இந்த இலையில் பெயர், ராசி எழுதினால் கடன் மொத்தமும் விரைவில் தீருமா? கடன் தீர்க்கும் விஷேச இலை!

vilva-leaf-cash

நாம் வேண்டிய வேண்டுதல்களை இறைவனின் காதுகளுக்கு கொண்டு செல்ல ஒவ்வொரு பொருட்களுக்கு சக்தி உண்டு. நம் வேண்டுதல்களை அடிக்கடி நினைவு கூற இறைவனுக்கு இந்த பொருட்கள் நமக்கு உதவி செய்யும். உதாரணத்திற்கு மதுரையில் வீற்றிருக்கும் மீனாட்சி அம்மன் கைகளில் இருக்கும் கிளியை எடுத்துக் கொள்ளலாம். நாம் மீனாட்சி அம்பாளிடம் வைக்கும் கோரிக்கைகளை நமக்காக அந்த கிளி அடிக்கடி அம்மனிடம் நினைவுபடுத்தி விரைவாக நம் கோரிக்கைகளை நிறைவேற்ற செய்யுமாம்! அந்த வரிசையில் இந்த இலைக்கும் நம் வேண்டுதல்களை இறைவனிடம் கொண்டு செல்லும் சக்தி உண்டு. அது என்ன இலை? கடன் நீங்க நாம் அதை என்ன செய்ய வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

sivan

கடன் மட்டுமல்ல! எல்லா விதமான கோரிக்கைகளும் நிறைவேற நம்முடைய ராசி, பெயர், நட்சத்திரத்தை இந்த இலையில் எழுதி வைத்தால் துன்பங்கள் விரைவில் தொலையும் என்பது நியதி. குறிப்பாக தீராத கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் இந்த இலையில் இப்படி செய்யும் பொழுது கடன் தொகைகள் விரைவாக தீர்ந்துவிடும் என்று நம்பப்பட்டு வருகிறது. துளசிக்கு நிகராக இருக்கும் இந்த இலை சிவபெருமானுக்கு உகந்ததாக இருக்கின்றது. குளிர்ச்சி பொருந்திய இவ்விலை தெய்வீக மூலிகை இலை ஆகும்.

தெரிந்தும் தெரியாமலும் இந்த இலையை கொண்டு சிவனுக்கு அர்ச்சனை செய்தால் பெறற்கரிய பேறு கிட்டும். கேட்ட வரமெல்லாம் உடனே கிடைக்கும் என்பது நம்பிக்கை. அத்தகைய மகத்துவம் வாய்ந்த இந்த இலை ‘வில்வ இலை’ என்று கூறப்படுகிறது. சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலையால் திங்கட்கிழமைகளில் சோமவார விரதமிருந்து சிவனுக்கு அர்ச்சித்து வந்தால் வாழ்க்கையில் துன்பங்கள் எதுவுமே நம்மிடம் நெருங்காது.

vilvam

கழுத்தை நெறிக்கும் கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் ஞாயிற்றுக்கிழமையில் வில்வ இலையை பறித்து பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள். சிவபெருமானை வழிபட ஏதுவான நாள் திங்கட்கிழமை ஆகும். திங்கட்கிழமையில் சிவபெருமானை வணங்குபவர்களுக்கு சகலமும் வசமாகும். ஆகவே திங்கட்கிழமை அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்து முடித்துவிட்டு நெற்றி, கை பட்டை என்று உடல் முழுவதும் திருநீறு அணிந்து கொள்ளுங்கள். உங்களுடைய நாவில் சிவநாமத்தை தவிர வேறொன்றும் அன்றைய நாளில் இடம் பெறக்கூடாது.

‘ஓம் நமச்சிவாய’, ‘சிவாய நம ஓம்’ என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை எப்படி வேண்டுமானாலும் நீங்கள் உச்சரிக்கலாம். இந்த மந்திரத்தை பூஜை அறையில் அமர்ந்து 108 முறை உச்சரித்து விட்டு வில்வ இலையில் உங்களுடைய பெயர், உங்களுடைய நட்சத்திரம், உங்களுடைய ராசி ஆகியவற்றை எழுதி சுருட்டி கொள்ளுங்கள். அதனை மஞ்சள் நூல் கொண்டு முடிந்து பூஜை அறையில் வைத்து தியானம் மேற்கொள்ளுங்கள். மனம் ஒருமுகமான நிலையில் உங்களுடைய கடன் தீர வேண்டும், வாழ்வில் இருக்கும் பிரச்சனைகள் அகல வேண்டும் என்று மனதார வேண்டிக்கொள்ளுங்கள்.

lingam-vilva-archanai

இந்த பரிகாரத்தை திங்கட்கிழமையில் வரும் பிரதோஷம் அன்று செய்வது இன்னும் விசேஷமானது. அன்று மாலை சிவன் கோவிலுக்கு சென்று சிவபெருமானுக்கு நடக்கும் பூஜைகளில் கலந்து கொள்ளுங்கள். அங்கிருக்கும் உண்டியலில் இதனை சமர்ப்பித்துவிட்டு சிவபெருமானுக்கு உரிய மந்திரங்களை ஜெபியுங்கள். அங்கிருக்கும் வில்வ மரத்திற்கு கீழே அமர்ந்து பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் வரை கண்களை மூடிக் கொண்டு தியான நிலையில் கடன் தீர பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். உங்களால் முடிந்தால் சிவபெருமானுக்கு நடக்கும் அபிஷேகங்களில் அபிஷேக பொருட்களை வாங்கிக் கொடுங்கள். பின்னர் வீட்டிற்கு வந்து சிவநாமத்தை உச்சரித்துவிட்டு பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். இப்படி தொடர்ந்து ஒன்பது பிரதோஷங்கள் செய்ய கடன் எல்லாம் கட்டாயம் காணாமல் போகும்.