நம் உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளும் சிறுதானியங்களில் உள்ளன. சத்து குறைபாடு நீங்க மருந்து, மாத்திரைகளை உண்பதற்கு பதிலாக சிறு தானிய வகைகளை தேர்ந்தெடுத்து உண்பதால், நமக்கு எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாமல் அனைத்து சத்துகளும் கிடைக்கும். அந்த வகையில் இன்று நாம் பார்க்கப் போவது சுண்ணாம்பு சத்து நிறைந்த கேழ்வரகு அல்வா.
எலும்புகள் உறுதி பெறுவதற்கு சுண்ணாம்புச்சத்து மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது. இந்த சுண்ணாம்பு சத்து கேழ்வரகில் அதிக அளவு காணப்படுகிறது. பொதுவாக கேழ்வரகை வைத்து தோசை, களி, கூழ், அடை என்று செய்வது வழக்கம். ஆனால் இந்த பதிவில் நாம் கேழ்வரகை வைத்து அல்வா எப்படி செய்வது என்று பார்க்கப் போகிறோம். அல்வா செய்வதன் மூலமாக குழந்தைகளும் விரும்பி இதை சாப்பிடுவர்.
தேவையான பொருட்கள்
கேழ்வரகு மாவு – ஒரு கப், வெல்லம் – 2 கப், நெய் – 200 மில்லி லிட்டர், உப்பு – ஒரு சிட்டிகை, ஏலக்காய் தூள் – ஒரு சிட்டிகை, சுக்கு தூள் – ஒரு சிட்டிகை, முந்திரி – ஒரு டீஸ்பூன், உலர் திராட்சை – ஒரு டீஸ்பூன்.
செய்முறை
முதலில் வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் கொட்டி, அதில் அரை கப் தண்ணீர் ஊற்றி, வெல்லம் கரையும் வரை அடுப்பில் வைக்க வேண்டும். வெல்லம் கரைந்ததும் அதை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் கேழ்வரகு மாவை கொட்டி, உப்பை சேர்த்து, கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது அடுப்பில் அடி கனமான பாத்திரத்தை வைக்க வேண்டும். பாத்திரம் சூடான பிறகு, நெய்யை ஊற்ற வேண்டும். நெய் உருகியதும், அடுப்பை குறைந்த தீயில் வைத்து கேழ்வரகு மாவு கலவையை அதில் சேர்க்க வேண்டும். அடி பிடிக்காத அளவு அதை கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
கேழ்வரகு மாவு கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை சிறிது சிறிதாக நெய்யை சேர்த்து கைவிடாமல் கிளற வேண்டும். மாவு கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் வந்த பிறகு அதை இறக்கி வைத்து விட வேண்டும். பிறகு ஒரு வாணலியை எடுத்து அடுப்பில் வைத்து, அதில் நெய்யை ஊற்ற வேண்டும். நெய் காய்ந்ததும் அதில் முந்திரி, திராட்சையை வறுக்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே: காஞ்சிபுரம் இட்லி செய்முறை.
வருத்த முந்திரி திராட்சையை கேழ்வரகு மாவு கலவையில் சேர்க்க வேண்டும். பிறகு அதில் ஏலக்காய் தூள், சுக்குத்தூள் இரண்டையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இப்பொழுது சுவையான கேழ்வரகு அல்வா தயாராகி விட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த சத்தான அல்வா ரெசிபி சுவைத்து மகிழ்வர்.