பெண்கள் இந்த ஒரு தர்மத்தை செய்தாலே போதும். குடும்பமே அதன் மூலம் சிறந்த பலனை பெரும்.

dharmam
- Advertisement -

எந்த ஒரு காரியத்தையும் தர்மத்தின் அடிப்படையில் செய்யும் விதிகளை பின்பற்றுவது தான் நமது பாரத நாட்டின் பூர்வீக மதங்களின் செயல்பாடாக இருந்து வந்துள்ளது. எனவே தான் தற்போது இந்து மதம் என அழைக்கப்படும் மதத்திற்கு “சனாதன தர்மம்” என பெயர் உண்டானது. இப்படியான உயரிய பண்பாடுகளை மனிதர்களுக்கு போதித்த இந்த நாட்டின் பூர்வீக மதங்கள், இங்கு வாழும் மனிதர்கள் அன்றாடம் தங்கள் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய தர்மங்கள் குறித்து விரிவாகக் கூறியுள்ளன. இடையில் பல நூற்றாண்டுக் காலம் அன்னியப் படையெடுப்புகள் மற்றும் கலாச்சாரங்களின் தாக்கங்களினால் நமது பாரம்பரிய பழக்க வழக்கங்கள், தர்ம காரியங்கள் செய்வதை அநாகரீகம் என கருதி பல அற்புத பண்பாட்டு பொக்கிஷங்களை நாம் முற்றிலும் இழந்துவிட்டோம். அந்த வரிசையில் தற்போது வேகமாக அழிந்து வருகின்ற ஒரு பாரம்பரிய வழக்கத்தை பற்றிய ஆன்மீக ரீதியிலான விளக்கத்தினை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

lakshmi-kubera-kolam

கடந்த 20 வருடங்களுக்கு முன்பு வரை கூட கிராமங்கள், நகரங்கள் என வேறுபாடில்லாமல் அனைத்து இடங்களிலும் அதிகாலையில் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் பெண்கள் எழுந்து, குளித்து முடித்ததும் தங்கள் வீடுகளின் வாயிலில் கோலம் போடும் காட்சியை நாம் பார்த்திருக்க முடியும். ஆனால் தற்காலங்களில் நம் மக்களிடம், அதிலும் குறிப்பாக இளம் வயதினரிடம் ஏற்பட்டிருக்கின்ற வேகமான வாழ்க்கை முறை மற்றும் மேற்கத்திய நாகரிக தாக்கத்தின் காரணமாக நமது பாரம்பரிய பழக்கங்கள் அனைத்துமே மூட நம்பிக்கை என்கிற ஒரு மேம்போக்கான கருத்து ஏற்பட்டுள்ளதால், தற்காலத்திய இளம் பெண்களில் பெரும்பாலானோர் அதிகாலையில் எழுவதோ அல்லது அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்து தங்கள் வீடுகளின் முன்னால் கோலம் போடும் வழக்கத்தை அடியோடு மறந்து போய் விட்ட ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது

- Advertisement -

“பெண் இல்லாத வீடு, கொடும் புலி வாழும் குகை” என நமது தமிழ் முன்னோர்கள் அனுபவ பழமொழியை கூறியுள்ளனர். பெரும்பாலான இந்திய நாட்டின் பூர்வீக மதங்கள் பெண்மையை சக்தியின் வடிவமாகவே போற்றுகின்றன. ஒரு இல்லம் சிறக்க அந்த இல்லத்தின் தலைவியான பெண் உடல், மன மற்றும் ஆன்ம ரீதியிலான நலத்துடன் இருக்க வேண்டும் என நமது முன்னோர்கள் அதிக கவனம் செலுத்தினர். அதற்காக சில வழக்கங்களை, அந்த பெண்களை செய்ய வைத்து, அதன் மூலம் அவர்கள் பலவிதமான நன்மைகளை பெறும் வகையில் தர்மங்களை வகுத்தனர். அதில் ஒன்று தான் பெண்கள் அதிகாலையில் எழுந்து வீட்டிற்கு முன்பாக கோலம் போடும் வழக்கமாகும்.

