பல இயற்கை மூலிகைகள் செய்யும் நன்மைகள் பற்றிய புரிதல்கள் காலப்போக்கில் மக்களிடையே மறைந்து வருகின்றது. இயற்கை நமக்கு கொடுத்த கொடைகளில் மூலிகையும் ஒன்று! மூலிகை பொருட்களில் இருக்கும் மருத்துவ மற்றும் ஆன்மீக குணங்களை தெரிந்து வைத்திருந்தால், ஆரோக்கியமான வாழ்வு செழிக்கும் என்பது நம் முன்னோர்கள் கூற்று! அந்த வகையில் மகிஷாஷி என்னும் ஒரு வகை சாம்பிராணி போல் இருக்கும் இந்த மூலிகை பற்றிய ரகசியங்களைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் தொடர்ந்து காண இருக்கிறோம்.
சாம்பிராணி போலவே காணப்படும் இந்த மூலிகை “மகிஷாஷி” என்பார்கள். நாட்டு மருந்து கடைகளில் இம்மூலிகை கிடைக்கும். பழங்காலங்களில் வீட்டில் சாம்பிராணிக்கு பதிலாக இதைத் தான் உபயோகப்படுத்தி வந்தார்கள். மகிஷா சூரணியாக இருக்கும் துர்க்கையின் அவதாரமாக இம்மூலிகை சொல்லப்பட்டுள்ளது. மூலிகையில் துர்க்கையின் அம்சம் நிறைந்திருக்கும்.
எப்போதும் வீட்டில் சாம்பிராணி தூபம் காட்டுவது போல, கொட்டாங்குச்சியை எரித்து தணல் போல செய்து கொள்ள வேண்டும். இந்த தகிக்கும் தணல் நெருப்பில் கொஞ்சம் போல மகிஷாஷி மூலிகையை நொறுக்கி நுணுக்கி போட வேண்டும். அதிலிருந்து வரும் புகையை வீடு முழுவதும் மூலை முடுக்குகள் விடாமல் எல்லா இடங்களிலும் பரவும் படியாக காண்பிக்க வேண்டும். இந்த தூபத்தை ராகு காலத்தில் மட்டுமே காண்பிக்க வேண்டும் என்பது விதியாகும்.
துர்க்கைக்கு உகந்த ராகு காலத்தில் செவ்வாய்க் கிழமையில் இந்த சாம்பிராணி தூபத்தை போட வேண்டும் என்பது சாஸ்திரங்கள் சொல்லும் நியதி! இப்படி துர்க்கைக்கு தூபம் போடும் பொழுது அதிலிருந்து ஒரு விசித்திரமான விஷயத்தை நாம் பார்க்க முடியும். சாம்பிராணி தூபம் எறியும் பொழுது துர்க்கை நடனம் ஆடுவது போல தூபம் எகிறி குதிக்கும். மகிஷாஷி மூலிகையின் அற்புதங்களில் இது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையிலும் ராகு கால வேளையில் இந்த மகிஷாஷி என்னும் மூலிகை தூபத்தை வீடு முழுவதும் போடுவதால் வல்வினைகள், செய்வினைகள், கண் திருஷ்டிகள், கண்ணேறுகள், வாஸ்து தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். மேலும் குடும்பத்தில் இருக்கும் சுபீட்சம் அதிகரிக்கும். மகாலட்சுமியின் வாசம் நிலைக்கும். துர்க்கை அம்மனின் ஆசீர்வாதமும், அருளும் கிட்டும்.
இதையும் படிக்கலாமே:
29-11-2024 வெள்ளிக்கிழமை செய்ய வேண்டிய பிரம்ம முகூர்த்த பூஜை
துர்கையின் அருள் இருந்தால் எந்த விதமான பிரச்சனைகளையும் எதிர்கொள்ள கூடிய தைரியம் பிறக்கும், தீய சக்திகள் நம்மை அண்டாது. துர்க்கையை வழிபடுபவர்கள் துன்பங்களை சந்திப்பது கிடையாது. கணவன் மனைவிக்குள் ஒற்றுமை நீடிக்கவும், குடும்பத்தில் ஏற்படக் கூடிய தொடர் பிரச்சனைகள் தீரவும் இந்த தூபத்தை தொடர்ந்து போட்டு வாருங்கள். தொழில் செய்யும் இடங்களில், வேலை செய்யக் கூடிய அலுவலகங்களில் கூட செவ்வாய்க்கிழமையில் ராகு கால வேளையில் மகிஷாஷி சாம்பிராணி தூபம் போடப்படுவதால் வருமானம் அதிகரிக்கும். தொழில் போட்டிகள் குறையும். பிரச்சனைகள் நீங்கி சுமூகமான தீர்வு கிடைக்கும். செவ்வாய்க் கிழமையில் ராகு காலத்தில் ஒரு எலுமிச்சையை இரண்டாக வெட்டி அதில் மஞ்சள் தடவி பின்பு குங்குமம் அதன் மீது பூசி நிலை வாசலில் இரண்டு புறமும் வைத்துவிட்டு, இந்த தூபம் காண்பித்து துர்க்கையை மனதார பிரார்த்தித்து வாருங்கள், எல்லா நன்மைகளும் உங்களுக்கு கிடைக்கும்.