12 கப் அரிசிக்கு, 1 கப் உளுந்து சேர்த்தால் போதும். இட்லி மல்லிகைப்பூ மாதிரி வெள்ளை வெள்ளையா அவ்வளவு சாப்டா கிடைக்கும். இந்த ஐடியா மட்டும் உங்களுக்கு தெரிஞ்சா.

soft-idli-batter
- Advertisement -

விதவிதமாக ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு மாதிரி இட்லிக்கு மாவு அரைத்து இட்லி சுட்டு எடுப்பாங்க. இட்லிக்கு மாவு அரைப்பதிலும் பல வகைகள் உண்டு. பல பொருட்களை சேர்த்து அரைக்கலாம். இன்று வெந்தயம் சேர்க்காமல், அவல் சேர்க்காமல், வெறும் ரேஷன் புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுந்து சேர்த்து சூப்பரான இட்லி மாவு அரைப்பது எப்படி என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்கின்றோம். இந்த மூன்று பொருட்கள் அல்லாமல் இதில் இன்னொரு ஸ்பெஷலான பொருளையும் சேர்க்கப் போகின்றோம். அதனால் தான் உளுந்தை இவ்வளவு குறைந்த அளவு சேர்க்கும் போதும், நமக்கு சூப்பரான புசுபுசுன்னு இட்லி கிடைக்கப்போகிறது. அந்த ஒரு பொருள் என்ன. அதை எந்த அளவில் இந்த இட்லி மாவுடன் சேர்த்து அரைக்க வேண்டும். குறிப்பை படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

முதலில் ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 8 டம்ளர் ரேஷன் புழுங்கல் அரிசி, 4 டம்ளர் பச்சரிசி, எடுத்துக்கோங்க. மொத்தமாக 12 டம்ளர் கணக்கு வந்துவிட்டது. எந்த டம்ளரில் அரிசியை அளந்து எடுத்தீங்களோ, அதே டம்ளரில் 1 டம்ளர் அளவு உளுந்தையும் அளந்து எடுத்துக் கொள்ளுங்கள். அரிசி உளுந்து இரண்டையும் தனித்தனி பாத்திரத்தில் போட்டு நன்றாக கழுவி விட்டு, நல்ல தண்ணீரை ஊற்றி குறைந்தது 5 மணி நேரமாவது ஊற வைக்க வேண்டும்.

- Advertisement -

அதன் பின்பு முதலில் கிரைண்டரில் உளுந்தை போட்டு ஆட்ட வேண்டும். அதாவது 5 மணி நேரம் கழித்து உளுந்தை முதலில் கிரைண்டரில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து உளுந்தை பொங்க பொங்க ஆட்டி எடுக்க வேண்டும். (உளுந்து அரைக்கும் போது முதல் 10 நிமிடம் நீங்கள் உளுந்துடனே நிற்க வேண்டும். முதல் 10 நிமிடத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து ஆட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.) பிறகு ஒரு 15 நிமிடம் உளுந்து அப்படியே அரைபடட்டும் கிரைண்டருக்கு மூடி போட்டு விட்டு விடுங்கள். இந்த மெத்தடுக்கு உளுந்தை ரொம்பவும் கட்டியாக ஆட்டி எடுக்காதீங்க. ஓரளவுக்கு தண்ணீர் விட்டு புசுபுசுன்னு ஆட்டி எடுத்துக்கோங்க.

அதன் பிறகு நீங்கள் ஊற வைத்திருக்கும் இந்த அரிசியை கிரைண்டரில் போட்டு ஆட்டி எடுக்க வேண்டும். அரிசியை போடுவதற்கு முன்பு கிரைண்டரில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி விடுங்கள். வெறும் அரிசியை போட்டால் மாவு கிரைண்டரில் சிக்கிக் கொள்ளும். சில சமயம் கிரைண்டர் ஓடாமல் நிற்க கூட வாய்ப்பு உள்ளது. அதனால் தான். அரிசியை போட்டுவிட்டு நாம் எடுத்திருக்கும் இந்த 12 டம்ளர் அரிசிக்கு இரண்டு கை அளவு ‘வடித்த சாதத்தை’ இதோடு சேர்க்க வேண்டும். அதாவது வேக வைத்த சாதம். குக்கரில் வேகவைத்த சாதமாக இருந்தாலும் சரி, குண்டானில் வேக வைத்த சாதமாக இருந்தாலும் சரி. பழைய சாதத்தை சேர்க்காதீங்க. அன்றைக்கு வடித்த சாதத்தை சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த அரிசி மாவு ரவை பதத்தை விட கொஞ்சம் நைசாக அரைபட வேண்டும். ரவை பதத்திற்கு கொரகொரப்பாகவும் ஆட்டி எடுக்காதீங்க. ரொம்பவும் மொழுமொழுன்னும் மாவை அரைத்து விடக்கூடாது. நைஸ் ரவை போல இந்த அரிசி மாவை ஆட்டி உளுந்தோடு சேர்த்து, மாவை உப்பு போட்டு நன்றாக கரைத்து மூடி வைத்து விடுங்கள். 6 மணி நேரத்தில் இருந்து 7 மணி நேரம் வரைக்கும் இந்த மாவு புளித்த பின்பு இதில் இட்லியை வார்க்கலாம்.

மாவை நன்றாக கலந்து எடுத்து எப்போதும் போல இட்லியை வார்த்து வேகவைத்து எடுத்துப் பாருங்கள். நீங்கள் செய்யக்கூடிய இட்லியை விட இந்த இட்லி வெள்ளையாக கிடைக்கும். மிக மிக சாஃப்ட்டாவும் கிடைக்கும். எப்போதுமே அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு அதன் பின்பு தான் இட்லி தட்டுகளை அடுக்க வேண்டும். அதை கவனம் வைத்துக் கொள்ளுங்கள்.

சாதம் கொஞ்சம் அதிகமாக சேர்த்து விட்டீர்கள் என்றால், தோசை வார்க்கும் போது, தோசை சரியாக வராது. ஆகவே சாதம் சேர்க்கும்போதும் கவனம் தேவை. இரண்டு கை அளவு மட்டும் சாதம் சேர்த்து அரைத்தால் போதும். சோடா உப்பு சேர்க்காமல், வெந்தயம் சேர்க்காமல், இந்த வடித்த சாதத்தை சேர்த்து இட்லி மாவு அரைக்கும் போது அவ்வளவு சூப்பரான இட்லி, வெள்ளை வெளேர் என உங்களுக்கு கிடைக்கும் என்றால் பாருங்கள். ரேஷன் புழுங்கல் அரிசிதான் பயன்படுத்த வேண்டும் என்று அவசியம் கிடையாது. இட்லி அரிசி கூட நீங்கள் இதில் சேர்த்துக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம் தான். மேலே சொன்ன அளவுகளில் ஒரு முறை மாவை ஆட்டி பாருங்க. சூப்பரான மல்லிகை பூ மாதிரி இட்லி உங்க வீட்டிலயும் கிடைக்கும்.

- Advertisement -