கறிக்குழம்பை மிஞ்சும் சுவையில், கொண்டைக்கடலை குருமா ரெசிபி உங்களுக்காக. இந்த குழம்பு வாசம் வீசினா, உங்க வீட்ல கறி குழம்பா? நிச்சயம் எல்லோரும் கேட்பாங்க.

channa-gravy
- Advertisement -

அசைவம் சாப்பிட முடியாத நேரங்களில், அசைவ சாப்பாடு சாப்பிட வேண்டும். கறி குழம்பு ஊற்றி சாதம் சாப்பிட வேண்டும் என்று தோன்றும் போது, கொண்டைக்கடலையை வைத்து இப்படி ஒரு குழம்பை செய்து சாப்பிடுங்கள். நிறைவான அசைவ குழம்பு சாப்பிட்ட திருப்தியை இந்த கிரேவி உங்களுக்கு கொடுக்கும். மிக மிக சுலபமான முறையில் ஒரு ‘கொண்டை கடலை மீல் மேக்கர் கிரேவி’ எப்படி செய்வது தெரிந்துகொள்வோம் வாருங்கள். முதலில் ஒரு கைப்பிடி அளவு கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே தண்ணீரில் போட்டு ஊற வைத்துக் கொள்ளுங்கள். 8 மணி நேரம் ஊறிய கொண்டைகடலை நமக்கு தேவை.

அடுத்தபடியாக 10 லிருந்து 15 மீல்மேக்கரை தண்ணீரில் போட்டு ஒரு முறை கழுவி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மீல்மேக்கரை ஊற வைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஒருமுறை தண்ணீரில் போட்டு கழுவிக் கொண்டால் மட்டும் போதும். இப்போது நமக்கு குழம்பு செய்வதற்கு ஊற வைத்த கொண்டைக் கடலையும், கழுவிய மீல் மேக்கரும் தயாராக உள்ளது. வெள்ளை கொண்டைக் கடலை அல்லது கருப்பு கொண்டைகடலை இரண்டில் எது வேண்டும் என்றாலும் நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

- Advertisement -

அடுப்பில் ஒரு குக்கரை வைத்துக் கொள்ளுங்கள். அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கிராம்பு – 3, பட்டை – 3, பிரியாணி இலை – 1, ஏலக்காய் – 2, சோம்பு – 1 ஸ்பூன், வர மிளகாய் – 2, கறிவேப்பிலை – 1 கொத்து, இந்த பொருட்களை சேர்த்து தாளித்து விடவேண்டும்.

அதன் பின்பு மிகப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 2, சேர்த்து வெங்காயத்தை பொன் நிறம் வரும் வரை வதக்க வேண்டும். அடுத்து மீடியம் சைஸ் – 2 தக்காளிப் பழங்களைப் பொடியாக வெட்டி போட்டு, இரண்டு சிட்டிகை உப்பு போட்டு நன்றாக வதக்கி, தக்காளி பச்சை வாடை நீங்கியதும் 1 டேபிள் ஸ்பூன் – இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, 2 ஸ்பூன் – கரம் மசாலா, சேர்த்து நன்றாக வதக்கி விட்டு இறுதியாக காரத்திற்கு 1 ஸ்பூன் – மிளகாய்த் தூளும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அதன் பின்பு இந்த கிரேவிக்கு தேவையான அளவு தண்ணீர். 2 பெரிய டம்ளர் அளவு தண்ணீர் சரியானதாக இருக்கும். தண்ணீரையும் ஊற்றி கொள்ளுங்கள். ஊற வைத்த கொண்டைக் கடலையையும் மீல்மேக்கரையும் குக்கரில் உள்ள குழம்பில் போட்டு, குழம்பு தேவையான அளவு உப்பு போட்டு, ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடுங்கள்.

அதற்குள் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 2 கைப்பிடி அளவு – தேங்காய் துருவல், கசகசா – 1/2 ஸ்பூன், சோம்பு – 1/2 ஸ்பூன், சேர்த்து விழுதாக அரைத்து இந்த விழுதை கொதிக்கும் குழம்பில் ஊற்றி, மேலே கொத்தமல்லி தழையை தூவி குக்கரை மூடி மிதமான தீயில் 3 விசில் வைத்தால் போதும். (கசகசா இல்லை என்றால் பொட்டுகடலை அல்லது முந்திரிப்பருப்பு கூட நாம் சேர்த்துக் கொள்ளலாம்.)

கமகம வாசத்தோடு அருமையான ஒரு கிரேவி தயாராகி இருக்கும். இந்த கிரேவியை சுடச்சுட சாதம் சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள சைட் டிஷ் ஆக வைத்து பாருங்கள் அருமையான சுவை. உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -