நாவில் எச்சில் ஊரும் சுவையில் அனைவருக்கும் பிடித்த கல்யாண வீட்டு மாங்காய் ஊறுகாயை சுலபமாக வீட்டிலேயும் செய்யலாம்

pickle
- Advertisement -

மாங்காய் ஊறுகாய்  பலவிதமாக செய்யப்படுகிறது. வடுமாங்காய் ஊறுகாய்,  அரிந்த மாங்காய் ஊறுகாய், சீவிய மாங்காய் ஊறுகாய்,  விதவிதமான மாங்காய்களை பயன்படுத்தி வெவ்வேறு விதமான மாங்காய் ஊறுகாய்களை மாங்காய் சீசனில் செய்யலாம். கல்யாண வீடுகளில் செய்யப்படும் மாங்காய் ஊறுகாய் உடனடியாக செய்யப்படுவது. இதனை வெயிலில் காயவைப்பது அல்லது ஊற வைப்பது போன்றவற்றை செய்வதில்லை.  செய்த உடனேயே அடுத்த அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரத்தில் பந்தியில் பரிமாறப்படும்.  கல்யாண பந்தியில் பரிமாறப்படும் அதே சுவையில் மாங்காய் ஊறுகாயை வீட்டிலேயே செய்யலாம். இந்த ஊறுகாய் தயிர் சாதம் தவிர சாம்பார் சாதம், ரசம் சாதம், ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
மாங்காய் – 2, வர மிளகாய் – 30 கிராம், கல்லுப்பு – 2 ஸ்பூன், கடுகு – 2 ஸ்பூன்,
வெந்தயம் – 11/2 ஸ்பூன், சிவப்பு மிளகாய் தூள் – 1  ஸ்பூன், பொடித்த வெல்லம் – 1  ஸ்பூன், நல்லெண்ணெய் – 1/2  கப், கடுகு – 1 ஸ்பூன், கருவேப்பிலை –  சிறிதளவு.

- Advertisement -

செய்முறை:
மாங்காயை தண்ணீரில் கழுவி  சுத்தம் செய்து ஈரம் இல்லாமல் ஒரு துணியால் சுத்தமாக துடைக்க வேண்டும். பின்னர் அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 30 கிராம் மிளகாயை வெயில் நேரத்தில் காயவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியில் 2 ஸ்பூன் கடுகு சேர்த்துக் கொள்ளவும்.

அதனுடன் 1 1/2 ஸ்பூன் வெந்தயம் சேர்த்துக் கொள்ளவும். கடுகு பொரிந்து வெந்தயம் லேசான பொன்னிறமாகும் வரை இவற்றை நன்றாக வறுத்துக் கொள்ளவும். பின்னர் அதனை தனியே எடுத்து வைத்து ஆறவிடவும். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் காய வைத்துள்ள வர மிளகாயை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் இரண்டு ஸ்பூன் கல் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

- Advertisement -

பின்னர் வறுத்து வைத்துள்ள கடுகு மற்றும் வெந்தயத்தை சேர்க்க வேண்டும். பிறகு இவை அனைத்தையும் நைசாக பொடித்துக் கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் 1/2 கப் நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். எண்ணெய் நன்றாக சூடானதும் ஒரு ஸ்பூன் கடுகு சேர்த்து கொள்ளவும். கடுகு பொரிந்ததும் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும். பின்னர் அடுப்பை அனைத்து விட வேண்டும்.

பிறகு இதனுடன் ஒரு ஸ்பூன் சிவப்பு மிளகாய்த்தூள் சேர்க்கவும். அதனுடன் மிளகாய்,  உப்பு,  கடுகு,  வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து அரைத்த பொடியை சேர்க்கவும். நன்றாக கிளறிய பின்னர் பொடியாக நறுக்கி வைத்துள்ள மாங்காயை சேர்த்துக் கொள்ளவும். நன்றாக கிளறவும். பின்னர் ஒரு ஸ்பூன் பொடித்த வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து கலக்கவும். சுவையான உடனடி மாங்காய் ஊறுகாய் தயார்,  அதனை உடனடியாக பரிமாறலாம். அல்லது 4-5 மணி நேரம் கழித்து உப்பு காரம் நன்றாக ஊறிய பின்னர் பரிமாறலாம்.

- Advertisement -