நாளை முதல் கத்திரி வெயில் ஆரம்பம். என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? அக்னி நட்சத்திரம் ஏன் தோஷமாக பார்க்கப்படுகிறது?

- Advertisement -

நாளை முதல் கோடை வெயில் கடுமையாக துவங்குகிறது. தமிழகம் இன்றிருக்கும் நிலையில் கத்திரி வெயிலும் சேர்ந்து கொண்டு நம்மை என்ன பாடுபடுத்தப் போகிறதோ! என்று மக்கள் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். அக்னி நட்சத்திரம் என்பது சூரியனின் கதிர்கள் நேரடியாக நம் மீது 90 டிகிரி அளவில் விழுவதால் ஏற்படுகிறது. அதன் வெப்பநிலை தாங்க முடியாமல் உடலில் உஷ்ண பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை நாளை (4/5/2020) ஆரம்பிக்கும் கத்தரி வெயில், இம்மாத இறுதியில் (28/5/2020) குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. கடந்த வருடத்தை விட இந்த வருடம் மிக அதிகமாக வெயிலின் வெப்பம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தகிக்கும் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்புவது எப்படி என்று இப்பதிவில் நாம் பார்ப்போமா?

sun1

ஜோதிடத்தை பொறுத்தவரை அக்னி நட்சத்திரம் என்பது தோஷ காலமாக பார்க்கப்படுகிறது. அக்னி நட்சத்திர காலத்தில் எந்த ஒரு சுபகாரியங்களும் நிகழ்த்தப்பட மாட்டாது. புதிய பேச்சுவார்த்தைகள் எதுவும் இக்காலகட்டத்தில் துவங்கபடாது. அது என்ன அக்னிநட்சத்திரம்? நமக்கு தெரிந்தது 27 நட்சத்திரங்கள் தானே? பின்னர் எப்படி அக்னி நட்சத்திரம் வந்தது? என்று கேள்வி கேட்பவர்களுக்கான விடை இதோ!!

- Advertisement -

சித்திரை இறுதி வாரத்தில் துவங்கி, வைகாசி முதல் வாரம் வரை சூரியன் உச்சம் பெறும் காலகட்டத்தில் மிக அதிகமாக வெப்பம் பூமியின் மீது விழும் இதைத்தான் கத்திரி வெயில் என்கிறோம். பஞ்சாங்கத்தின் படி பரணி நட்சத்திரத்தில் நான்காம் பாதத்தில் துவங்கி, ரோகிணி நட்சத்திரத்தின் முதல் பாதம் வரை சூரியன் ஆட்சி புரியும் காலத்தை அக்னி நட்சத்திர காலம் என்றும், கத்திரி வெயில் காலம் என்றும் குறிப்பிடப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பூமியை சுற்றி கொண்டிருக்கும் சந்திரன் இருக்கும் இடத்திற்குரிய நட்சத்திரம் தான் நடப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

sun

சூரியன் சித்திரை மாதத்தில் முதல் ராசியான மேஷ ராசியில் நுழையும் பொழுது உச்சம் பெறுகிறார். இவ்வாறு சூரியன் உச்சம் பெறும் பொழுது சூரியனின் கதிர்கள் நேரடியாக பூமியின் மீது விழுவதால், சூரிய கதிர்கள் நம்மை சுட்டெரிக்கின்றன. நெருப்புக்கு இணையான வெப்பத்தை உமிழ்வதால் அதற்கு அக்னி நட்சத்திரம் என்று பெயர் ஏற்பட்டது. இப்படி கடும் வெப்பம் உடலின் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதால் உஷ்ண பாதிப்புகள், நோய் தோற்றுகள் உண்டாகிறது. இதனால் தான் இக்காலத்தை தோஷ காலமாக ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டு, பரிகாரங்கள் செய்யப்பட்டு வருகிறது.

- Advertisement -

அக்னி நட்சத்திர காலத்தில் என்ன செய்யலாம்?
உடலுக்கு குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. நீர் மோர் அதிகம் குடிப்பதும், குடிக்கும் நீரின் அளவை அதிகரிப்பதும் தங்களின் உடல்நிலையை பாதுகாத்துக்கொள்ள உதவும். காலையில் பூஜையின் பொழுது சூரியனுக்குரிய மாக்கோலமிட்டு, சூரிய காயத்ரி மந்திரத்தை 21 முறை உச்சரிப்பது மன அமைதியை ஏற்படுத்தும். மஞ்சள், வேப்பிலை கலந்த நீரில் குளிப்பது தோஷம் ஏற்படாமல் காக்கும். கேழ்வரகு கூழ் செய்து குடிப்பது இந்த காலத்தில் ஆரோக்கியம் காக்க துணை புரியும்.

Om sound

சூரிய காயத்ரி மந்திரம்:
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாச ஹஸ்தாய தீமஹி!
தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்!!

- Advertisement -

அக்னி நட்சத்திர காலத்தில் சுபகாரியங்கள் செய்யலாமா?
அக்னி நட்சத்திர காலத்தில் தாராளமாக சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நடத்தலாம். அதற்கான ஏற்பாடுகளும் செய்யலாம். திருமணம், வளைகாப்பு, நிச்சயதார்த்தம், பெண் பார்க்கும் படலம் போன்ற நல்ல விஷயங்களை துவங்கலாம். அதில் எந்த தவறும் இல்லை.

அக்னி நட்சத்திர காலத்தில் என்ன செய்யக்கூடாது?
அக்னி நட்சத்திர காலத்தில் விதைகள் விதைக்கபடக் கூடாது. தோட்டம், கிணறு, குளம் போன்றவற்றை ஏற்படுத்தக் கூடாது. மரம், செடி, கொடிகளை கட்டாயம் வெட்டக்கூடாது. மட்டையில் நார் உரிக்க கூடாது. வீடு மற்றும் நிலம் முதலியவற்றில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள கூடாது. முடி காணிக்கை செலுத்துதல், காது குத்துதல் போன்ற விழாக்களை செய்யக் கூடாது. புதிதாக வாங்கிய நிலத்திற்கு பூமி பூஜை போடுவது, கிணறு வெட்டுவது, விவசாய நிலத்தில் புதிய நாற்று நடுவது கூடாது. புதிய வீட்டிற்கு கிரகப் பிரவேசம் செய்வது, பால் காய்ச்சுவது போன்ற இடமாற்றங்கள் கூடாது.

ஆடி மாதத்தில் புதுமண தம்பதிகளை பிரித்து வைப்பது ஏன்? ஆடியில் கருத்தரித்தால் சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கும் என்பதால் தான். சித்திரையின் கோடை வெப்பம் மிகுந்து காணப்படுவதால் கர்ப்பிணி பெண்களுக்கு சில உடல் உபாதைகள், நோய்த்தொற்றுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உண்டு. இக்காலகட்டத்தில் தாயும், சேயும் நலமாக இருக்க வேண்டியே ஆடிமாத சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அக்னி முடிந்ததும் கோவில்களில் பிரத்தியேக வழிபாடுகள் நடத்தப்படும். தோஷம் போக்குவதற்கு விழாக்களும் கொண்டாடப்படுகின்றன.

- Advertisement -