கர்ம வினைகளை நீக்கும் முருகன் வழிபாடு

murugan valipadu
- Advertisement -

அறிந்தும் அறியாமலும் நாம் செய்த செயல்களால் நமக்கு பாவங்கள் ஏற்படும். அந்த பாவங்களின் விழைவாக கர்ம வினைகள் என்பது அதிகரிக்கும். அந்த கர்ம வினைகளின் அடிப்படையிலேயே நம்முடைய வாழ்க்கையும் அமையும். ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஏழு பிறவிகள் இருக்கிறது என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு பிறவியிலும் நாம் செய்த பாவங்களின் அடிப்படையில் அடுத்த பிறவியில் நம்முடைய வாழ்வாதாரம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இப்படி எந்த பிறவியில் எந்த பாவங்களை செய்தாலும் எப்பேர்ப்பட்ட கர்மவினைகள் இருந்தாலும் அதை நீக்குவதற்கு முருகப்பெருமானை எப்படி வழிபட வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் அனுபவிக்க கூடிய கஷ்டங்கள் அனைத்திற்கும் அவர்களின் கர்ம வினைகளும், கிரக தோஷங்களும் காரணமாக விளங்குகின்றன. கிரக தோஷங்களும் கர்ம வினைகளின் அடிப்படையில் தான் நிகழ்கிறது என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட நிலையில் நம்முடைய கர்ம வினைகளை நீக்குவதற்கு நாம் தெய்வத்திடம் சரணாகதி அடைவது சிறந்த வழியாக திகழ்கிறது. அதன் அடிப்படையில் முருகப் பெருமானை எப்படி வழிபட வேண்டும் என்று பார்ப்போம்.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை அன்று மாலை 6 மணிக்கு முன்பாகவே அருகில் இருக்கக்கூடிய வள்ளி தெய்வானை சமேத முருக பெருமான் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு இருக்கக்கூடிய முருகனுக்கு முன்பாக அகலில் நெய் தீபம் ஏற்ற வேண்டும். பிறகு அந்த தீபத்தை பார்த்தவாறு அமர்ந்து “ஓம் சரவணபவ” என்னும் மந்திரத்தை மனதிற்குள் கூற வேண்டும். இந்த நெய் தீபமானது குறைந்தது ஒரு மணி நேரமாவது எரிய வேண்டும். அதாவது அந்த தீபத்தை பார்த்து ஒரு மணி நேரம் நாம் ஓம் சரவணபவ என்னும் மந்திரத்தை கூற வேண்டும்.

பிறகு எப்போதும் போல் சுவாமியை வழிபட்டு விட்டு வீட்டிற்கு திரும்பி விடலாம். வேறு எதுவும் செய்ய வேண்டியது இல்லை. இந்த முறையில் வருடத்திற்கு இரண்டு முறை அதாவது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இந்த வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் நம் வாழ்வின் இருக்கக் கூடிய கர்ம வினைகளை நீக்குவதோடு மட்டுமல்லாமல் நம்முடைய பணத் தேவைகளையும் பூர்த்தி செய்வார் முருகப்பெருமான் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அனைத்து முருகன் ஆலயங்களிலும் முருகனுக்கு நேராக தீபம் ஏற்றி வழிபடும் வசதி இருக்காது என்பதால் எந்த ஆலயத்தில் இப்படி இருக்க முடியுமோ அந்த ஆலயத்தில் சென்று வழிபடுவது நல்லது. முருகனுக்கு நேராக தான் தீபத்தை ஏற்றி வைத்து நாமும் அமர்ந்து வழிபட வேண்டும். வேறு எந்த இடத்திலும் தீபத்தை ஏற்றி வைத்து வழிபடக்கூடாது.

மேலும் அந்த ஒரு மணி நேரமும் ஓம் சரவணபவ என்னும் மந்திரத்தை உரைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு உரைக்கும் பொழுது தீபத்தை மட்டுமே தான் பார்க்க வேண்டும். வேறு எதிலும் கவனம் செலுத்தக் கூடாது. மேலும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளும் பொழுது தனிப்பட்ட வகையில் நாம் எந்தவித வேண்டுதலையும் வைக்க தேவையில்லை.

இதையும் படிக்கலாமே: பண தேவையை பூர்த்தி செய்யும் பெருமாள் வழிபாடு

இந்த முறையில் முருகப் பெருமானை நாம் வழிபட்டால் நம் கர்ம வினைகளின் அடிப்படையில் நமக்கு ஏற்படக்கூடிய துன்பங்கள் அனைத்தையும் நீக்கி இன்பமான வாழ்க்கையை அருள்வார்.

- Advertisement -