜரிகைக்கு தான் காசு. பழைய பட்டுப் புடவையை விற்கும் போது இந்த ஜரிகையின் வேல்யூவை வைத்தது தான், நமக்கு பணம் கொடுப்பார்கள்.)

- Advertisement -

இந்த பட்டு நூல் ஒரிஜினல் தான் என்பதை உறுதி செய்துகொள்ள இன்னொரு வழியும் இருக்கிறது. கொஞ்சமாக அந்த பட்டு நூலை புடவையின் முனையிலிருந்து  வெட்டி எடுத்து, நெருப்பில் பொசுக்கிப் பார்த்தால் அது உடனடியாக சாம்பல் ஆகிவிடும். அதுவே அந்த நூல் சாம்பல் ஆகாமல் மெழுகு போல உருகி, ஒரு பிளாஸ்டிக் ஒயரை பற்ற வைத்தது போல வாசம் வீசி, பிசுபிசுப்பு தன்மையோடு இருந்தால் அது அசல் பட்டு நூல் அல்ல என்பதையும் நாம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். அந்தப் பட்டுப் புடவையில் வேறு ஏதோ மெட்டீரியல் கலந்த நூலால் நெய்திருக்கிறார்கள் என்பதை அடித்து சொல்லிவிடலாம்.

பட்டு புடவையில் இருக்கும் ஜரிகை அசல் ஜரிகையா என எப்படி கண்டுபிடிப்பது?
இந்த ஜரிகைகளில் இரண்டு வகை ஜரிகை உள்ளது. அசல் காஞ்சி பட்டு புடவையில் இருப்பது ‘பியூர் ஜரி(pure zari)’. அதற்கு அடுத்த தரத்தில் விற்கக் கூடிய ஜரியை டெஸ்டேட் சரி (tested zari) என்று சொல்கிறோம். அசலான காஞ்சிபுரம் பட்டு புடவை என்றால் வெள்ளி கம்பிகளில், மேலே தங்க முலாம் பூசப்பட்டு நெய்யப்படும். இதைதான் அசல் பட்டி(pure zari) என்று சொல்லுவார்கள்.

- Advertisement -

புடவையில் இருக்கும் ஜரிகை ஒரிஜினலா என்பதை கண்டுபிடிக்க தனியாக ஒரு அட்டை கொடுப்பாங்க. அதில் உங்கள் புடவையில் உள்ள ஜரியில் எவ்வளவு வெள்ளி இருக்கிறது. எவ்வளவு தங்கம் இருக்கிறது என்று கொடுக்கப்பட்டிருக்கும். (ஜரிகை என்றால் என்ன என்பது உங்களுக்கு தெரியும் அல்லவா. பட்டுப்புடவையில் இருக்கும் பார்டரில் உள்ள ஜரிகை, முந்தானையில் உள்ள ஜரிகை. இவை எல்லாம் வெள்ளி கலந்த ஜரிகையில் நெய்யப்பட்டிருக்கும்.) இப்படி வெள்ளியும் தங்கமும் சேர்ந்து நெய்யப்பட்ட ஜரிகையைக் கொண்ட புடவையை தான் அசல் பட்டுப்புடவை என்று நாம் சொல்கின்றோம்.

கடைக்கு போய் பட்டு புடவை வாங்குறீங்க. அதில் முந்தானியில் குஞ்சம் போடுவதற்கு நூல் நூலாக இருக்கும் அல்லவா. அந்த முந்தானையில் குஞ்சம் போட்டு இருக்காது. நூல் நூலாகத்தான் இருக்கும். அதிலிருந்து ஒரு ஜரிகை நூலை எடுத்து கையால் உறுவி பார்க்க வேண்டும். அப்படி உறுதி பார்க்கும் போது உள்ளே இருக்கும் ஜரிகை வெள்ளி நிறத்தில் இருந்தால், அது அசல் வெள்ளி ஜரிகையால் நெய்யப்பட்ட புடவை என்பதை உறுதி செய்து கொள்ளலாம். அதுவே அந்த நூலை உருவி பார்க்கும்போது உள்ளே காப்பர் நிறத்தில் தெரிந்தால், அது செம்பு கலக்கப்பட்டு இருக்கிறது என்று அர்த்தம். இன்னும் சில புடவைகளில் அது சிவப்பு நிறத்தில் இருக்கும் அது இன்னும் இன்னும் டூப்ளிகேட் என்று அர்த்தம்.  (நல்லா தெரிஞ்சுக்கோங்க. பள பளன்னு இருக்கும் ஜரிகையை தான் உருவி பார்க்க வேண்டும். புடவையில் இருக்கும் பட்டு நூலை அல்ல.)

