மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிறப்பு தகவல்கள்

- Advertisement -

“தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என நமது தமிழ் மக்களின் கொள்கையாகும். மேல்கூறப்பட்ட வரிகளில் நமது நாட்டின் தென்பகுதியில் வாழ்ந்தவர்களின் இறைவன் சிவ பெருமான் என உறுதியாகிறது. அந்த சிவ பெருமானுக்கு தமிழ் நாட்டில் உள்ள அளவுக்கு பிற பகுதிகளில் கோவில்கள் இருக்குமா என்பது ஒரு கேள்வியாகவே இருக்கிறது. தமிழர்களின் தொன்மைக்கு சாட்சியாகவும் இன்றும் உயிர்ப்போடு இருக்கும் ஒரு நகரம் மதுரை மாநகரம். அந்த “மதுரையை அரசாளும் மீனாட்சி” அம்மன் வீற்றிருக்கும் “மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரரின் கோவில்” குறித்த சிறப்பு தகவல்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தல வரலாறு

“5000” வருடங்களுக்கு மேல் இன்றும் மக்கள் வாழும் உலகின் ஒரு சில நகரங்களில் “மதுரை” மாநகரும் ஒன்று. மேற்குலக நாட்டின் கலாச்சார மையமாக கிரேக்கத்தின் “ஏதென்ஸ்” நகரம் போல கிழக்கத்திய நாட்டின் கலாச்சார மையமாக மதுரை மாநகர் இருந்ததால் இதை “கிழக்கின் ஏதென்ஸ் நகரம்” என அழைக்கின்றனர். மதுரை நகருக்கு “ஆலவாய், நான்மாடக்கூடல்” போன்ற பல பெயர்கள் இருக்கின்றன. இந்த மிகச்சிறந்த பெருமையை தருவது மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலாகும். இக்கோவிலின் இறைவனான சிவ பெருமான் “சொக்கநாதர், சோமசுந்தரர், மீனாட்சி சுந்தரேஸ்வரர்” என அழைக்கப்படுகிறார். அம்பாள் “மீனாட்சி, அங்கயற்கன்னி” என அழைக்கப்படுகிறாள். பார்வதி தேவியின் 51 சக்தி பீடங்களில் ஒன்றானது இக்கோவில். கடம்ப மரங்கள் ஒரு காலத்தில் இங்கு அதிகம் காணப்பட்டத்தால் மதுரைக்கு “கடம்பவனம்” என்கிற ஒரு பெயரும் உண்டு. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தல விருட்சமாக கடம்ப மரமே இருக்கிறது.

- Advertisement -

இக்கோவில் இருக்கும் மதுரை மாநகரம் முற்காலம் முதலே “பாண்டிய மன்னர்களின்” தலைநகரமாக இருந்து வருகிறது. புராணங்களின் படி குழந்தை பேறில்லாமல் தவித்து வந்த “மலையத்துவஜ” பாண்டிய மன்னனுக்கு, அந்த பார்வதி தேவியே மகளாக பிறந்தாள். அக்குழந்தைக்கு தடாதகை என பெயர்சூட்டி வளர்த்து வந்தார் மலையத்துவஜ பாண்டியன். தடாதகை மங்கையாக வளரும் காலத்தில் போர்கலைகளை கற்று, பல்வேறு நாடுகளின் மீது போர் தொடுத்து அவற்றை வென்றெடுத்தாள்.

கயிலாயத்தில் இருக்கும் சிவபெருமானிடம் போர்புரிய சென்ற போது அவரின் மீது பிரியம் ஏற்பட்டு அவரையே தனது கணவனாக ஏற்க விருப்பம் கொண்டாள. சிவன் பார்வதி திருகல்யாணத்தை தேவலோகவாசிகள், சித்தர்கள், முனிவர்கள் அனைவரும் கயிலையில் திரண்டனர். பிரம்ம தேவன் முன்னின்று இத்திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார். பாண்டிய மன்னரின் மருமகன் ஆனதால் சிவபெருமானுக்கு “சோமசுந்தர பாண்டியன்” எனும் பெயர் ஏற்பட்டது. அன்னை பார்வதி மீன் கொடியை கொண்ட பாண்டிய மன்னர் பரம்பரையின் அரசியாக இருப்பதாலும், மீன் எப்படி எந்நேரமும் விழித்திருக்கிறதோ, அப்படி எந்நேரமும் தனது பக்தர்களை துன்பங்களிலிருந்து காத்து, அவர்களுக்கு அருள் புரிவதாலும் இங்கு வீற்றிருக்கும் அன்னை மீனாட்சி என அழைக்கப்படுகிறாள்.

- Advertisement -

அழகிய சிற்பங்கள், வானுயர்ந்த கோபுரங்கள் கொண்ட இக்கோவில் 15 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்திய கோவில்களில் மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்று. இங்கு தேவியான மீனாட்சியம்மனுக்கே முதலில் பூஜைகள் செய்யப்படுகின்றன. இங்கிருக்கும் மீனாட்சியாம்மன் பச்சை பட்டுடுத்தி கையில் கிளியுடன் காட்சி தருகிறாள். சிவ பெருமான் இந்த மதுரை நகரில் 64 திருவிளையாடல்களை புரிந்துள்ளார். சிவபெருமானின் ஐந்து சபைகளில் மதுரை மீனாட்சியம்மன் கோவில் வெள்ளி சபையாக இருக்கிறது. இத்தலத்தில் சிவபெருமான் நடராஜராக பாண்டிய மன்னன் ஒருவருக்கு நடன தரிசனத்தை தந்த போது, அம்மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க தனது கால் மாற்றி சந்தியா தாண்டவம் எனும் நடனத்தை ஆடிக்காண்பித்தார்.

