‘இட்லி பொடி உப்புமா’ இப்படி ஒருமுறை செஞ்சு பாருங்க இனி காலையில் சுட்ட இட்லி, மாலை வரை காய்ந்து போனால் கூட தூக்கி போட மாட்டீங்க!

idli-podi-uppuma
- Advertisement -

காலையில் எழுந்ததும் பெரும்பாலும் நாம் செய்யும் ஒரு வழக்கமான டிஷ் இட்லி! இந்த இட்லி சில சமயங்களில் அதிகமாக சுட்டு வைத்து விடுவோம். அதை சாப்பிட ஆள் இருக்காது. இப்படி காலையில் சுட்ட இட்லி மீந்து போனால் மாலை வரை காய்ந்து கொண்டே இருக்கும். அதன் பிறகு அதை சாப்பிட முடியாமல் போய்விடும், நமக்கு சாப்பிடவும் பிடிக்காது எனவே இது போல மீந்து போன இட்லிகளை வீணாக்காமல் இட்லி பொடி சேர்த்து தாளித்து எப்படி சுவையான இட்லி பொடி உப்புமா செய்வது? என்பதைத் தான் இந்த பதிவில் இனி பார்க்க இருக்கிறோம்.

இட்லி பொடி உப்புமா செய்ய தேவையான பொருட்கள்:
வீட்டில் செய்த இட்லி பொடி – சிறிதளவு, வேக வைத்த இட்லி மீந்தது – பத்து, சமையல் எண்ணெய் – தேவையான அளவு, கடுகு – ஒரு டீஸ்பூன், உளுந்து – ஒரு டீஸ்பூன், பெரிய வெங்காயம் – ரெண்டு, பச்சை மிளகாய் – 3, இஞ்சி – சிறு துண்டு, கருவேப்பிலை கொத்து – சிறிதளவு.

- Advertisement -

இட்லி பொடி உப்புமா செய்முறை விளக்கம்:
முதலில் உங்களிடம் இருக்கும் மீந்து போன இட்லியை நன்கு உதிர்த்து வைத்துக் கொள்ளுங்கள். ரொம்பவும் கட்டிகள் இல்லாமல் உதிரியான ரவை உப்புமா போல உதிர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். வெங்காயத்தை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பச்சை மிளகாய் இஞ்சி ஆகியவற்றையும் பொடியாக நறுக்கி வையுங்கள்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி நன்கு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் அடுப்பை மீடியம் ஃபிளேமில் வைத்துக் கொண்டு கடுகு போட்டு தாளித்துக் கொள்ளுங்கள். கடுகு தாளித்ததும் உளுந்தம் பருப்பு போட்டு பொன்னிறமாக சிவக்க வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கொத்து கருவேப்பிலையை கழுவி உருவி சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பிறகு பொடிப்பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சேர்த்து வதக்கி விடுங்கள். பின்னர் பொடிப்பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக நன்கு வதங்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் நீங்கள் உதிர்த்து வைத்துள்ள இட்லி உப்புமாவை சேர்த்து நன்கு பிரட்டி விடுங்கள். ஓரளவுக்கு நன்கு பிரட்டியதும் அதில் நீங்கள் வீட்டில் தயாரித்து வைத்துள்ள இட்லி பொடியை தேவைக்கு ஏற்ப தூவி கொள்ள வேண்டும். பிறகு ஒரு முறை நன்றாக கிளறி கொள்ளுங்கள். அவ்வளவுதான் அடுப்பை அணைத்து சுடச்சுட பரிமாற வேண்டியதுதான்.

சூப்பரான டேஸ்டில் இருக்கக் கூடிய இந்த இட்லி பொடி உப்புமா அனைவரையும் கவர்ந்து இழுத்து விடும். அந்த அளவிற்கு சுவையாக இருக்கும் இதில் உப்பு சேர்க்கப்படவில்லை! ஏனென்றால் இட்லியில் ஏற்கனவே உப்பு இருக்கும். அது போல இட்லி பொடியிலும் உப்பு சேர்த்து சிலர் செய்வது உண்டு. எனவே உப்பை நீங்கள் போட வேண்டிய அவசியம் இல்லை. இட்லி மீந்து போனா இனி தூக்கி போடாதீங்க, டேஸ்டா இது மாதிரி செஞ்சு கொடுத்து நீங்களும் சாப்பிட்டு மகிழலாமே!

- Advertisement -