18-09-2024 முதல் 2-10-2024 வரை மகாளய பட்சம் இருக்கிறது. அதாவது இந்த நாளில் நம்முடைய முன்னோர்கள் பூலோகத்திற்கு வருவதாக ஐதீகம். இந்த 15 நாட்களும் முன்னோர்களை நினைத்து, நாம் செய்யும் ஒரு சின்ன விஷயம் கூட, நமக்கு பெரிய அளவில் பலன்களை கொடுக்கும் என்பது நம்பிக்கை. உங்களுடைய குடும்பத்தில் முன்னோர்கள் சாபம், இருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.
பித்ரு தோஷத்தால் குடும்பத்தில் திருமண தடை இருக்கிறது, குழந்தை பாக்கியம் இல்லை, தீராத பண பிரச்சனை அல்லது நோய்நொடி பிரச்சனை ஏதாவது இருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். எங்கள் வீட்டில் எந்த கஷ்டமும் கிடையாது. எங்கள் குடும்பத்திற்கு முன்னோர்களின் சாபமும் இல்லை, நாங்கள் இந்த பரிகாரத்தை செய்யலாமா என்று கேட்டால் தாராளமாக செய்யலாம். உங்களுக்கு மேலும் மேலும் பித்ருகளின் ஆசிர்வாதத்தை பெற்று தரும் பரிகாரம் இது.
மகாளய பட்சம் பரிகாரம்
இரவு எல்லா வேலையையும் முடித்து விடுங்கள். சமையலறையை கட்டாயமாக சுத்தம் செய்திருக்க வேண்டும். அதாவது எச்சில் பாத்திரத்தை தேய்த்து வைத்து விட்டு, சமையல் அறை அடுப்புக்கு வலது பக்கத்தில் ஒரு சொம்பில் சுத்தமான தண்ணீர் நிரப்பிக் கொள்ளுங்கள்.
சொம்பை ஒரு முறை நன்றாக தேய்த்து கழுவி விட்டு, அதன் பிறகு அதில் குளிக்கின்ற நல்ல தண்ணீரை ஊற்றி, வெறும் 3 அரிசிகள், கூடவே உங்கள் வீட்டில் இருக்கும் இனிப்பு பொருளை அந்த தண்ணீரில் போட வேண்டும். வெள்ளை சர்க்கரை, நாட்டு சர்க்கரை, பனங்கற்கண்டு உங்கள் வீட்டில் எது இருக்கிறதோ அதை கொஞ்சமாக அந்த தண்ணீரில் போட்டு அப்படியே திருந்த படி சமையலறையில் வைத்து விடுங்கள். மூன்று அரிசிகளுக்கு மேலாக ஒரு ஸ்பூன் அரிசி போட்டாலும் தவறு கிடையாது.
இந்த பரிகாரத்தை செய்யும் போது, சொம்பு தண்ணீரை சமையலறையில் வைக்கும் போது குலதெய்வத்தையும் மறைந்த முன்னோர்களையும் மனதார நினைத்துக் கொள்ளுங்கள் போதும். இந்த பரிகாரத்தை வீட்டில் இருக்கும் பெண்கள் கையால் செய்யலாம். பெண்களால் செய்ய முடியவில்லை என்றால் ஆண்களும் இந்த சொம்பை தயார் செய்து சமையல் அறையில் வைக்கலாம்.
இன்று இரவு தொடங்கி, 15 நாட்களும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு, முன்னோர்களை நினைத்து இந்த சொம்பு தண்ணீரை சமையலறையில் வைத்து வந்தால் உங்களுடைய வீட்டில் இருக்கும் அத்தனை கஷ்டங்களும், இந்த 13 நாட்களுக்குள் சரியாகிவிடும் என்பது நம்பிக்கை. முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பெற அவர்களுக்கு நீங்கள் இந்த உணவை வைப்பதாக அர்த்தம்.
பித்ருக்கள் பூலோகத்திற்கு வரும்போது, நிச்சயமாக உங்க வீட்டுக்கும் வருவாங்க. அவர்களை நினைத்து இந்த தண்ணீரை வைத்திருப்பதை, அவர்கள் பார்த்தால் நிச்சயம் சந்தோஷப்படுவார்கள். உங்களுக்கான ஆசியையும் வழங்குவார்கள். உங்கள் ஜாதக கட்டத்தில் பித்ரு சாபம் இருந்தால் கூட, அந்த சாபத்திலிருந்து விடுபட அந்த சாபத்தால் ஏற்படக்கூடிய தாக்கத்திலிருந்து விடுபட இந்த எளிமையான பரிகாரம் கை கொடுக்கும். சரி காலையில் எழுந்து இந்த தண்ணீரை என்ன செய்வது.
உங்கள் வீட்டில் இருக்கும் செடி கொடிகளுக்கு இந்த தண்ணீரை ஊற்றி விடலாம். செடி கொடிகள் இல்லை என்றால் மண் பாங்கான இடத்தில் இந்த தண்ணீரை ஊற்றி விடுங்கள். அவ்வளவுதான் பரிகாரம். இன்று தொடங்கி 15 நாள் இந்த பரிகாரத்தை தவறாமல் செய்யுங்கள். பெண்களுக்கு மாதவிலக்கு வந்துவிட்டது என்றாலும் பரவாயில்லை.
இதையும் படிக்கலாமே: உங்கள் ராசிக்கு பைரவர் கோவிலுக்கு எந்த கிழமையில் சென்றால் கடன் தீரும்.
இந்த பரிகாரத்தை நீங்கள் தாராளமாக செய்யலாம். எந்த ஒரு தவறும் கிடையாது. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த பரிகாரத்தை செய்து முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பெற்று பலன் அடையலாம் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.