இக்கோவிலில் இருக்கும் குளத்திற்கு பெயர் பொற்றாமரை குளம். சிவ பெருமான் தனது சூலாயுததால் தரையில் கீறி இக்குளத்தை உண்டாக்கியதாக தல வரலாறு கூறுகிறது. சிவ பெருமான் தன் மீது பக்தி கொண்ட ஒரு நாரைக்கு இந்த பொற்றாமரை குளத்தில் மீன்களோ, இன்ன பிற உயிரினங்களோ வாழாது என்று அருளிய வாறே இன்றும் இந்த குளத்தில் எந்த ஒரு நீர் வாழ் உயிரிங்களும் இல்லாதிருப்பது அதிசயம் ஆகும்.

- Advertisement -

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தல சிறப்பு

மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்கள் காலத்தில் இக்கோவில் பல முறை சீரமைத்து கட்டப்பட்டு, அங்கு பராமரிக்க பட்டு வந்தது. 13 ஆம் நூற்றாண்டில் டில்லியிலிருந்து வந்த துருக்கிய வம்ச மன்னர்களின் படையெடுப்பால் மீனாட்சி அம்மன் கோவில் சேதமடைந்தது. அதற்கு பிறகான காலத்தில் மதுரையை கைப்பற்றி ஆட்சி புரிந்த நாயக்க மன்னர்கள் மதுரை மீனாட்சி அம்மனின் கோவிலின் சேதங்களை சீர்படுத்தி மீண்டும் நன்கு கட்டினர். இப்போது இக்கோவிலில் இருக்கும் நான்கு கோபுரங்களும் நாயக்க மன்னர்களால் நன்கு சீர்படுத்தி கட்டப்பட்டவையாகும்.

நாயக்க மன்னர்களில் திருமலை நாயக்க மன்னர் இக்கோவிலின் இறைவன் மற்றும் இறைவியான மீனாட்சி அம்மனின் தீவிர பக்தராக இருந்தார். இவர் காலத்தில் மீனாட்சி அம்மன் கோவில் நன்கு பராமரிக்க பட்டது. இந்த திருமலை நாயக்க மன்னர் தான் மதுரையின் புகழுக்கு மற்றொரு காரணமாக இருக்கும் சித்திரை மாதத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சார்பாக கொண்டாடப்படும் “சித்திரை திருநாள்” விழாவை வெகு விமர்சையாக கொண்டாடும் படி செய்தார்.

சிற்ப கலைநயமிக்க இக்கோவிலில் 7 ஸ்வரங்களின் ஒலியை எழுப்பும் வகையில் தூண்கள் செதுக்கப்பட்டுள்ள. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பார்த்து வியந்து போகும் வகையில் “1000 கால் மண்டபம்” எனும் தூண்கள் உள்ள பகுதியிங்கு இருக்கிறது. உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இருக்கிறது. இக்கோவிலில் இருக்கும் முக்குறுணி விநாயகர் சந்நிதியில் வழங்கப்படும் திருநீர் பல நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டதாக பக்தர்களால் கருதப்படுகிறது.

நவகிரகங்களில் “புதன்” பகவானுக்குரிய சிறந்த பரிகாரத்தலமாக மதுரை மீனாட்சியம்மன் கோவில் இருக்கிறது. சிவ பெருமானே “சுந்தரானந்த சித்தர்” என்கிற பெயரில் மதுரையில் வாழ்ந்து, பிறகு இக்கோவிலில் ஐக்கியமாகி பக்தர்களின் அனைத்து குறைகளையும் தீர்ப்பதாக கூறப்படுகிறது. எல்லா வகையான கோரிக்கைகள் மற்றும் வேண்டுதல்களோடு இங்கு வந்து வழிபடும் பக்தர்கள், அக்கோரிக்கை நிறைவேறிய உடன் மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரருக்கு வஸ்திரம் சாற்றியும், அன்னதானம் செய்தும் தங்களின் நேர்த்தி கடனை செலுத்துகின்றனர்.

கோவில் அமைவிடம்

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மதுரை மாவட்டத்தில் உள்ள மதுரை நகரில் அமைந்துள்ளது. மதுரை மாநகரத்திற்கு செல்ல தமிழகம் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து பேருந்து, ரயில் மற்றும் விமான போக்குவரத்து வசதிகள் இருக்கின்றன.

கோவில் நடை திறந்திருக்கும் நேரம்

காலை 5 மணி முதல் மதியம் 12.30 மணி வரை. மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை.

கோவில் முகவரி

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்
மதுரை மாநகரம்
மதுரை மாவட்டம் – 625 001

தொலைபேசி எண்

452 – 2349868

452 – 2344360

இதையும் படிக்கலாமே:
திருவண்ணாமலை கோவில் சிறப்பு தகவல்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Madurai meenakshi temple details in Tamil language. We have Madurai Meenakshi amman kovil timing, Madurai Meenakshi amman kovil history in Tamil or Madurai Meenakshi amman kovil varalaru in Tamil, Madurai Meenakshi amman kovil thiruvila in Tamil.

- Advertisement -