கண்கண்ட தெய்வமாக திகழக்கூடிய முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு உகந்த நாளாக செவ்வாய்க்கிழமையும், உகந்த நட்சத்திரமாக கிருத்திகை விசாகம் போன்ற நட்சத்திரங்களும், உகந்த திதியாக சஷ்டி திதியும் திகழ்கிறது. இதை தவிர்த்து இன்னும் சில விசேஷ மிகுந்த நாட்களும் இருக்கின்றன. அந்த நாட்களை நாம் சரியாகப் பயன்படுத்தினோம் என்றால் நாம் கேட்ட வரம் நமக்கு கிடைக்கும் என்றே கூறலாம். அந்த வகையில் முருகப்பெருமானின் அருளை பெறுவதற்கு உதவக்கூடிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
கேட்டதை தரும் முருகர் வழிபாடு
முருகப்பெருமானை பலரும் பல விதமான வேண்டுதலுக்காக வழிபாடு செய்வார்கள். அந்த வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறி விட்டதா என்று கேட்டால் ஒரு சிலருக்கு இல்லை என்ற பதில் வரும். இதற்கு முக்கியமாக அவர்களுடைய கர்ம வினைகளே காரணம் என்றாலும் எந்த வேண்டுதலை நாம் முன்வைக்கிறோம் அந்த வேண்டுதலுக்குரிய கிரகம் எது என்பதை அறிந்து அதற்குரிய நாளில் முருகப்பெருமானை வழிபாடு செய்யும் பொழுது அதனால் விரைவில் பலனை பெற முடியும்.
அந்த வகையில் நம்முடைய வாழ்க்கையில் பல விதமான நன்மைகளை அருளக்கூடிய கிரகமாக திகழ்வதுதான் குரு. குரு பார்க்க கோடி நன்மை என்று கூறி கேள்விப்பட்டிருக்கிறோம் அல்லவா? குரு பகவானின் அருள் இருந்தால்தான் ஒருவருக்கு நல்ல வேலை, நிரந்தர வருமானம், தன தடைகள் நீங்குவது, குழந்தை பாக்கியம் கிடைப்பது, திருமண யோகம் உண்டாவது போன்ற அனைத்துமே நிகழும். அப்படிப்பட்ட குரு பகவானுக்குரிய கிழமையாக திகழ்வதுதான் வியாழக்கிழமை. மேற்சொன்ன இந்த காரியங்களில் ஏதேனும் தடைகள் இருந்தால் நாம் செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானை வழிபாடு செய்வதை விட வியாழக்கிழமை வழிபாடு செய்யும்பொழுது நமக்கு விரைவிலேயே பலன் கிடைக்கும்.
எப்படி குரு பகவானின் அருளை பெறுவதற்கும், குரு பகவானால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்குவதற்கும் வியாழக்கிழமை திருச்செந்தூர் முருகனை வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறதோ அதேபோல் ஒவ்வொரு வாரமும் வரக்கூடிய வியாழக்கிழமை அன்று பிரம்ம முகூர்த்த நேரத்திலோ அல்லது குரு ஹோரையிலோ திருச்செந்தூர் முருகனை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்பவர்களுக்கு குரு பகவானால் ஏற்படக்கூடிய அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும்.
இந்த வழிபாட்டை மிகவும் எளிமையான முறையில் செய்யலாம். காலையிலேயே பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் எப்போதும் போல் தீபம் ஏற்றிக் கொள்ளுங்கள். முடிந்த அளவிற்கு இந்த வழிபாட்டை மாலை நேரத்தில் செய்வது என்பது மிகவும் சிறப்பு. மாலை நேரத்தில் செய்ய இயலாதவர்கள் காலையில் கூட இந்த வழிபாட்டை செய்து கொள்ளலாம். முருகப்பெருமானின் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்து முருகப்பெருமானுக்கு மஞ்சள் நிற பூக்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.
பிறகு முருகப்பெருமானுக்கு முன்பாக தேன் அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கக்கூடிய லட்டுவை நெய்வேத்தியமாக வைத்துக் கொள்ளுங்கள். பிறகு முருகப்பெருமானுக்கு முன்பாக ஒரு அகல் விளக்கை வைத்து அதில் சுத்தமான நெய் ஊற்றி மஞ்சள் நிறத்திரி போட்டு தீபம் ஏற்றி வைத்து உங்களுடைய வேண்டுதல் என்னவோ அந்த வேண்டுதலை கூற வேண்டும்.
பிறகு கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், கந்தர் அனுபூதி என்று உங்களுக்கு முருகப்பெருமானின் எந்த பாடல்கள் தெரியுமோ அந்த பாடலை முழு மனதோடு பாட வேண்டும் அல்லது முருகனுக்கு அரோகரா, கந்தனுக்காக அரோகரா என்று கூறி முருகப்பெருமானிடம் உங்களுடைய வேண்டுதலை மறுபடியும் முன்வைத்து கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாடு செய்ய வேண்டும். இப்படி தொடர்ச்சியாக ஆறு வியாழக்கிழமை வழிபாடு செய்பவர்களுக்கு குரு பகவானால் ஏற்படக்கூடிய அனைத்து விதமான நன்மைகளும் எந்தவித தங்கு தடையும் இன்றி கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே: இன்பங்களை தரும் ஆடித்தபசு வழிபாடு
தந்தைக்கு குருவாக இருந்து பாடம் சொன்ன சுப்பிரமணியனை மனதார நினைத்து வியாழக்கிழமை தோறும் வழிபாடு செய்பவர்களுக்கு முருகனின் அருளும் குருவின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.