10 நிமிஷத்துல குட்டி குட்டி போண்டாவும், சூப்பர் சட்னியும் இப்படிக்கூட செய்யலாமா? உடனே செஞ்சு பார்க்கலாம் போலிருக்கே!

kutty-bonda-chutney
- Advertisement -

பத்து நிமிசத்தில குட்டி குட்டி போண்டா செஞ்சு அசத்தினா குழந்தைகள் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னியோ இப்படி அரச்சு கொடுத்து பாருங்க, ஒரு போண்டா கூட மிச்சம் இருக்காது. பள்ளி சென்று வரும் குழந்தைகளும் அல்லது வேலைக்கு சென்று வரும் பெரியவர்களும் சாப்பிட ஏதாவது கேட்டால் சட்டென்று மாலை நேரத்தில் டீயுடன் இப்படி ஒரு ஸ்நாக்ஸ் வகையை செய்து கொடுத்துப் பாருங்கள், உங்களை பாராட்டி தள்ளி விடுவார்கள். குட்டி குட்டி போண்டாவும், சூப்பர் சட்னியும் செய்வது எப்படி? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

குட்டி போண்டா செய்ய தேவையான பொருட்கள்:
மைதா மாவு – ஒரு கப், சீரகம் – ஒரு டீஸ்பூன், தயிர் – முக்கால் கப், சோடா உப்பு – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – தேவைக்கு ஏற்ப.

- Advertisement -

சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
தேங்காய் – இரண்டு பத்தை, இஞ்சி – ஒரு இன்ச், பொட்டுக்கடலை – 4 டீஸ்பூன், கறிவேப்பிலை – 2 இணுக்கு, பச்சை மிளகாய் – 1, உப்பு – தேவையான அளவு. தாளிக்க: கடுகு – கால் டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், வர மிளகாய் – 1.

குட்டி போண்டா செய்முறை விளக்கம்:
முதலில் குட்டி குட்டி போண்டா செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அளவிற்கு மைதா மாவை எடுத்துக் கொள்ளுங்கள். மைதா மாவு சேர்க்க விரும்பாதவர்கள் கோதுமை மாவு கூட எடுத்துக் கொள்ளலாம். இத்துடன் தேவையான அளவிற்கு உப்பு போட்டு கலந்து கொள்ளுங்கள். பின்னர் ஒரு டீஸ்பூன் அளவிற்கு சீரகம் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு கப் மாவிற்கு முக்கால் கப் அளவிற்கு தயிர் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

நீங்கள் சேர்த்து இருக்கும் தயிர் அதிகம் புளித்திருக்கக் கூடாது. போண்டா உப்பி வர கால் டீஸ்பூன் அளவிற்கு சோடா உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை ஊற்றி முட்டையைப் பீட் செய்வது போல நன்கு அடித்து தளர்வாக்கி கொள்ளுங்கள். மாவை கையில் எடுத்து கீழே போட்டால் பொத்தென்று விழ வேண்டும். இந்த பதத்திற்கு மாவை செய்து கொண்டு 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதற்குள் போண்டாவிற்கு தொட்டுக் கொள்ள ஒரு சுவையான தேங்காய் சட்னி செய்து விட்டு வரலாம்.

தேங்காய் சட்னி செய்முறை விளக்கம்:
ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தேங்காய் பத்தை சில்லுகளாக நறுக்கி சேர்த்து கொள்ளுங்கள். ஒரு இன்ச் அளவிற்கு இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளுங்கள். பின்னர் பொட்டுக்கடலை தேவையான அளவிற்கு, பச்சை மிளகாய், கொஞ்சம் கறிவேப்பிலையை சேர்த்து நன்கு நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்து எடுத்த இந்த சட்னிக்கு தாளிப்பு கொடுக்க ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள்.

கடுகு பொரிந்ததும் சீரகம், கறிவேப்பிலை, வரமிளகாய் ஒன்று ஆகியவற்றை கிள்ளி சேர்த்து தாளித்து சட்னியுடன் கொட்டி இறக்கி விடுங்கள். பின்னர் ஒரு வாணலியில் தேவையான அளவிற்கு எண்ணெயை காயவிட்டு சிறு சிறு போண்டாக்களாக மாவை போட்டு பொன்னிறமாக எல்லாப் புறங்களிலும் சிவக்க வறுத்து எடுக்க வேண்டும். இது கொஞ்சம் கூட எண்ணெய் குடிக்காது. ரொம்பவே சுவையான இந்த குட்டி போண்டாவும், தேங்காய் சட்னியும் செய்வதற்கு பத்து நிமிடம் கூட ஆகாது. குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இந்த போண்டாவை அவர்கள் கேட்கும் பொழுதெல்லாம் சட்டுன்னு செய்து கொடுக்கலாம்.

- Advertisement -