வரும் விநாயகர் சதுர்த்தி அன்று இனிப்பு பிடி கொழுக்கட்டை இப்படி செய்து பாருங்கள். கடையில் வாங்கிய மாவில் செய்தாலும் அவ்வளவு சாஃப்டா வரும்.

kozhukattai
- Advertisement -

வரக்கூடிய விநாயகர் சதுர்த்தி அன்று கட்டாயமாக எல்லோர் வீட்டிலும் பிள்ளையாருக்காக கொழுக்கட்டை பிரசாதமாக செய்வோம். சில பேர் வீடுகளில் பூரண கொழுக்கட்டை செய்வார்கள். சில பேர் வீடுகளில் பிடி கொழுக்கட்டை செய்வார்கள். இன்று இந்த குறிப்பில் நாம் பிடி கொழுக்கட்டை எப்படி செய்வது என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகின்றோம். கடையில் வாங்கிய வருத்த பச்சரிசி மாவில் இந்த கொழுக்கட்டை செய்தாலும் சூப்பராக வரும். வீட்டில் நீங்களே பச்சரிசியை வாங்கி சுத்தம் செய்து அறைத்தாலும் அந்த அரிசி மாவை வறுத்து விட்டு இந்த பிடி கொழுக்கட்டை செய்யலாம். சில பேர் கொழுக்கட்டை மாவையே கடையிலிருந்து வாங்குவார்கள். இப்படி எந்த மாவிலும் இந்த கொழுக்கட்டை செய்யலாம்.

குறிப்பை பார்க்கலாம் வாங்க. முதலில் இதற்கு தேவையான பொருட்களை பார்த்து விடுவோம். வறுத்த அரிசி மாவு – 1 கப், வெல்லம் – 3/4 கப், தண்ணீர் – 1 கப், நெய் – 1 ஸ்பூன், வறுத்த எள்ளு – 1 ஸ்பூன், தேங்காய் துருவல் – 3 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் தூள் – 1/2 ஸ்பூன். (அரிசி மாவு, கிராம் கணக்கில் பார்த்தால் 125 கிராம் அரிசி மாவு எடுத்துக் கொண்டால் சரியாக இருக்கும். உங்களுக்கு கூடுதலான இனிப்பு சுவை பிடிக்கும் என்றால் 1 கப் அரிசி மாவுக்கு 1 கப் வெல்லம் கூட சேர்த்துக் கொள்ளலாம்.)

- Advertisement -

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து 3/4 கப் அளவுள்ள வெல்லத்தைப் போட்டு, 1 கப் அளவு தண்ணீரை ஊற்றி வெல்லத்தை தண்ணீரில் நன்றாக கரைத்து வடிகட்டி மீண்டும் கடாயில் அந்த வெல்லக் கரைசலை ஊற்றி கொதிக்க வையுங்கள். வெல்ல்த்தில் தூசி இருந்தால் கூட நீங்கிவிடும். இப்போது கடாயில் கொதிக்கின்ற வெல்லத் தண்ணீரில் நெய், வறுத்த எள்ளு, தேங்காய் துருவல், ஏலக்காய் தூள், இந்த பொருட்களை எல்லாம் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

வெல்லம் 2 நிமிடம் போல கொதித்து, வெல்லத்தின் பச்சை வாடை நீங்கிய பின்பு, எடுத்து வைத்திருக்கும் அரிசி மாவை வெல்லக் கரைசலில் கொட்டி, கட்டி விழாமல் கலக்க வேண்டும். கரண்டியை கடாயின் நடுப்பகுதியில் வைத்து, வட்ட வடிவில் மாவை கலந்து விட்டால், அரிசி மாவு கட்டி பிடிக்காது. பிறகு எல்லா மாவையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். 3 லிருந்து 5 நிமிடத்திற்குள் எல்லா மாவும் வெல்லத்தோடு ஒட்டிப் பிடித்து சூப்பராக கெட்டியாக கிடைத்திருக்கும்.

- Advertisement -

அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த மாவு கொஞ்சம் போல ஆறட்டும். கைப்பொருக்கும் சூடு வந்தவுடன் இந்த மாவை உங்கள் கையை கொண்டு லேசாக பிசைந்து கொடுக்க வேண்டும். மாவு ஒரு துளி கூட கையில் ஒட்டாமல் இருக்கும். அதுதான் கொழுக்கட்டைக்கு சரியான பக்குவம்.

இப்போது இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேவையான தண்ணீரை ஊற்றி கொதிக்க வையுங்கள். இட்லி தட்டில் எண்ணெய் தடவிக் கொள்ளுங்கள். உங்களுடைய கையிலும் கொஞ்சம் எண்ணெய் தடவிக் கொண்டு தயாராக இருக்கும் கொழுக்கட்டை மாவை எடுத்து சிறிய உருண்டை பிடித்து, உள்ளங்கையில் வைத்து அழுத்தி பிடித்தால், பிடி கொழுக்கட்டை தயாராகி இருக்கும். கொழுக்கட்டைகளாக பிடித்த மாவை இட்லி தட்டில் அடுக்கி இட்லி தட்டை ஆவியில் 7 லிருந்து 8 நிமிடங்கள் மிதமான தீயில் வேகவைத்து எடுத்து சுவைத்து பாருங்கள். சூப்பரா இருக்கும்.

பின்குறிப்பு: சில பேர் இந்த கொழுக்கட்டையில் பொட்டுக்கடலை, பாசிப்பருப்பு எல்லாம் சேர்ப்பார்கள். அது அவரவருடைய விருப்பம். மேற்கொண்டு நீங்கள் இந்த கொழுக்கட்டையில் என்ன மாறுதல் செய்ய வேண்டுமோ உங்கள் விருப்பம் போல அந்த மாறுதலை செய்தும் முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -