ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு அற்புத நாளாக திகழ்கிறது. ஆடி மாதம் முழுவதும் வழிபாடு செய்யாதவர்கள் கூட இந்த ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை வழிபாடு செய்வதன் மூலம் அம்மனின் அருளை பரிபூரணமாக பெற முடியும். அந்த வகையில் ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை குலதெய்வத்தையும் அதே சமயம் அங்காள பரமேஸ்வரியையும் வீட்டிற்கு அழைத்து அவர்களின் அருளை பெறுவதற்கு செய்ய வேண்டிய ஒரு வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
குலதெய்வம் அருளை பெற
அம்மன் வழிபாட்டிற்கு உகந்த மாதமாக திகழக்கூடிய ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தாக திகழ்கிறது. அன்றைய நாளில் அனைத்து அம்மன் ஆலயங்களிலும் சிறப்பான பூஜைகளும் வழிபாட்டு முறைகளும் நடைபெறும். அதில் கலந்து கொள்வதோடு சேர்த்து நம்முடைய வீட்டிலும் நாம் அங்காள பரமேஸ்வரியையும் நம்முடைய குலதெய்வத்தையும் வழிபாடு செய்வதன் மூலம் அவர்களின் அருளை பரிபூரணமாக பெறுவதோடு நம் வாழ்க்கையில் அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும்.
ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வாசலில் மஞ்சள் தண்ணீர் தெளித்து மாக்கோலம் போட்டு நிலைவாசலில் மாவிலை தோரணத்தை கட்ட வேண்டும். பிறகு வீட்டு பூஜை அறையில் எப்பொழுதும் போல் சுவாமி படங்களுக்கு பூக்களை சாற்றி தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள். மூன்று கிண்ணங்களை எடுத்து ஓன்றில் நிறைய கல்லுப்பையும், ஒன்றில் நிறைய புளியையும், ஒன்றில் நிறைய சர்க்கரையையும் எடுத்து பூஜை அறையில் வைக்க வேண்டும்.
பிறகு ஒரு சொம்பை எடுத்து அது நிறைய சுத்தமான தண்ணீரை பிடித்து பூஜையில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த சொம்பிற்கு மேல் ஒரு வெற்றிலையை வைக்க வேண்டும். பன்னீர் ஊற்றி மஞ்சளை நன்றாக குழைத்து சிறு சிறு உருண்டைகளாக ஒவ்வொரு நபர்களின் பெயரை கூறிக்கொண்டு அந்த வெற்றிலையின் மேல் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு புள்ளி இல்லாத எலுமிச்சம் பழத்தை எடுத்து இரண்டாக நறுக்கி இரண்டு எலுமிச்சை தீபத்தை போட்ட வேண்டும். இப்பொழுது “ஓம் அங்காள பரமேஸ்வரி தாயே நமோ நம” என்னும் மந்திரத்தை 21 முறை கூற வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி காலை வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள்.
மாலை நேரத்தில் வீட்டில் வாசலில் திரும்பவும் தண்ணீர் தெளித்துக் கோலம் போட வேண்டும். பிறகு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய தீபங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். வீட்டு வாசலில் ஒரு தட்டில் கற்பூரத்தை ஏற்றி வைத்து அங்காள பரமேஸ்வரி தாயின் மந்திரத்தை திரும்பவும் கூறி அந்த கற்பூரம் அணியாமல் வீட்டிற்குள் எடுத்து வந்து வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய சுவாமி படங்களுக்கு ஆரத்தி காட்ட வேண்டும். பிறகு வீட்டு பூஜை அறையில் ஒரு ஐந்து முக குத்து விளக்கை ஏற்றி வைத்து அங்காள பரமேஸ்வரியின் மந்திரத்தை 21 முறை திரும்பவும் கூறி அந்த குத்து விளக்கிக்கு மலர்களால் அர்ச்சனை செய்து கொள்ளுங்கள்.
அந்த குத்துவிளக்கிற்கு முன்பாக ஒரு தாம்பாள தட்டில் ஒரு வெற்றிலையை வைத்து அந்த வெற்றிலைக்கு மேல் புள்ளி இல்லாத நல்ல எலுமிச்சம் பழமாக ஒரு எலுமிச்சம் பழத்தை வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய குலதெய்வத்தின் பெயரையோ அல்லது மந்திரத்தையோ கூறி அந்த எலுமிச்சம் பழத்திற்கு 51 முறை குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்துவிட்டு அர்ச்சனை செய்த குங்குமத்தை எடுத்து நெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும்.
அந்த எலுமிச்சம் பழத்தை எடுத்து இரண்டாக நறுக்கி நாம் காலையில் எடுத்து வைத்திருந்த சொம்பு தண்ணீரில் சாறு பிழிந்து எலுமிச்சம் சாராக கலந்து சுவாமிக்கு நெய்வேத்தியம் வைத்துவிட்டு குடும்பத்தில் இருக்கக்கூடிய அனைவரும் அதை பருக வேண்டும். காலையில் வைத்த உப்பு, புளி, சர்க்கரையை எடுத்து நாம் சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே: பணத்தடை நீக்கும் தேய்பிறை சஷ்டி
இப்படி ஆடி வெள்ளிக்கிழமை வழிபாடு செய்வதன் மூலம் அங்காள பரமேஸ்வரியின் அருளையும் குலதெய்வத்தின் அருளையும் பரிபூரணமாக பெற முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்