அங்கன்வாடி சத்துமாவில் இப்படி சுவையான கொழுக்கட்டை செய்து பாருங்கள். நாவில் வைத்த உடனே கரைந்துவிடும் சுவையில் அற்புதமாக இருக்கும்

- Advertisement -

இப்பொழுது நாம் உண்ணும் உணவில் வேதியல் பொருட்கள் அதிகமாக கலந்து இருப்பதால் உடம்புக்கு சத்துள்ளதாக இருப்பதோ என்னமோ தெரியவில்லை. ஆனால் இதன் மூலம் நிறைய வியாதிகள் தான் வருகிறது. எனவே குழந்தைகளுக்கு எந்த உணவு ஆரோக்கியமானதாக இருக்கும் என்று கூட இப்பொழுது நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்பொழுது இதுதான் அனைத்து தாய்மார்களின் கவலையாக இருக்கிறது. ஆனால் பலரும் வேண்டாம் என்று ஒதுக்கி வைக்கும் சில சத்துள்ள உணவுகள் இருக்கத்தான் செய்கின்றன. நாம் தான் அதனை பயன்படுத்த தவறி வருகின்றோம். அவ்வாறு அங்கன்வாடி குழந்தைகளுக்கு கொடுக்கும் சத்து மாவில் உடம்பிற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக இருக்கிறது. இதனை அவர்களுக்கு கஞ்சி காய்ச்சிக் கொடுக்கலாம். இப்படி சத்துமாவு கஞ்சியை விரும்பி உண்ணாத குழந்தைகளுக்கு சுவையான கொழுக்கட்டை செய்தும் கொடுக்கலாம். இவ்வாறு கொழுக்கட்டை செய்து சுடச்சுட கொடுக்கும்பொழுது குழந்தைகள் தட்டாமல் சாப்பிடுவார்கள். வாருங்கள் இந்த சத்து மாவு கொழுக்கட்டையை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
சத்து மாவு – ஒரு கப், தேங்காய் – கால் மூடி, உப்பு – அரை ஸ்பூன், நெய் – ஒரு ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் சத்துமாவு சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு கால் மூடி தேங்காயை பொடியாக நறுக்கி, அதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து துருவிக் கொள்ள வேண்டும்.

பிறகு இந்த தேங்காய் துருவலையும் சத்து மாவுடன் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி, அதனை அடுப்பின் மீது வைத்து சூடுபடுத்த வேண்டும். பிறகு இந்த சுடு தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக மாவுடன் சேர்த்து நன்றாக பிசைந்து கொடுக்க வேண்டும்.

- Advertisement -

சிறிது நேரத்தில் கட்டிகள் இல்லாமல் சத்து மாவினை நன்றாக கொழுக்கட்டை பிடிக்கும் பதத்திற்க்கு பிசைந்து கொள்ள வேண்டும். பிறகு இட்லி தட்டுகளின் மீது நெய் சேர்த்து நன்றாகத் தடவி விட வேண்டும். அதன் பின்னர் இட்லி பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, அதனை அடுப்பின் மீது வைக்க வேண்டும்.

பிறகு மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து கொழுகட்டைப் பிடித்துக் கொண்டு, இட்லி தட்டின் மீது வைக்க வேண்டும். இவ்வாறு பிசைந்து வைத்துள்ள மாவு அனைத்தையும் கொழுக்கட்டைகளாகப் பிடித்து, இட்லி தட்டுகளில் மீது வைத்து, இட்லி தட்டை இட்லி பாத்திரத்தில் வைத்து, மூடி விட வேண்டும். பிறகு 20 நிமிடம் நன்றாக வேகவைக்க வேண்டும். இவ்வாறு கொழுக்கட்டை வேகும் பொழுது அடுப்பை வேகமான தீயில் வைத்திருக்க வேண்டும். அதன் பின்னர் மூடியை திறந்து, கொழுக்கட்டையை வெளியே எடுத்து, குழந்தைகளுக்கு பரிமாறி கொடுத்தால் போதும் விருப்பமாக சாப்பிடுவார்கள்.

- Advertisement -