நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவித்து இருப்போம். ஒரு சிலருக்கு கஷ்டமே அவர்களுடைய வாழ்க்கையாக அமைந்திருக்கும். எப்படிப்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும் அதை எதிர்த்து போராடி ஜெயிக்க வேண்டும் என்ற மன தைரியம் வேண்டும். அப்படி மன தைரியத்தோடு இருப்பவர்களாக இருந்தாலும் ஒரு சில சூழ்நிலையில் விரக்தியின் உச்சத்திற்கு சென்று விடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் முருகப்பெருமானின் வேல் மந்திரத்தை இந்த முறையில் பாராயணம் செய்ய அவர்கள் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் தீரும். இந்த மந்திரத்தை எப்படி பாராயணம் செய்வது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
“காக்க காக்க கனகவேல் காக்க” என்னும் வார்த்தைக்கு இணங்க நம்முடைய கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கி நம்மை காக்கக்கூடிய ஒரு ஆயுதமாக திகழ்வதுதான் வேல். முருகனின் கையில் இருக்கக்கூடிய இந்த வேல் பார்வதி அம்மனின் சொரூபமாக திகழ்கிறது. இந்த வேலை வைத்து தான் முருகப்பெருமான் அசுரனை வதம் செய்தார். அதனால் இந்த வேலை நாம் வழிபாடு செய்யும்பொழுது நம் வாழ்வில் நடக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு வேல் மந்திரத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.
முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாக திகழ்வது கிருத்திகை நட்சத்திரம், உகந்த திதியாகத் திகழ்வது சஷ்டி திதி, உகந்த கிழமையாக திகழ்வது செவ்வாய்க்கிழமை. இந்த மூன்று நாட்களிலும் நாம் முருகப்பெருமானை வழிபாடு செய்வது என்பது நமக்கு பல நன்மைகளைத் தரும். அதிலும் குறிப்பாக இந்த வேல் மந்திரத்தை கூறி முருகப்பெருமானை வழிபாடு செய்தோம் என்றால் நம் வாழ்வில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கும், நிம்மதி உண்டாகும் என்று கூறப்படுகிறது.
இந்த மந்திரத்தை பிரம்ம முகூர்த்த நேரத்தில் கூறலாம் அல்லது மாலை 6:00 மணிக்கு மேல் கூறலாம். முடிந்த அளவிற்கு பிரம்ம முகூர்த்த நேரத்தில் கூற முயற்சி செய்யுங்கள். பிரம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய முருகப்பெருமானின் படத்தை சுத்தம் செய்து அவருக்கு சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். ஆறு என்ற எண்ணிக்கையில் சந்தன குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அவருக்கு சிவப்பு நிறத்திலான ஏதாவது ஒரு மலர்களை மாலையாக சூட்ட வேண்டும். உதிரிப்பூக்களாக இருக்கும் பட்சத்தில் ஆறு என்ற எண்ணிக்கையில் முருகப்பெருமானின் படத்திற்கு வைக்க வேண்டும்.
பிறகு முருகப்பெருமானின் படத்திற்கு முன்பாக ஒரு அகல் விளக்கில் நெய் ஊற்றி பஞ்சுத் திரி போட்டு தீபம் ஏற்றலாம். இந்த திரியானது சிவப்பு நிறத்தில் இருந்தால் அதன் பலன் இன்னும் அதிகமாக இருக்கும். இயன்றவர்கள் ஆறு அகல் விளக்குகளில் நெய் தீபம் ஏற்றியும் வழிபாடு செய்யலாம். இப்படி தீபம் ஏற்றி முடித்த பிறகு முருகப்பெருமானுக்கு நெய்வேத்தியமாக ஏதாவது ஒரு பொருளை வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு செவ்வாழைப்பழம் இருந்தால் கூட போதும்.
இப்பொழுது தரையில் ஒரு விரிப்பை விரித்து அதன் மேல் சமணம் போட்டு அமர்ந்து கொள்ள வேண்டும். பிறகு சிறிதளவு விபூதியை எடுத்து இடது கையில் வைத்து வலது கையால் மூடி நம்முடைய இடது முழங்காலின் மேல் வைத்து விட வேண்டும். இப்பொழுது முருகப்பெருமானின் இந்த வேல் மந்திரத்தை 27 முறை நிறுத்தி நிதானமாக கூற வேண்டும். இப்படி கூறி முடித்த பிறகு இந்த விபூதியை எடுத்து தனியாக ஒரு டப்பாவில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும் இந்த விபூதியை உங்களுடைய நெற்றியில் முருகப்பெருமானை நினைத்த வண்ணம் பூசுவதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்துமே நீங்கும் என்று கூறப்படுகிறது.
இந்த வேல் மந்திரத்தை கையில் விபூதியை வைத்துக்கொண்டு நாம் உச்சரிக்கும் பொழுது இந்த மந்திரத்தின் சக்தியானது அந்த விபூதியில் போய் சேர்ந்து விடும். அப்படிப்பட்ட விபூதியை நாம் நெற்றியில் வைக்கும் பொழுது நமக்கு அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும். கஷ்டங்கள் அனைத்தும் காணாமல் போகும்.
மந்திரம்:
ஓம் ஐம் ரீம் வேல் காக்க
இதையும் படிக்கலாமே: வராக முகூர்த்த ரகசியம்
இந்த மந்திரத்தை முழு நம்பிக்கையுடன் நிறுத்தி நிதானத்துடன் முருகப்பெருமானுக்கு உகந்த நாட்களில் கூறுவதன் மூலம் வாழ்க்கையில் இருக்கக் கூடிய அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.