கருவேப்பிலை சட்னி! கருவேப்பிலை பொடி! இவை இரண்டையும் சுவையாக, சுலபமாக செய்வது எப்படி?

green-chutney
- Advertisement -

நம்முடைய சமையலில் தினம்தோறும் கருவேப்பிலையை கட்டாயம் தாளிப்பதற்கு சேர்த்துக் கொள்வோம். தாளித்து, கருவேப்பிலையை எல்லோரும் சாப்பிட மாட்டார்கள்! அதை தூக்கி தூரம் வைத்துவிடுவார்கள். கருவேப்பிலையில் அடங்கியுள்ள ஏராளமான சத்து வீணாகி விடுகிறது. மாறாக, இந்த கருவேப்பிலையை சாப்பிட வேண்டும் என்றால் என்ன செய்வது? கறிவேப்பிலை சட்னி, கருவேப்பிலை தூள் இவை இரண்டையும் மணக்க மணக்க சுவையாக எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

green-chutney1

முதலில் கறிவேப்பிலை சட்னி எப்படி செய்வது என்பதை பார்த்துவிடலாம்:
ஒரு கடாயை, அடுப்பில் வைத்து 1 டேபிள் ஸ்பூன் – நல்லெண்ணெய் ஊற்றி, நன்றாக காய விடுங்கள். உளுந்து 1 ஸ்பூன், சின்ன வெங்காயம் – 8, வர மிளகாய் – 4, வேர்க்கடலை – 2 டேபிள்ஸ்பூன், புளி – ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு, தேங்காய்த் துருவல் – ஒரு கைப்பிடி, கறிவேப்பிலை – 2 கைப்பிடி, இவைகளை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்க வேண்டும்.

- Advertisement -

அதாவது உளுந்து முக்கால் பாகம் சிவந்தவுடன், சின்னவெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, அதன் பின்பாக வர மிளகாய், வேர்க்கடலை, சேர்த்து வறுத்து, இறுதியாக புளியையும், தேங்காய்த் துருவலையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விட்டு, கறிவேப்பிலையை இறக்குவதற்கு ஒரு நிமிடத்திற்கு முன்பு சேர்க்கவேண்டும். கறிவேப்பிலை வறுபட வேண்டும். ஆனால், பச்சை நிறம் மாறாமல் வறுபட வேண்டும். அப்போது தான் சட்னி பச்சை நிறத்தில் சுவையாக இருக்கும்.

karuvepilai

வருத்த இந்த பொருட்களை எல்லாம் தனியாக ஒரு தட்டில் கொட்டி நன்றாக ஆற வைத்துவிடுங்கள். அதன் பின்பு, மிக்ஸியில் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு, கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி துவையல் பதத்திற்கு அரைத்தால் கருவேப்பிலை சட்னி தயார்! இதை சுடச்சுட சாதத்தில் போட்டு, நெய் சேர்த்தும் சாப்பிடலாம். இட்லி தோசைக்கு தொட்டும் சாப்பிடலாம்.

- Advertisement -

கமகமக்கும் கருவேப்பிலை பொடி செய்ய தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன், உளுந்து – 4 டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு – 3 டேபிள்ஸ்பூன், வர கொத்தமல்லி – 1 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், வரமிளகாய் – 10 கறிவேப்பிலை – 3 கைப்பிடி, பெருங்காயம் – 1/4 ஸ்பூன், மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன். (கருவேபிளையை முதலிலேயே கழுவி தண்ணீர் இல்லாமல் உலர வைத்துக் கொள்ளுங்கள். எண்ணையில் போட்டு வறுக்க தான் போகின்றோம். இருந்தாலும் தண்ணீர் இல்லாமல் இருப்பது நல்லது.)

karuvepilai-podi

அடுப்பில் ஒரு கடாயை வைத்து, ஒரு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, முதலில் உளுத்தம் பருப்பையும், கடலை பருப்பையும் முக்கால்வாசி வறுக்க வேண்டும். பிறகு வர கொத்த மல்லியையும், சீரகம், வரமிளகாய் சேர்க்க வேண்டும். இவை அனைத்தும் நன்றாக வறுபட்டு வாசனை வந்தவுடன், இறுதியாக கருவேப்பிலையை சேர்த்து, பச்சை நிறம் மாறாமல், வாசனை வரும் அளவிற்கு ஒரு நிமிடம் வரை வறுத்தால் போதும்.

- Advertisement -

இந்த கலவையை ஒரு தட்டில் கொட்டி நன்றாக ஆற வைத்து. மிக்ஸியில் போட்டு, இறுதியாக பெருங்காயம், மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து, கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். கருவேப்பிலை பொடி தயார்! இந்தப் பொடியில் கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு, இட்லி தோசைக்கும் தொட்டு சாப்பிடலாம். சுடச்சுட வெள்ளை சாதத்தில், ஒரு ஸ்பூன் கருவேப்பிலை பொடி போட்டு, நெய் ஊற்றி பிசைந்து சாப்பிட்டால். அவ்வளவு அருமையாக இருக்கும்.

karuvepilai-podi1

அரைத்த இந்தப் பொடி சூடு ஆறியதும், காற்றுப்புகாத கண்ணாடி பாட்டலில் போட்டு, சேகரித்து வைத்துக்கொண்டால், ஒரு மாதத்திற்கு கூட பயன்படுத்திக் கொள்ளலாம். உடலுக்கும் அதிகப்படியான சத்து தரும் பொடி இது. முடி வளர்ச்சியை, இயற்கையாகவே அதிகப்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஆரோக்கியமான குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே
பச்சரிசியில் இட்லி செய்ய முடியுமா? அதற்கான அளவுகள் என்ன? நன்மைகள் என்னென்ன?

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -