1 கப் இட்லி மாவு இருந்தா போதும். கண்ணை மூடிகிட்டு இந்த வடையை சுட்டு எடுக்கலாமே! உளுந்து வடையை விட இந்த வடையின் டேஸ்ட் சும்மா சூப்பரா மொறுமொறுன்னு இருக்கும்.

methu-vadai_tamil
- Advertisement -

சில பேருக்கு மெதுவடை என்றால் ரொம்பவும் பிடிக்கும். ஆனால் உளுந்து ஊற வைத்து மாவு ஆட்டி மெதுவடை செய்ய சோம்பேறித்தனம் பட்டுக்கொண்டு கடையில் வாங்கி சாப்பிடுவார்கள். ஆனால் 1 கப் இட்லி மாவு இருந்தால், சூப்பரான மெதுவடை நம் வீட்டிலேயே எளிமையாக செய்யலாம். ஈவினிங் குழந்தைகள் பள்ளிக்கூடம் விட்டு வரும்போது இந்த வடையை செய்து கொடுங்கள். விருப்பமாக சாப்பிடுவார்கள். இட்லி மாவில் எளிமையான முறையில் சுவையான வடை செய்வது எப்படி.

செய்முறை

ஒரு நாள் புளித்த இட்லி மாவை இந்த வடை செய்ய பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதிகமாக புளித்த இட்லி மாவில் இந்த வடையை செய்யக்கூடாது. இட்லி மாவு 1 கப் அளவு எடுத்துக் கொள்ளுங்கள். எடுத்த இட்லி மாவை ஒரு கடாயில் ஊற்றுங்கள். அதே 1 கப் அளவு தண்ணீரையும் அந்த இட்லி மாவில் ஊற்றி நன்றாக கலந்து, அதன் பின்பு இந்த கடாயை அடுப்பில் வைத்து சூடு செய்யுங்கள்.

- Advertisement -

மாவு ஒரு கொதி வந்து கட்டியாகும் சமயத்தில் 1/4 கப் அளவு அரிசி மாவு போட்டு, அடுப்பை உடனடியாக சிம்மில் வைத்து, கைவிடாமல் கட்டி படாமல் கலக்க வேண்டும். மாவு வெந்து கட்டியாக கிடைத்து விடும். (இட்லி மாவில் ஏற்கனவே உப்பு சேர்த்திருப்போம் அதனால், இந்த இடத்தில் கொஞ்சமாக அரிசி மாவுக்கு, ஊற்றிய தண்ணீருக்கு மட்டும் பாதி அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.)

கொழுக்கட்டைக்கு மேல் மாவு வைப்போம் அல்லவா. அந்த பதத்திற்கு மாவு வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு, இதில் மிளகு – 10, சீரகம் – 1/2 ஸ்பூன், இஞ்சி துருவல் – 1/2 ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 கைப்பிடி அளவு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 1, பொடியாக நறுக்கிய கருவேப்பிலை கொத்தமல்லி தழைகளை போட்டு, ஒரு கரண்டியை வைத்து மாவை நன்றாக கலந்து விடுங்கள். மாவு கை பொறுக்கும் சூடு வந்தவுடன் உங்கள் கையை கொண்டே மாவை பிசைந்து தயார் செய்து கொள்ளலாம்.

- Advertisement -

இந்த மாவை தேவையான அளவு சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து உங்களுடைய உள்ளங்கையில் வைத்து தட்டி ஓட்டை போட்டு மெதுவடை போலவே விடலாம். வடைக்கு அரைக்கும் உளுந்த மாவை விட இந்த மாவு கட்டியாக தான் இருக்கும். சுலபமாக எடுத்து சுலபமாக தட்டி எண்ணெயில் விடலாம். கையில் மாவு ஒட்டாமல் இருக்க கொஞ்சம் கையில் தண்ணீரை நனைத்து கொள்ளுங்கள்.

ஒரு கடாயில் வடையை பொறித்து எடுப்பதற்கு தேவையான எண்ணெயை ஊற்றி, சூடான பின்பு தட்டி வைத்திருக்கும் இந்த வடைகளை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறம் வரும் வரை பொறித்து எடுத்தால், சூப்பரான வடை தயார். மிதமான தீயில் வடையை பொறித்து எடுங்கள். அப்போதுதான் உள்ளே நன்றாக வெந்து மொறு பொறுப்பாக கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: கேரளா மாம்பழ புளிசேரி செய்முறை

ரொம்ப ரொம்ப சிம்பிள் ரெசிபி. ஈவினிங் டீ குடிக்கும் போது ஆளுக்கு இரண்டு வடை கொடுத்தால் போதும் வயிறு நிறைவாக இருக்கும். அவசர தேவைக்கு கூட இனிமேல் கடைக்கு போய் வடை வாங்க வேண்டாம். வீட்டிற்கு விருந்தாளிகள் எதிர்பாராமல் வந்து விட்டால் கூட இந்த வடை ரெசிபி உங்களுக்கு கை கொடுக்கும்.

- Advertisement -