ஜரிகையை உருவி பார்க்கும்போது செம்பு நிறத்தில் வந்தால் அதை தான், tested zari என்று சொல்லுகிறார்கள். இது இரண்டாவது தரத்தில் உள்ள புடவை. இது அசல் காஞ்சி பட்டு கிடையாது. இதை கண்டுபிடிக்க இன்னொரு வழியும் இருக்குது. கருப்பு நிறத்தில் கடப்பா கல் போல ஒரு சின்ன கல் எடுத்துக்கணும். அதில் புடவையின் பார்டரை(ஜரிகை உள்ள பகுதியை) வைத்து தேய்த்து பார்க்க வேண்டும். தேய்க்கும்போது கல்லில் வெள்ளை நிறத்தில் வந்தால் அது அசல் பட்டு. அதுவே தேய்க்கும்போது செம்பு நிறத்தில் வந்தால் அது காப்பர் கலக்கப்பட்ட பட்டு என்பது குறிப்பிடத்தக்கது. சில புடவைகளை எடுத்து தேய்த்து பார்த்தால் எதுவுமே வராது அது சாதாரண புடவை இது மூன்றாவது தரம், நான்காவது தரத்திற்கு செல்கிறது.

இனிமே கடைக்கு போய் விலை உயர்ந்த பட்டுப்புடவை, அசல் பட்டுப்புடவை, காஞ்சி பட்டு புடவை, வாங்க போறீங்க என்றால், கடைக்காரரிடம் இது பியூர் ஜரியில் நெய்யப்பட்ட புடவையா, அல்லது டெஸ்டட் ஜரியில் நெய்யப்பட்ட புடவையா என்ற கேள்வியை எழுப்புங்கள். அவரே புரிந்து கொள்வார் உங்களுக்கு விவரம் தெரிந்திருக்கிறது. உங்களை ஏமாற்ற முடியாது என்று.

அந்த காலத்தில் நம்முடைய பாட்டி கல்யாணத்திற்கு வாங்கிய அசல் பட்டு புடவையில், இந்த வெள்ளி அதிகமாக கலந்த ஜரிகை நூலால் நெய்யப்பட்டிருக்கும். நம்முடைய அம்மா காலத்தில் வாங்கிய பட்டுப்புடவையில் வெள்ளியில் கொஞ்சம் கலப்படம் இருந்தது. ஆனால் இப்போது வாங்க கூடிய பட்டுப்புடவைகளில் 30% இலிருந்து 40% வரை வெள்ளி கலந்து இருந்தால் அதுவே மிகப்பெரிய விஷயம்.

நம்முடைய பட்டுப் புடவையில் இருக்கும் ஜரிகையின் தரம் எந்த அளவுக்கு உயர்ந்தது என்பதை தெரிந்து கொள்ள, அதை சோதனை செய்வதற்கு 70 ரூபாயிலிருந்து 80 ரூபாய் வரை செலவாகும். காஞ்சிபுரத்திலும் அசல் பட்டு ஜரிகைகளை சோதனை செய்வதற்கு சில கடைகள் இருக்கிறது. சென்னையிலும் சில கடைகள் இருக்கிறது. விசாரித்து பார்த்தாலே அது உங்களுக்கு தெரிந்து விடும்.

இதையும் படிக்கலாமே: எந்த ஒரு காஸ்லியான கண்டிஷனரும் போடாமல் உங்கள் முடியை சில்கியாக ஷைனிங்காக மாற்ற செலவே இல்லாத சிம்பிள் ஐடியா இது.

அசல் காஞ்சிபுரம் பட்டு என்றால் ரொம்பவும் மெலிசாக மூன்று இன்ச் பார்டரில் pure zari யால் நெய்யப்பட்ட புடவைகளை 8000 முதல் 10 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. அதுவே tested zari யாக இருந்தால் 3000 ரூபாய்க்குள் நமக்கு அந்த புடவைகள் கிடைத்து விடும். இப்படி புடவைகளின் தரம் மாறி மாறி கடைகளில் கிடைக்கின்றது. கல்யாணத்துக்கோ அல்லது வேறு ஏதாவது விசேஷத்திற்கோ அசல் பட்டுப்புடவை வாங்க வேண்டும். ஆனால் அதில் கலப்படமே இருக்கக் கூடாது என்றால் அதற்காக நீங்கள் காஞ்சிபுரத்தில் இருக்கும் கைத்தறி நெசவாளர்களை தான் தேடிச் செல்ல வேண்டும். ஒரு அசல் காஞ்சி பட்டு புடவையை நெய்வதற்கு பத்திலிருந்து பதினைந்து நாட்கள் எடுக்கும் என்று சொல்கிறார்கள். அதற்கு ஒரு குடும்பமே ஒட்டுமொத்தமாக சேர்ந்து தங்களுடைய உழைப்பை முதலீடாக போடுகிறது. அசல் பட்டுக்கு எதற்காக இவ்வளவு விலை என்பது உங்களுக்கு புரிகிறதா. இனி டூப்ளிகேட் பட்டுப்புடவையை நம்பி யாரும் ஏமாற மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -