கொளஞ்சியப்பர் திருக்கோயில் வரலாறு

kolanjiappar

கொளஞ்சியப்பர்
இங்கு மூலவராக வீற்றிருக்கும் சிவபெருமான் சுயம்பு மூர்த்தி என்ற பெருமையை கொண்டவர். இந்தக் கோவிலில் சிவபெருமானுக்கு உருவமும் இல்லை. கண்ணுக்குப் புலப்படாத அருவமாகவும் இல்லை. உருவமும் அருவமும் சேர்ந்து ஒரு பலிபீட வடிவமாக பக்தர்களுக்கு காட்சி தருகின்றார் மூலவர். இங்கு மூன்று அடி உயரத்தில் உள்ள சுயம்புவாக தோன்றிய பலிபீடமே மூலஸ்தனமாக இருக்கின்றது. இந்த பலிபீடத்திற்கு கீழ்ப்பகுதியில் முருகனது உருவம் பொறிக்கப்பட்ட ஸ்ரீசக்கரம் ஒன்று உள்ளது. இங்கு நடத்தப்படும் அபிஷேகங்கள் எல்லாம் முருகப்பெருமானுக்கு நடக்கின்றது.

kolanjiappar

இந்தக் கோவிலின் மற்றொரு சிறப்பு வேப்பெண்ணை மருந்து. இங்கு வரும் பக்தர்கள் வேப்பெண்ணையை வாங்கிக் கொண்டுவந்து அர்ச்சகரிடம் கொடுத்து அந்த இறைவனின் காலடியில் வைத்து பூஜை செய்து சிவபெருமானின் பிரசாதமான திருநீற்றை சிறிதளவு அந்த எண்ணெயில் போட்டு வாங்கிச் செல்வார்கள். இந்த எண்ணெயானது பல விதமான நோய்களை குணப்படுத்தும் சக்தி கொண்டதாக, பக்தர்கள் நம்பிக்கையோடு வாங்கி செல்கிறார்கள். ஆறாமல் இருக்கும் புண்கள், கட்டிகள் இவற்றுக்கு மருந்தாக இந்த எண்ணெய் நல்ல ஒரு தீர்வினை கொடுக்கிறது. மனிதர்களுக்கு மட்டுமல்ல மாடுகளுக்கு ஏற்படும் காமாலைகட்டிக்கும் இந்த எண்ணெயானது மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இந்த ஊர் மக்கள் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் கூட இந்த எண்ணெயானது கொண்டு செல்லப்படுகிறது. ஆனால், இந்த எண்ணையை மருந்தாக பயன்படுத்துபவர்கள் சுத்தமாகவும் எந்தவிதமான தீட்டும் இல்லாதவர்களாகவும் இருக்கவேண்டும்.

தல வரலாறு
இன்று ‘விருதாச்சலம்’ என்று அழைக்கப்படும் இந்த ஊரானது பல நூற்றாண்டிற்கு முன்பு ‘திருமுதுகுன்றம்’ என்ற பெயரில் இருந்தது. சிறுவயதில் தேவாரம் பாடிய சுந்தரர் திருமுதுகுன்றம் பகுதிக்கு வருகை தந்தார். இந்த ஊரில் இருந்த பழமலைநாதர் கோவிலில் சிவபெருமானும், விருத்தாம்பிகையும் சேர்ந்து சுந்தரருக்கு காட்சி தந்தனர். ‘விருதம்’ என்றால் ‘பழமை’ என்ற பொருளைக் குறிகின்றது. இந்த ஊரில் இருக்கும் கோவில்கள் எல்லாம் மிகவும் பழமை வாய்ந்தது என்பதை அறிந்து கொண்ட சுந்தரர், இந்த கோவிலில் இருக்கும் சிவபெருமானையும் அம்பிகையையும் போற்றி படாமலேயே சென்றுவிட்டார். ஏனென்றால் இவ்வளவு பழமைவாய்ந்த கோவிலைப்பற்றி பாடல் பாட சுந்தரருக்கு தகுதி இல்லை என்று நினைத்துக் கொண்டார். ஆனால் சிவபெருமானுக்கு சுந்தரின் பாடல்கள் என்றால் மிகவும் விருப்பம் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. சிவனுடன் இருக்கும் அம்பாளுக்கும் அதே விருப்பம் தான்.

