வயிற்றில் இருக்கும் எப்பேர்ப்பட்ட புண்ணாக இருந்தாலும் அதை ஆற்றும் வல்லமை படைத்த மனத்தக்காளி கீரையை வைத்து இப்படி ஒரு முறை சட்னி செய்து பாருங்கள். கீரை சாப்பிட பிடிக்காதவர்கள் கூட இந்த சட்னியை விரும்பி சாப்பிடுவார்கள்.

manathakkali keerai chatni
- Advertisement -

தினமும் ஏதாவது ஒரு வகை கீரையை நம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நம் உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளும் கிடைத்து நோயற்ற வாழ்வை மேற்கொள்வோம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இருந்தாலும் அதை யாரும் பின்பற்றுவது இல்லை. ஆடிக்கு ஒரு முறையும், அமாவாசைக்கு ஒரு முறையும் என்ற வீதத்தில் மாதத்திற்கு ஒரு முறையாவது ஒரு கீரையை சமைத்துக் கொடுப்பார்களா என்று கேட்டாலும் அது சந்தேகம்தான். காரணம் கீரைகளை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவது கிடையாது. அப்படிப்பட்ட நேரத்தில் கீரையை ஏதாவது ஒரு ரூபத்தில் குழந்தைகளுக்கு சமைத்துக் கொடுத்து அவர்களை உண்ண வைத்தால் கீரையின் சத்துக்கள் அவர்களுக்கு கிடைக்கும். அந்த வகையில் மணத்தக்காளி கீரை சட்னியை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதி நாம் பார்க்க போகிறோம்.

கீரை என்றதுமே அதை நாம் பொரியலாக அல்லது கூட்டாக செய்து கொடுப்போம். இதனாலேயே பல குழந்தைகள் அதை விரும்பி சாப்பிட மாட்டார்கள். இன்று இருக்கும் காலகட்டத்தில் பெரியவர்கள் கூட விரும்பி சாப்பிடுவது இல்லை. அதில் பல நன்மைகள் இருக்கிறது என்று தெரிந்தாலும் அதன் சுவை பிடிக்காததால் அதை ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். இந்த நிலையை மாற்றுவதற்கு தான் கீரையை பயன்படுத்தி நாம் சட்னி செய்து இட்லி தோசைக்கு தருவதன் மூலம் கீரையின் சத்துக்கள் நம் உடலில் வந்து சேர்ந்து விடுகிறது. இப்பொழுது மணத்தக்காளி கீரை சட்னி எப்படி செய்வது என்று பார்ப்போம்.

- Advertisement -

செய்முறை 

ஒரு கட்டு மணத்தக்காளி கீரையை வாங்கி அதை ஆய்ந்து நன்றாக தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைக்க வேண்டும். கடாய் நன்றாக காய்ந்ததும் அதில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு எண்ணையை ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் 3 ஸ்பூன் உளுந்தை சேர்க்க வேண்டும். உளுந்து சிவக்க ஆரம்பித்தவுடன் அதில் 3 கொத்து கருவேப்பிலை மற்றும் 4 வரமிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். வரமிளகாய் சிவந்த பிறகு அதில் 50 கிராம் தோலுரித்த சின்ன வெங்காயத்தை போட வேண்டும். பிறகு 15 பல் பூண்டையும் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

வெங்காயமும், பூண்டும் நன்றாக வதங்கிய பிறகு நாம் சுத்தம் செய்து வைத்திருக்கும் கீரையை அதில் சேர்த்து வதக்க வேண்டும். கீரையில் தண்ணீர் சத்து இருந்தால் அந்த தண்ணீரிலேயே கீரை வெந்துவிடும். தண்ணீர் இல்லாத பட்சத்தில் சிறிது தண்ணீர் தெளித்து வேக வைக்க வேண்டும். தேவையான அளவு உப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

கீரை நன்றாக வெந்து பிறகு அதில் ஒரு எலுமிச்சை அளவிற்கு புளியை சேர்த்து வதக்க வேண்டும். பிறகு அரை மூடி துருவிய தேங்காயை அதில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். ஒரு நிமிடம் அளவிற்கு நன்றாக வதக்கிய பிறகு அடுப்பிலிருந்து இறக்கி விடலாம். வதக்கிய இந்த பொருட்களை நன்றாக ஆறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

உங்கள் விருப்பத்திற்கு ஏற்றார் போல் துவையல் ஆகவோ அல்லது சட்னியாகவோ இதை அரைத்து எடுத்துக் கொள்ளலாம். சட்னியாக தயாரிக்கும் பொழுது ஒரு சிறிய பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, கருவேப்பிலை போன்றவற்றை சேர்த்து நன்றாக தாளித்து சட்னியில் ஊற்றி பரிமாறலாம். இந்த சட்னியை இட்லி, தோசை என்று அனைத்திற்கும் நாம் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். துவையலை சாப்பாட்டிற்கும் பயன்படுத்தலாம். சாப்பாட்டில் போட்டு பிணைந்தும் சாப்பிடலாம்.

இதையும் படிக்கலாமே: லஞ்ச் பாக்ஸ்க்கு உருளை கிழங்கு சாதத்தை இந்த மாசலா சேர்த்து செஞ்சு கொடுத்து பாருங்க டிபன் பாக்ஸில் ஒரு பருக்கை சாதம் கூட மீதம் இருக்காது அது மட்டும் இல்லாம தினமும் இதை தான் செஞ்சு தர சொல்லி கேட்பாங்க.

எப்பேர்பட்ட வயிற்றுப் புண்ணாக இருந்தாலும் அதை ஆற்றக்கூடிய வல்லமை படைத்த இந்த மணத்தக்காளி கீரையை நம் உணவில் ஏதாவது ஒரு ரூபத்தில் சேர்த்து நலமுடன் வாழலாம்.

- Advertisement -