கருவேப்பிலை மிளகு குழம்பு ஒருவாட்டி இப்படி வச்சு பாருங்க! டேஸ்ட்ல நண்டு குழம்பு தோத்து போகும்.

kuzhambu
- Advertisement -

காரசாரமான ஒரு கறிவேப்பிலை குழம்பு எப்படி வைப்பது என்று தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அசைவ சாப்பாடில் நண்டு போட்டு வைக்கும் குழம்பின் சுவை, அச்சு அசலாக அப்படியே இந்த கருவேப்பிலை மிளகு குழம்பில் கிடைக்கும். சொன்னா நீங்க நிச்சயம் நம்ப மாட்டீங்க. ஒரே ஒரு முறை இந்த குறிப்பில் இருக்கும் அளவுகளோடு எல்லா பொருட்களையும் சேர்த்து வறுத்து அரைத்து குழம்பு வச்சு பாருங்க. திரும்பத்திரும்ப செஞ்சிக்கிட்டே இருப்பீங்க. இதை பத்திய குழம்பு என்றும் சொல்லுவார்கள். குழந்தை பெற்ற தாய்மார்களுக்கும் கொடுக்கலாம். சரி, சீக்கிரமா இந்த பத்திய குழம்பு ரெசிபியை எப்படி செய்வது என்று பார்த்து விடுவோம் வாருங்கள்.

fry

முதலில் குழம்புக்கு தேவையான மசாலா பொருட்களை வறுத்து அரைத்துக் கொள்வோம். ஒரு கடாயை அடுப்பில் வைத்து கொள்ளுங்கள். எண்ணெய் ஊற்றக் கூடாது. டிரை ரோஸ்ட் தான் செய்யப் போகின்றோம். கடலைப்பருப்பு – 1 ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன், மிளகு – 1 டேபிள் ஸ்பூன், வரமல்லி – 1 டேபிள் ஸ்பூன், வரமிளகாய் – 4, சீரகம் – 1 ஸ்பூன், வெந்தயம் – 1/4 ஸ்பூன்.

- Advertisement -

கடாயில் முதலில் கடலைப் பருப்பையும் உளுத்தம் பருப்பையும் போட்டு சிவக்கும் வரை வறுத்து விட்டு, அதன் பின்பு ஒவ்வொன்றாக மற்ற பொருட்களை கடாயில் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து இந்த பொருட்கள் அனைத்தும் வாசம் வரும் வரை வறுத்து எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

curryleaves-podi2

அடுத்தபடியாக ஒரு பெரிய கைப்பிடி அளவு கறிவேப்பிலையை அதே கடாயில் போட்டு, கருவேப்பிலையின் ஈரத்தன்மை போகும்வரை வருத்து எடுத்துக் கொள்ளுங்கள். கருவேப்பிலையை கையிலெடுத்து உடைத்தால், ஒருவித சத்தத்தோடு உடையும் அல்லவா அந்த பக்குவத்திற்கு கருவேப்பிலை வருபடவேண்டும். வறுத்த கறிவேப்பிலையையும் மிக்ஸி ஜாரில் இருக்கும் மசாலா பொருட்களோடு சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் பொடி செய்து அப்படியே மிக்ஸி ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த மசாலா பொடி அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக கடாயில் 1 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, அதில் தோல் உரித்த சின்ன வெங்காயம் – 6, தோல் உரித்த பூண்டு பல் – 5, சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கி விட்டு, வதக்கிய இந்த இரண்டு பொருட்களையும் ஏற்கனவே மிக்ஸி ஜாரில் மசாலா பொருட்களை அரைத்து வைத்திருக்கிறோம் அல்லவா, அதில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு விழுது போல் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த விழுதை வைத்துதான் மிளகு கருவேப்பிலை குழம்பு வைக்கப் போகின்றோம்.

puli

அடுத்தபடியாக இந்த குழம்புக்கு ஒரு பெரிய எலுமிச்சம்பழம் அளவு புளியை தண்ணீரில் ஊறவைத்து புளிக்கரைசலை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

குழம்பை தாளிக்க செல்லலாம். அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ள வேண்டும். அதில் நல்லெண்ணை – 3 டேபிள்ஸ்பூன் ஊற்றி, எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு – 1/2 ஸ்பூன், வெந்தயம் – 1/4 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து சேர்த்து நன்றாக பொறிய விடவேண்டும். அடுத்தபடியாக தோலுரித்த சின்ன வெங்காயம் – 6 பல் பொடியாக நறுக்கியது, பூண்டு தோலுரித்து – 6 பல் பொடியாக நறுக்கியது, இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும்.

வெங்காயமும் பூண்டும் எண்ணெயில் வதங்கியவுடன் கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைசலை கடாயில் ஊற்றி, 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, ஒரு மூடி போட்டு புளியின் பச்சை வாடை நீங்கும் வரை கொதிக்கவிடுங்கள். புளிகரைசல் இரண்டு நிமிடங்கள் கொதித்த உடன் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை மிக்சியில் இருந்து கடாயில் இருக்கும் புளி கரைசலுடன் சேர்த்து விட வேண்டும். குழம்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து விட்டு, ஒரு மூடி போட்டு மீண்டும் ஒரு முறை மிதமான தீயில் குழம்பை கொதிக்க வையுங்கள். (அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு குழம்பு ஏழிலிருந்து எட்டு நிமிடங்கள் வரை கொதிக்க வேண்டும்.)

kuzhambu1

அவ்வளவு தான். குழம்பின் பச்சை வாடை நீங்கி நாம் ஊற்றிய எண்ணெய் மேலே பிரிந்து வரும் போதே நமக்கு கமகம வாசம் கிடைக்கும். குழம்பு தயாராகி விட்டது என்று தெரிந்து கொள்ளலாம். இந்த குழம்பு இரண்டு நாட்கள் ஆனாலும் கெட்டுப்போகாது. இந்த குழம்பிற்கு தக்காளி சேர்க்க கூடாது. குழம்பை எந்த அளவிற்கு சுண்டவைத்து சாப்பிடுகிறீர்களோ அவ்வளவு சுவை அதிகரிக்கும். சுட சுட ஒரு குன்டான் சோறு கொடுத்தாலும் பத்தாது. தொட்டுக்கொள்ள ஒரு வத்தல் போதும். இந்த ரெசிபியை நீங்களும் உங்க வீட்ல ட்ரை பண்ணித்தான் பாருங்களேன்.

- Advertisement -