கத்திரிக்காய் பச்சடி செய்முறை

kathirikai pachadi
- Advertisement -

என்னதான் பைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டாலும், கிராமத்தில் இருக்கக்கூடிய பாட்டிகளின் கைப்பக்குவத்தில் சமைக்கும் சாப்பாட்டின் ருசி மிகவும் சுவையாக இருக்கும். அந்த வரிசையில் கிராமத்து ஸ்டைலில் கத்திரிக்காய் பச்சடி செய்யும் முறையை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

கத்திரிக்காயை நம்முடைய உணவில் சேர்க்கும்போது அது பாக்டீரியாக்களை தடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இதயத்திற்கு ஆரோக்கியத்தை தருகிறது. மூளையின் செயல் திறனை அதிகரிக்கிறது. மேலும் கத்திரிக்காயை நாம் உணவாக எடுத்துக் கொள்ளும் பொழுது சருமம் மற்றும் தலைமுடிக்கு தேவையான ஈரப்பதத்தை இயற்கையான முறையிலே தர உதவுகிறது.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • கத்திரிக்காய் – 200 கிராம்
  • சீரகம் – ஒரு டீஸ்பூன்
  • வரமிளகாய் – 12
  • பூண்டு – 5 பல்
  • புளி – ஒரு எலுமிச்சை அளவு
  • வெங்காயம் – ஒன்று
  • உப்பு – தேவையான அளவு
  • கருவேப்பிலை – 5 இலை
  • எண்ணெய் – 3 டீஸ்பூன்

செய்முறை

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். கடாய் நன்றாக சூடானதும் அதில் ஒன்றரை ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் சீரகம், வரமிளகாய், பூண்டு இவை மூன்றையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இவை அனைத்தையும் ஒரு தட்டில் தனியாக எடுத்து வைத்துக்கொண்டு அதே கடாயில் மீதம் இருக்கும் எண்ணையை ஊற்றி நறுக்கிய கத்திரிக்காயை அதில் சேர்த்து மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.

எண்ணெயிலேயே கத்திரிக்காய் நன்றாக வேகும் அளவிற்கு குறைந்த தீயில் வைத்து விட வேண்டும். கத்திரிக்காய் வெந்த பிறகு அதை எடுத்து ஆற வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கிளாஸ் கொதித்த தண்ணீரை புளியில் ஊற்றி அதை ஊற வைக்க வேண்டும். ஊறவைத்த புளியை நன்றாக கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் நாம் ஏற்கனவே வதக்கி வைத்திருந்த சீரகம், வரமிளகாய், பூண்டு இவை மூன்றையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த இந்த விழுதை ஒரு பாத்திரத்தில் சேர்க்க வேண்டும். பிறகு கத்திரிக்காயை அதில் சேர்த்து நன்றாக மசிக்க வேண்டும். அனைத்தும் நன்றாக மசிந்த பிறகு கலைத்து வைத்திருக்கும் புளி தண்ணீரை தேவையான அளவு ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.

இந்த கத்திரிக்காய் பச்சடி கெட்டியாக இருக்க வேண்டும் என்பதால் அதற்கேற்றார் போல் புளி தண்ணீரை ஊற்றிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி அதில் சேர்க்க வேண்டும். அடுத்ததாக கருவேப்பிலையை அதில் சேர்க்க வேண்டும். உப்பு தேவையான அளவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அவ்வளவுதான் கத்திரிக்காய் பச்சடி தயாராகிவிட்டது. செய்யும் பொழுதே நாவில் எச்சில் ஊறும் அளவிற்கு சுவையாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: பொங்கல் பலக்காய் குழம்பு செய்முறை

மிகவும் எளிமையான முறையில் அதேசமயம் சத்து நிறைந்த சுவையான கத்திரிக்காய் பச்சடியை நாமும் நம் வீட்டில் செய்து அனைவரின் பாராட்டையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழலாம்.

- Advertisement -