kolam

கோலம் போடும் வழக்கம் நமது தமிழ் முன்னோர்களின் ஒரு அற்புதமான தாந்திரீக அறிவியல் கண்டுபிடிப்பாகும். தினந்தோறும் வீட்டிற்கு முன்பாக ஒவ்வொரு வடிவில் வரையப்படும் கோலங்களினால் ஏற்படுகின்ற நேர்மறை அதிர்வலைகள் அந்த வீட்டையும், அந்த வீட்டில் இருப்பவர்களையும் எதிர்மறை ஆற்றல்களின் தாக்கங்களிலிருந்து காக்கும் ஒரு கவசம் போல் செயல்படுகின்றது. அதே நேரம் நன்மை பயக்கும் நேர்மறை ஆற்றல்கள் கோலமிடப்பட்ட வீட்டிற்குள் செல்வதற்கு வழிவகை செய்கின்றது. இத்தகைய அற்புதமான கோலத்தினை அந்த வீட்டின் தலைவியாக இருக்கும் பெண், அவளது கைகளால் போடுவதால் அந்த வீட்டிற்கு ஏற்படும் நன்மைகள் பலன்கள் பல மடங்கு அதிகரிக்கின்றது.

- Advertisement -

“சனாதன தர்மம்” என அழைக்கப்படும் இந்து மதம் ஒவ்வொரு வீட்டில் இருக்கின்ற திருமணமான மற்றும் திருமணம் ஆகாத பெண்கள் செல்வத்தின் கடவுளான “லட்சுமி தேவி” அம்சம் என போற்றுகின்றது. எனவே அதிகாலையில் ஒரு பெண் எழுந்து, குளித்து தன்னை சுத்தப் படுத்திக் கொண்டு வீட்டின் முன்பாக கோலமிடுவதால் செல்வக் கடவுளான லட்சுமிதேவியின் அருள் அந்த பெண்களுக்கும், அந்த பெண் வாழும் குடும்பத்தினர் அனைவருக்கும் கிடைக்கும் என்பது நமது தர்ம சாத்திரங்களின் திடமான நம்பிக்கையாகும்.

Pongal Kolam design

தற்காலங்களில் கோலம் போடுவதற்கு பலவிதமான கற்களை பயன்படுத்தி செய்யப்படுகின்ற செயற்கையான கோல மாவினை பயன்படுத்தி வீட்டிற்கு முன்பாக கோலம் போடுகின்றனர். ஆனால் இது முற்றிலும் தவறான ஒரு வழிமுறையாகும். கோலமிடும் போது அரிசியை அரைத்து செய்யப்பட்ட அரிசி மாவு கொண்டு கோலமிடுவதே சரியான முறையாகும். ஏனெனில் நமது தர்மங்களின் படி ஒவ்வொரு தினமும் நாம் காலையில் உணவு உண்பதற்கு முன்பாக பசியோடு இருக்கும் ஒரு மனிதனுக்கோ அல்லது வேறு ஏதாவது ஒரு உயிரினத்திற்கோ உணவு அளிக்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு நாளும் பசியோடு இருக்கின்ற உயிர்களை நம்மால் தேடிப்பிடித்து உணவளிக்க முடியாது. அதற்கு பதிலாக அரிசி மாவில் கோலம் போடுவதால் தரையில் ஊர்கின்ற எறும்புகள், குருவிகள் மற்றும் இன்ன பிற உயிரினங்கள் அந்த அரிசி மாவை சாப்பிடுவதால் “அன்னதானம்” இட்ட பலனை அப்பெண்களுக்கும், அப்பெண்கள் சார்ந்த குடும்பத்திற்கும் உண்டாகி எல்லாவிதமான நன்மைகளும் அந்த பெண்களின் குடும்பத்திற்கு ஏற்பட வழிவகுக்கும்.

hridaya-kamalam-kolam1

எனவே தற்காலத்தில் இருக்கின்ற பெண்கள் அதிகாலையில் எழுந்து, குளித்து கோலம் இடும் வழக்கத்தை “பிற்போக்குத்தனம்” என கருதாமல் அவர்களின் குடும்பத்திற்கு பலவிதமான நன்மைகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு ‘தர்ம காரியம்” என கருத்திற் கொண்டு, தினமும் அதிகாலையில் தங்களின் வீடுகளுக்கு முன்பாக கோலமிடும் வழக்கத்தை பின்பற்றுவதால் அப்பெண்களின் வாழ்வு மங்களங்கள் நிறைந்ததாக செல்வ கடவுள் லட்சுமிதேவி, தேவர்கள், இன்னபிற நேர்மறை ஆற்றல்களின் அருளாசிகளைப் பெற்று சீரும் சிறப்புமாக வாழலாம்.

- Advertisement -