kolanjiappar

சுந்தரர், பாடலை பாடாமல் சென்றதில் சிவபெருமானுக்கு வருத்தம் இருந்தது. சிவபெருமான் முருகனை அழைத்து நடந்ததை கூறினார். முருகப்பெருமான் உடனே வேடனாக உருமாறி சுந்தரரிடம் சென்று அவர் கையில் இருந்த செல்வத்தை எல்லாம் திருடி விட்டார். ‘இந்த செல்வங்கள் எல்லாம் என்னுடையது அல்ல. அந்த இறைவனின் திருப்பணிக்காக வைத்திருப்பது. எனவே இதையெல்லாம் என்னிடம் திருப்பி கொடுத்துவிடு’ என்று அந்த வேடனிடம் முறையிட்டார். ‘உனக்கு இந்த பொருட்கள் எல்லாம் திரும்பவும் வேண்டுமென்றால் திருமுதுகுன்றத்தில் வந்து பெற்றுக் கொள்ளும்படி’ சொல்லிவிட்டு வேடன் ரூபத்தில் இருந்த முருகன் மறைந்து விட்டார்.

- Advertisement -

அந்த சிவபெருமானின் திருவிளையாடல் தான் இது என்பதை உணர்ந்த சுந்தரர் திருமுதுகுன்றம் சென்று ஈசனிடம் மன்னிப்பு கேட்டு பாடலைப் பாடி இழந்த செல்வத்தை திரும்பவும் பெற்றுக்கொண்டார். சுந்தரரை வழிமறித்த வேடன், முருகப்பெருமான்தான் என்பதை உணர்த்துவதற்கு திருமுதுகுன்றம் மேற்கு பகுதியில், சுந்தருக்கு காட்சியளித்து அருள் பாவித்தார் முருகன். காட்சியளித்த அந்த இடத்தில் ‘குளஞ்சி’ எனப்படும் மரங்கள் அதிகமாக இருந்ததால் அந்த இடம் ‘குளஞ்சியப்பர்’ என்ற பெயரைக் கொண்டது. காலப்போக்கில் ‘குளஞ்சியப்பர்’ என்ற பெயர் மருவி ‘கொளஞ்சியப்பர்’ என்று தற்போது  அழைக்கப்பட்டு வருகிறது.

kolanjiappar

பலன்கள்
இந்த கோவிலின் மற்றொரு சிறப்பு சீட்டு கட்டுதல். நம் மனதில் இருக்கும் குறைகளை ஒரு வெள்ளைக் காகிதத்தில் எழுதி அர்ச்சகரிடம் கொடுத்து கொளஞ்சியப்பரின் காலடியில் வைத்து அர்ச்சனை செய்து, பின்பு ஒரு சிறிய நூலில் கட்டி முனியப்பர் சந்நிதியில் இருக்கும் வேலில்  தொங்க விட்டால் நினைத்த காரியமானது 90 நாட்களில் நிறைவேறும் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை. நம்பிக்கையோடு சீட்டு கட்டுபவர்களின் பிரார்த்தனையும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

நாம் வேண்டிக்கொள்ளும் கோரிக்கையானது நிறைவேறிவிட்டால் ‘அந்த சீட்டை திரும்பவும் வந்து பெற்றுக் கொள்கின்றேன்’, என்றும் வேண்டிக்கொண்டு, நம் கோரிக்கையானது நிறைவேற்றப்பட்ட பின்பு, திரும்பவும் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி கொளஞ்சியப்பரை வழிபட்டு செல்வது வழக்கமாக இருக்கிறது.

செல்லும் வழி
விருதாச்சலத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் மணவாளநல்லூர் அமைந்துள்ளது.

தரிசன நேரம்:
காலை 06.30AM – 08.30PM

முகவரி:
அருள்மிகு கொளஞ்சியப்பர் திருக்கோயில்
மணவாளநல்லூர்-606001,
விருத்தாசலம்,
கடலூர் மாவட்டம்.

தொலைபேசி எண்
91-4143-230 232
9362151949.

இதையும் படிக்கலாமே
இந்த சிறிய மிளகிற்கு ஆன்மிகத்தில் இத்தனை சக்தியா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Kolanjiappar temple history in Tamil. Kolanjiappar temple details in Tamil. Kolanjiappar temple timings. Kolanjiappar koil varalaru in Tamil.