உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய காய்களில் இந்த கோவக்காயும் ஒன்று. ஆனால் நிறைய பேர் இதை எப்படி பக்குவமாக செய்வது என்று தெரியாமல், இந்த காயை வாங்கி சமையலில் சேர்த்துக் கொள்ளவே மாட்டார்கள். மிக மிக சுலபமான முறையில் பக்குவமாக கோவக்காய் வறுவல் எப்படி செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

முதலில் 1/4 கிலோ அளவு கோவக்காயை வாங்கி கழுவி நீளவாக்கில் நான்கு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். இந்த கோவைக்காயில் ஒரு ஸ்பூன் அளவு உப்பு போட்டு கோவக்காயை உங்கள் கையை வைத்து 2 நிமிடங்கள் அழுத்தம் கொடுத்து நன்றாக பிசைந்து விட வேண்டும். இப்படி செய்தால் கோவைக்காயின் மேலே இருக்கும் பிசுபிசுப்பு தன்மை முற்றிலுமாக நீங்கிவிடும்.
உப்பு போட்டு பிசைந்த கோவக்காயை 1/2 மணி நேரம் மூடி போட்டு அப்படியே ஊற வைத்து விடுங்கள். அரை மணிநேரம் உப்பில் ஊறிய பின்பு கோவையிலிருந்து தண்ணீர் விட்டிருக்கும். உப்பில் ஊறிய இந்த கோவக்காய்களை தண்ணீர் இல்லாமல் நன்றாக பிழிந்து தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதிலிருந்து வடிந்த உப்புத்தண்ணீரை கீழே கொட்டி விடலாம். இப்போது நமக்கு வருவல் செய்ய கோவக்காய்கள் தயாராக உள்ளது. இது இப்படியே இருக்கட்டும்.

அடுத்தபடியாக ஒரு மிக்ஸி ஜாரில் நான்கு வரமிளகாயை போட்டு தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக் கொள்ள வேண்டும். பார்ப்பதற்கு இது சில்லி ஃபிளக்ஸ் போல இருக்கும். இதுவும் அப்படியே இருக்கட்டும்.
இப்போது கோவக்காய் பொரியல் செய்ய தொடங்கிவிடலாம். அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் எண்ணெயில் 1/2 ஸ்பூன் அளவு மஞ்சள்தூளை போட்டு லேசாக சிவக்க வைத்து, உடனேயே பிழிந்து வைத்திருக்கும் கோவக்காயை கடாயில் போட்டு, நன்றாக வதக்கவேண்டும். இந்த கோவக்காய்கள் சிவந்து பச்சை நிறத் தோல், கோல்டன் கலர் வரும் வரை வதக்க வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளுங்கள். கோவக்காய் சிவக்க பத்து நிமிடங்கள் கட்டாயமாக எடுக்கும்.

கோவக்காய் நன்றாக வதங்கி சிவந்து வந்த பிறகு, மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் சில்லி ஃப்ளேக்ஸ், பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயத்தை சேர்த்து மீண்டும் வதக்க தொடங்குங்கள். வெங்காயம் நன்றாக வதங்கி பாவக்காய் உடன் ஒட்டி பிடித்து வர வேண்டும். உப்பு சேர்க்க தேவை இருக்காது. ஏற்கனவே கோவக்காயில் உப்பு போட்டு ஊற வைத்து இருக்கின்றோம். உங்களுக்கு தேவைப்பட்டால் வெங்காயத்திற்கு மட்டும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.

நாம் கடாயில் போட்டிருக்கும் கோவக்காயும் வெங்காயமும் சேர்ந்து சிவந்து ட்ரையாக வர வேண்டும். அதன் பின்பு அடுப்பை அணைத்து விட்டு, சுடச்சுட பரிமாறுங்கள். சூப்பரான கோவக்காய் ப்ரை தயார். உங்களுக்கு இந்த கோவக்காய்க்கு இன்னும் கொஞ்சம் காரம் தூக்கலாக வேண்டுமென்றால், மிளகாய் வத்தலை கொஞ்சம் அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். அவ்வளவு தான். மிஸ் பண்ணாம உங்க வீட்ல இந்த சிம்பிள் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க