மாந்தி பரிகாரம்

Mandhi pariharam in Tamil
- Advertisement -

பொதுவாக சில ஜாதங்களில் மாந்தி தோஷம் இருப்பதாக கூறுவார்கள். மாந்தி என்பவர் சனி பகவானின் வெட்டுப்பட்ட காலில் இருந்து தோன்றிய ஒரு உப கிரகமாக கருதப்படுகிறார். ஒருவரின் ஜாதகத்தில் இந்த மாந்தி கிரக தோஷம் இருப்பின், அவர் வாழ்வில் பல்வேறு விதமான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இத்தகையை மாந்தி தோஷம் தீர செய்ய வேண்டிய மாந்தி பரிகாரம் குறித்து இங்கு நாம் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

மாந்தி தோஷம் நீங்க பரிகாரம்

பொதுவாக எந்த ஒரு மனிதர் இறந்த பிறகும், அவர் வாழும் காலத்தில் எவ்வளவு கொடியவராக இருந்தாலும் அவர் இறந்த பிறகு அவரை தூற்றக்கூடாது. அவரது சவத்திற்கு அவமரியாதை செய்யக்கூடாது. அப்படி செய்யும் பட்சத்தில், செய்யும் நபருக்கு பிரேத சாபம் ஏற்படுகிறது. இந்த பிரேத சாபம் என்பதும் ஒருவகை மாந்தி தோஷம் தான் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

எனவே எந்த ஒரு நபரின் சவ ஊர்வலம் செல்கின்ற பொழுதும் எழுந்து நின்று மரியாதை செய்வதும், அந்த சவ ஊர்வலம் செல்லும் பொழுது சில நிமிடங்கள் ஒதுங்கி நின்று அவரது ஆன்மா சாந்தியடைய மனதிற்குள்ளாகவே பிரார்த்தனை செய்வதும், இறந்தவர் அனாதையாக இருக்கும் பட்சத்தில் அவரது சவ அடக்கத்திற்கு தங்களால் இயன்ற பொருளுதவி செய்வதும் மாந்தி தோஷத்திற்குரிய சிறந்த பரிகாரங்களாக பரிந்துரைக்கப்படுகிறது.

தங்களின் ஜாதகத்தில் ஏற்பட்டிருக்கின்ற மாந்தி தோஷம் நீங்க விரும்புபவர்கள் தினமும் காலையில் எழுந்ததும் முதலில் சூரிய வழிபாடு செய்யும் வழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். மேலும் வாரத்தில் ஒருமுறையாவது உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கின்ற சிவன் கோயிலுக்கு சென்று சிவபெருமானையும் அம்பாளையும் வழிபாடு செய்ய வேண்டும். ஞாயிற்றுக்கிழமை தோறும் காலையில் எழுந்து குளித்து முடித்ததும் ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திர பாராயணம் செய்வதும் மாந்தி தோஷத்தின் தீவிரத் தன்மையை குறைக்கும் பரிகாரங்களாகும்.

- Advertisement -

மாந்தி தோஷம் ஏற்பட்டு அதனால் பாதிக்கப்படுபவர்கள், அந்த தோஷம் நீங்க தங்கள் சக்திக்கு ஏற்றவாறு மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ வேண்டும். குறிப்பாக கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருவதால் மாந்தி தோஷ பாதிப்புகள் குறைந்து வாழ்வில் நற்பலன்கள் அதிகம் ஏற்பட வழிவகை செய்யும்.

ஜாதகத்தில் மாந்தி தோஷம் ஏற்பட்டு, அதனால் வாழ்வில் பல்வேறு விதமான சிக்கல்களை சந்திப்பவர்கள் கும்பகோணம் அருகே நாச்சியார் கோவில் எனும் ஊருக்கு அருகில் இருக்கும் திருநரையூர் அருள்மிகு ராமநாத சுவாமி கோவிலுக்கு செல்ல வேண்டும். அங்கு தனி சன்னதியில் சனிபகவான் மற்றும் அவரது மகன்களான குளிகன் மற்றும் மாந்தி ஆகியோருடன் அருள் பாலிக்கிறார் எனவே இந்த கோவிலுக்கு சென்று சிவபெருமானை வழிபாடு செய்த பிறகு சனி பகவானுக்கும் மாந்தி, குளிகளுக்கும் முறைப்படி பூஜைகள் செய்து வழிபாடு செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: கணவன் மனைவி ஒற்றுமை பரிகாரம்

அதேபோன்று தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள விளாங்குளம் எனும் ஊரில் அமைந்துள்ள அருள்மிகு அட்சயபுரீஸ்வரர் திருக்கோயிலிலும் சனி பகவான் மாந்தி மற்றும் குளிகனுடன் அருள் பாலிக்கிறார். அங்கு சென்றும் மாந்திதோஷ பூஜை செய்து வழிபடுவதாலும் ஜாதகத்தில் ஏற்பட்டிருக்கின்ற மாந்தி தோஷம் நீங்கி வாழ்வில் சிறப்பான முன்னேற்றங்களை காணலாம்.

- Advertisement -