கமகம வாசத்துடன் இப்படி சுவையான பூண்டு ரசம் செய்து பாருங்கள். பசி இல்லை என்பவர்களும் இதன் வாசனைக்கு சாப்பாடு வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்

rasam
- Advertisement -

நமது தென்னிந்தியாவில் அனைவரது வீட்டிலும் மதிய உணவுடன் தவறாமல் ரசமும் சேர்ந்திருக்கும். அதுபோல விசேஷங்களின் பொழுதும், திருமணங்களின் பொழுதும் சாப்பாட்டு பந்தியில் ரசம் இல்லாமல் இருக்காது. ரசம் வெறும் உணவாக மட்டுமல்லாமல் அது சீரண சக்தியை அதிகரித்து, வயிறு பிரச்சனைகளையும் சரி செய்கிறது. எப்பொழுதும் அசைவம் சாப்பிடுவதாக இருந்தால் அதனை சாப்பிட்டு முடித்ததும், இறுதியாக ஒரு கைப்பிடி சாதத்திற்கு ரசம் ஊற்றி சாப்பிடுங்கள். அப்பொழுது உங்களுக்கு சட்டென்று ஜீரணமாகும். வயிறு உப்புசம், பசியின்மை இவ்வாறு பிரச்சனை இருப்பவர்களும் ரசம் வைத்து சாப்பிட, இந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக இருக்கும். சளிப் பிடித்தவர்கள் ரசம் சாப்பிட சளி பிரச்சனைகளில் இருந்து உடனடி விடுதலை கிடைக்கும். வாருங்கள் இந்த காரசாரமான, மணமணக்கும் பூண்டு ரசத்தை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
மிளகு – ஒரு ஸ்பூன், சீரகம் – ஒரு ஸ்பூன், துவரம்பருப்பு – அரை ஸ்பூன், தனியா – அரை ஸ்பூன், பெரிய பூண்டு – 10 பல், தக்காளி – 3, சீரகம் – கால் ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், புளி – எலுமிச்சம்பழ அளவு, கறிவேப்பிலை – 2 கொத்து, கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி, எண்ணெய் – 2 ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன், வரமிளகாய் – 3, பச்சை மிளகாய் – 1.

- Advertisement -

செய்முறை:
முதலில் எலுமிச்சை பழ அளவு புளியை ஒரு கிண்ணத்தில் சேர்த்து, அதனுடன் தண்ணீர் ஊற்றி, ஊற வைத்து, புளியை கரைத்து புளிக்கரைசல் எடுத்துக் கொள்ள வேண்டும். பூண்டைத் தோலுரித்து வைக்க வேண்டும். பின்னர் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

அதன்பின் ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் தனியா, அரை ஸ்பூன் துவரம் பருப்பு, 10 பல் பூண்டு, 2 வரமிளகாய் மற்றும் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து அனைத்தையும் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாய் வைக்க வேண்டும்.

- Advertisement -

கடாய் காய்ந்ததும் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் இதனுடன் இரண்டு வரமிளகாய் மற்றும் ஒரு பச்சை மிளகாயை உடைத்து சேர்த்து, வதக்க வேண்டும். பிறகு இதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பின்னர் இவற்றுடன் நறுக்கி வைத்துள்ள தக்காளி பழங்களை சேர்த்து, வதக்கி விட்டு, அதனுடன் உப்பு, பெருங்காயத் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விட்டு, மூடி போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, 5 நிமிடம் வேக விடவேண்டும். பிறகு மூடியை திறந்து இவற்றுடன் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்த்து, அதனுடன் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, இறுதியாக ஒரு கைப்பிடி கொத்தமல்லி தழை சேர்த்து, ரசம் ஒரு கொதி வரும் பக்குவத்தில் வந்தவுடன் அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

- Advertisement -