திருமந்திரம், பகவத் கீதை, உபநிடதங்கள், இந்து புராண சாஸ்திரங்கள் போன்ற பலவற்றில் ஒரு மனிதனுக்கு 84 லட்சம் ஜென்மங்கள் அதாவது 8.4 மில்லியன் பிறவிகள் இருக்கிறதாக பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான பிறவி, அதில் மோட்சம் கிடைக்கக்கூடிய ஒரே பிறவி மனித பிறவி தான் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த மனித பிறவி மோட்சம் பெற கர்மம் முடிவடைய வேண்டும். அது எப்போது முடியும்? என்னும் ஆன்மீகம் சார்ந்த தகவல்களை இப்பதிவில் பகிர்ந்து கொள்கிறோம்.
இவ்வளவு பிறவிகளில் கடைசியாக இருப்பது மனிதப்பிறவி என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. இந்த மனிதப் பிறவி கர்மா முடிவடையும் பொழுது மோட்சம் அடைகிறது. மோட்சம் அடைந்த எந்த உயிர்களும் மீண்டும் பிறப்பதில்லை என்று புராணங்கள் கூறுகிறது. மோட்சத்தை பெறுவதற்கு மனிதன் முக்தி அடைய வேண்டும். முத்தி கிட்ட ஞானம் பெற வேண்டும். ஞானம் உண்டாக உலகம் என்பது நிரந்தரமற்ற மாயை என்பதை உணர்ந்து இறைவனின் திருவடியை சேர வேண்டும்.
சங்ககாலத்தில் பூம்புகார் என்னும் அழகிய மாநகரம் இருந்தது. அங்கு கந்தன் என்கிற ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு முருகரை தவிர வேறு எந்த சிந்தனையுமே இருப்பதில்லை. சதா எப்பொழுதும் முருகா… முருகா… என்கிற நாமமே அவனுடைய நாவில் நடனமாடிக் கொண்டிருக்கும். தீவிர முருக பக்தரான இவர், அருகில் இருக்கும் மலைக்கோவில் ஒன்றுக்கு தினமும் சென்று பூக்களை மாலையாக கோர்த்து முருகனுக்கு சாற்றி விட்டு வருவது தான் தினசரி வழக்கம்.
முருகனுக்கு மாலை சாற்ற பூக்களை அவனே காடுகளிலும், தோட்டங்களிலும் சென்று பறித்து வந்து மாலை கோர்த்து கடவுளுக்கு அர்ப்பணிப்பது அவனுக்கு பிடித்த விஷயம். தினமும் இதுபோல செய்து வரும்பொழுது ஒரு நாள் திடீரென கார்மேகம் சூழ்ந்து, பலத்த மழையுடன் புயலும் வீசியது. இதனால் அவன் தன் வேலையை நிறுத்தவில்லை. அவன் தன் வேலையில் எந்த மாற்றமும் இல்லாமல், அதே போல சிரமப்பட்டு காட்டிற்கு சென்று பூக்களை பறித்து வந்து, மாலை கட்டி கோர்த்து அதை கொண்டு போய் முருகனுக்கு சமர்பிக்க செல்கிறான்.
கோவிலை அடைந்ததும் பிரகாரத்திற்குள் நுழைவதற்கு பிரதான கதவு மூடப்பட்டு இருந்தது. இருந்தும் அவன் அசரவில்லை, முருகா என்று சொன்னதும், கதவு தானாகவே திறந்து விட்டது. பின்னர் உள்ளே சென்று முருகனுக்கு மாலையை அணிவித்தான். எந்த சூழ்நிலையிலும் அவன் தன் நிலையை மாற்றிக் கொள்ளாமல், தனக்கு பிடித்த கடவுளுக்கு சேவை செய்வதிலும், பக்தி கொள்வதிலும் எல்லோரையும் மிஞ்சி விட்டான். அதனால் அவன் பக்தியை உணர்ந்த முருகர், நேரில் காட்சி தந்து அருள் புரிந்தார்.
இதையும் படிக்கலாமே:
பிரபஞ்சத்தோடு நட்புறவு வைக்க பரிகாரம்
நம் வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும், எவ்வளவு தடைகள் ஏற்பட்டாலும், நம் பக்தியில் இருந்து சற்று விலகினாலும் நமக்கான கர்மா முடிவதில்லை! முழு பக்தியுடனும், இறைவன் மீது கொண்ட நம்பிக்கையிலும், அன்பிலும் ஈடுபாட்டுடன் இருந்தால் கண்டிப்பாக நமக்கும் முக்தி கிடைக்கும். இதனால் கர்மம் தொடராது, முடிவடைந்து மோட்சம் கிடைக்கும் என்பது தான் இதன் தாத்பரியம் ஆகும். இறைவனை உணரும் வரை கர்மமும் முடிவதில்லை!