குக்கரில் 2 விசில் விட்டு எடுத்தால் போதும் பொலபொலவென வித்தியாசமான சுவையில் குடை மிளகாய் சாதம் நொடியில் தயாராகி விடுமே! ஒருமுறை செஞ்சா திரும்பத் திரும்ப செய்வீங்க.

capsicum-pulao1
- Advertisement -

தினமும் சாம்பார் சாதம் சாப்பிட்டு போரடித்து போனவர்களுக்கு விதவிதமான கலவை சாதம் செய்து சாப்பிட பிடிக்கும். அந்த வகையில் இந்த குடை மிளகாய் சாதம் ரொம்பவே வித்தியாசமான சுவையுடன் நிச்சயம் இருக்கும். ரொம்ப ரொம்ப சுலபமாக குக்கரில் 2 விசில் விட்டு எடுத்தால் போதும், உதிரியான சுவையான குடை மிளகாய் சாதம் ரெடி. குடை மிளகாய் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது என்பதால் அடிக்கடி இதனை சாப்பிட தூண்டும் வகையில் அலாதியான சுவையில் இருக்கும். ஒருமுறை செஞ்சா நீங்கள் திரும்ப திரும்ப இதையே செய்யும் அளவிற்கு சுலபமாகவும் இருக்கும். இந்த குடை மிளகாய் சாதம் எப்படி செய்வது? என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

capsicum

குடைமிளகாய் சாதம் செய்ய தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி – ஒரு கப், புளி – ஒரு எலுமிச்சை அளவு, நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன், வெந்தயம் – கால் டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், கடலைப் பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன், வேர்க் கடலை – 2 டேபிள் ஸ்பூன், இஞ்சி – ஒரு துண்டு, பூண்டு – 10 பல், பச்சை மிளகாய் – 6, பெரிய வெங்காயம் – ஒன்று, கறிவேப்பிலை – ஒரு கொத்து, நறுக்கிய குடை மிளகாய் – அரை கப், உப்பு – தேவையான அளவு, பெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன், மல்லித்தழை – சிறிதளவு.

- Advertisement -

குடைமிளகாய் சாதம் செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு கப் அளவிற்கு பாஸ்மதி அரிசியை எடுத்து அலசி தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் ஊற வைத்து கொள்ளுங்கள். ஒரு எலுமிச்சை பழம் அளவிற்கு புளியை உருட்டி ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு மேல் தண்ணீர் சேர்க்க தேவையில்லை. அதற்குள் தேவையான காய்கறிகளை வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். இந்த ரெசிபியில் குடை மிளகாய்க்கு பதிலாக பஜ்ஜி மிளகாய் கூட பயன்படுத்தலாம், ரொம்ப ருசியாக இருக்கும். அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு குக்கரை வைத்துக் கொள்ளுங்கள். 2 டேபிள்ஸ்பூன் அளவிற்கு நல்லெண்ணெய் விட்டுக் கொள்ளுங்கள். நல்லெண்ணெய்க்கு பதிலாக கடலெண்ணெய் கூட பயன்படுத்தலாம்.

capsicum-pulao

எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் கால் டீஸ்பூன் கடுகு போட்டு பொரிய விடுங்கள், கடுகு நன்கு பொரிந்ததும், உளுந்து சேர்த்து பொன்னிறமாக வதக்குங்கள். பின்னர் வெந்தயம், சீரகம் சேர்த்து பொரிய விடுங்கள். இவை பொரிந்து வந்ததும் கடலைப்பருப்பு, தோலுரித்த வேர்க்கடலை ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் தோலுரித்த இஞ்சி ஒரு துண்டு அளவிற்கு எடுத்து சிறிது சேர்த்துக் கொள்ளலாம். அல்லது நீளநீளமாக வெட்டியும் சேர்த்துக் கொள்ளலாம்.

- Advertisement -

பின்னர் தோல் உரித்த 10 பல் பூண்டு, காரத்திற்கு 6 பச்சை மிளகாய்கள் கீறி சேர்த்துக் கொள்ளுங்கள். நீள நீளமாக மெல்லியதாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதம் வரும் அளவிற்கு நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கி வந்ததும் ஒரு கொத்து கறிவேப்பிலையை கழுவி சேர்த்து கொள்ளுங்கள். பின்னர் பஜ்ஜி மிளகாய் அல்லது குடை மிளகாய் அரை கப் அளவிற்கு பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். நன்கு எல்லாவற்றையும் கலந்து தேவையான அளவிற்கு உப்பு போட்டுக் கொள்ளுங்கள்.

குடை மிளகாய்

ஒரு கப் பாஸ்மதி அரிசிக்கு, ஒரு கப் அளவிற்கு புளித் தண்ணீர் சேர்த்து அதனுடன் அரை கப் அளவிற்கு சாதாரண தண்ணீர் கலந்து கொள்ளுங்கள். ஆக ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீர் சேர்க்க வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்து வந்ததும் பெருங்காயத்தூள் சேர்த்து அரிசியை போட்டுக் கொள்ளுங்கள். இப்போது குக்கரை மூடி வைத்து ரெண்டு விசில் விட்டு எடுத்தால் போதும், பொலபொலவென அரிசி வெந்து சுவையான குடைமிளகாய் சாதம் தயாராகி விட்டிருக்கும். நறுக்கிய மல்லித்தழை சிறிதளவு சேர்த்து கலந்துவிட்டு சுடச்சுட பரிமாறினால் அட்டகாசமான சுவையுடன் இருக்கும். இதே முறையில் நீங்களும் ஒருமுறை செய்து பார்த்து உங்கள் வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்தி விடுங்கள்.

- Advertisement -