வயிற்றுப்புண், வாய்ப்புண், உடல் உஷ்ணம் தணிய அருமையான சுவையில் ஆரோக்கியமான மணத்தக்காளி கீரை சட்னி வீட்டிலேயே எளிதாக அரைப்பது எப்படி?

manathakkali-keerai-chutney_tamil
- Advertisement -

வயிற்றுப்புண், வாய்ப்புண், உடல் உஷ்ணம் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்க மணத்தக்காளி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வருவது நன்மை தரும் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் மணத்தக்காளி கீரையை வைத்து சுவையான சட்னி எப்படி தயாரிப்பது? ஆரோக்கியம் நிறைந்த இந்த மணத்தக்காளி கீரை சட்னி வீட்டில் அரைப்பது எப்படி? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பகுதியின் மூலம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

தேவையான பொருட்கள்

மணத்தக்காளி கீரை – இரண்டு கைப்பிடி அளவு, சமையல் எண்ணெய் – 1 ஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், பூண்டு – எட்டு பல், சின்ன வெங்காயம் – 10 பல், வரமிளகாய் – 3, துருவிய தேங்காய் – அரை கப், புளி – சிறு நெல்லிக்காய் அளவு, உப்பு – தேவையான அளவு. தாளிக்க: சமையல் எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், உளுந்து – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை விளக்கம்

மணத்தக்காளி கீரை சட்னி செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவற்றை தோல் உரித்து வைத்துக் கொள்ளுங்கள். மணத்தக்காளி கீரையை நன்கு சுத்தம் செய்து அலசி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

பருப்பு வகைகள் சிவக்க வறுபட்டதும் அரை ஸ்பூன் சீரகம், தோலுரித்து வைத்துள்ள பூண்டு பற்கள் மற்றும் சின்ன வெங்காயத்தை முழுதாக அப்படியே சேர்த்து நன்கு வதக்குங்கள். பின்னர் இதனுடன் காரத்திற்கு ஏற்ப வர மிளகாய்களை காம்பு நீக்கி சேர்த்து வதக்க வேண்டும். இவை நன்கு வதங்கியதும் சுத்தம் செய்து எடுத்து வைத்துள்ள மணத்தக்காளி கீரை இரண்டு கைப்பிடி அளவிற்கு சேர்க்க வேண்டும்.

- Advertisement -

கீரை சுருள வதங்கியதும் அரை கப் அளவிற்கு துருவிய தேங்காயை சேர்த்து நன்கு வதக்குங்கள். இதனுடன் ஒரு சிறு நெல்லிக்காய் அளவிற்கு புளியை உருட்டி சேர்த்து ஒரு முறை நன்கு வதக்கி விட்டு அடுப்பை அணைத்து ஆறவிட்டு விடுங்கள். அவ்வளவுதான், இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஆறிய பொருட்களை சேர்த்து ஒரு முறை நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான அளவிற்கு உப்பு போட்டு ஒரு முறை அரையுங்கள். அப்பொழுது தான் பசுமை நிறம் மாறாமல் இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
வாழைப்பூவில் கோலா உருண்டையா? அதை எப்படி செய்வது? நாவூறும் சுவையில் அருமையான வாழைப்பூ கோலா உருண்டை ரெசிபி எளிதாக எப்படி வீட்டில் தயாரிப்பதுன்னு நீங்களும் தெரிஞ்சுக்கோங்க!

பின்னர் இதற்கு ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டும். தாளிப்பு கரண்டி ஒன்றை அடுப்பில் வைத்து மீதம் இருக்கும் ஒரு ஸ்பூன் எண்ணெயை விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் அரை ஸ்பூன் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுபட்டதும், ஒரு கொத்து கருவேப்பிலையை போட்டு தாளித்து சட்னியுடன் கொட்டுங்கள். அவ்வளவுதான், சூப்பரான சுவையில் ஆரோக்கியம் நிறைந்த மணத்தக்காளி கீரை சட்னி ரெடி!

- Advertisement -