நம்முடைய வாழ்க்கையில் நம்மை பாடாய்படுத்தக்கூடிய எந்த ஒரு தீய சக்தியாக இருந்தாலும், எதிர்மறை ஆற்றலாக இருந்தாலும், கஷ்டங்களாக இருந்தாலும் அவை அனைத்தையும் நீக்கி நமக்கு ஒரு நிம்மதியான வாழ்க்கையை தரக்கூடியவர்கள் தான் தெய்வங்கள். அதிலும் குறிப்பாக உக்கிர தெய்வங்கள் விரைவில் பலன் தரக்கூடியவர்களாக திகழ்கிறார்கள். அந்த வகையில் உக்கிர தெய்வங்கள் மிகவும் சக்தி வாய்ந்த காவல் தெய்வமாக திகழக்கூடியவர்தான் காலபைரவர். கால பைரவரை நாம் வழிபாடு செய்யும்பொழுது நம்மிடம் எந்த தீய சக்திகளும் அணுகாது. மேலும் நம்மை பாடாய்படுத்திக் கொண்டு இருக்கும் அனைத்து விதமான கஷ்டங்களும் நம்மை விட்டு நீங்கும் என்றே கூறலாம். அப்படிப்பட்ட கால பைரவரை நினைத்து செய்ய வேண்டிய ஒரு தேங்காய் வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
மன கஷ்டத்தை நீக்கும் வழிபாடு
சிவபெருமானின் அம்சமாக திகழக் கூடியவர் தான் காலபைரவர். அதேபோல்தான் தேங்காயும் சிவபெருமானின் அம்சம் என்று கூறப்படுகிறது. மேலும் புனிதமான பொருட்களுள் ஒன்றாகவும் தேங்காய் திகழ்வதால் அனைத்து விதமான தெய்வ வழிபாட்டிற்கும் தேங்காயை நாம் பயன்படுத்துகிறோம். நமக்கு இருக்கக்கூடிய பலவிதமான பிரச்சனைகள் தீர்வதற்கு தேங்காயை சிதறு தேங்காயாக உடைத்து விநாயகருக்கு வழிபாடு செய்வோம். இப்படி நம்முடைய வழிபாட்டோடு பலவிதமான தொடர்புகளைக் கொண்டதாக தான் தேங்காய் திகழ்கிறது. இந்த தேங்காயை பயன்படுத்தி காலபைரவருக்கு நாம் எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.
பொதுவாகவே தேய்பிறை அஷ்டமி நாளில் காலபைரவருக்கு தேங்காயை உடைத்து அதில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருப்போம். அதைவிட இந்த ஒரு தேங்காய் பரிகாரத்தை நாம் செய்யும் பொழுது காலபைரவரின் அருளால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கும் என்றே கூறலாம். இதற்கு நல்ல நிலையில் இருக்கக்கூடிய ஒரு தேங்காயை எடுத்துக் கொள்ளுங்கள். அதை முதலில் தண்ணீரில் நன்றாக சுத்தம் செய்து கொள்ளுங்கள். அடுத்ததாக சிறிது பன்னீரை ஊற்றி அதில் குங்குமத்தை கலந்து அந்த குங்குமம் விழுதை தேங்காயில் முழுவதுமாக தடவ வேண்டும். எப்படி மஞ்சள் தேங்காய் நாம் தயார் செய்வோமோ அதே போல் தான் சிவப்பு தேங்காயை நாம் தயார் செய்ய வேண்டும். ஒருவேளை தேங்காயில் சிவப்பு நிறம் ஒட்டவில்லை என்னும் பட்சத்தில் குங்குமத்தை எடுத்து அதற்கு மேல் நன்றாக தடவி தேங்காயை சிகப்பாக மாற்றிக் கொள்ளுங்கள்.
மாற்றிய இந்த தேங்காயை அருகில் இருக்கக்கூடிய காலபைரவரின் ஆலயத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். கையில் இந்த தேங்காயை வைத்துக்கொண்டு காலபைரவரை எட்டு முறை வலம் வர வேண்டும். கால பைரவரின் மந்திரத்தை கூறிக் கொண்டே வலம் வரவேண்டும். பிறகு காலபைரவருக்கு முன்பாக ஒரு கற்பூரத்தை ஏற்றி வைத்து அந்த கற்பூரத்தை பார்த்தவாறு நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் தீர வேண்டும் என்று முழு மனதோடு கால பைரவரை வேண்டி கையில் இருக்கக்கூடிய தேங்காயை சிதறு தேங்காயாக உடைக்க வேண்டும். இப்படி தேய்பிறை அஷ்டமி நாளில் சிவப்பு தேங்காயை பயன்படுத்தி காலபைரவரை நாம் வழிபாடு செய்யும்பொழுது கால பைரவரின் அருளால் நம் வாழ்வில் இருக்கக்கூடிய அனைத்து விதமான மனக்கவலைகளும், கஷ்டங்களும் நீங்கும்.
இதையும் படிக்கலாமே: தேய்பிறை அஷ்டமி ராகுகால வழிபாடு
தேய்பிறை அஷ்டமி நாளில் கால பைரவரின் ஆலயத்தில் இந்த முறையில் தேங்காயை வைத்து வழிபாடு செய்ய நம்முடைய மன கவலைகள் முற்றிலும் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.