நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வீட்டில் தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவோம். அவ்வாறு தெய்வ வழிபாட்டில் ஈடுபடும் பொழுது நம்முடைய குலதெய்வத்தின் மந்திரத்தையோ, இஷ்ட தெய்வத்தின் மந்திரத்தையோ கூறி வழிபாடு செய்யும் வழக்கத்தை பலரும் வைத்திருப்போம். இன்னும் சிலர் கந்த சஷ்டி கவசம், சிவபுராணம் போன்ற பாடல்களை பாடி வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருப்பார்கள். இவை அனைத்துமே தெய்வ வழிபாட்டிற்குரிய ஒரு வழிமுறைதான். அப்படி நாம் செய்யக்கூடிய இந்த தெய்வ வழிபாட்டில் ஏதேனும் ஒரு சிறு தவறை நாம் செய்துவிட்டால் கூட அதனால் மந்திர தோஷம் என்பது நம் குடும்பத்திற்கே ஏற்பட்டு விடும். அப்படி ஏற்பட்ட மந்திர தோஷத்தை நீக்குவதற்குரிய ஒரு அற்புதமான நாளாக தான் ஆவணி அவிட்டம் திகழ்கிறது. அந்த நாளில் எந்த முறையில் வழிபாடு செய்தால் மந்திர தோஷம் நீங்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஆவணி அவிட்ட வழிபாடு
ஆடி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை கழித்து வரும் பௌர்ணமி தான் ஆவணி அவிட்டம். அந்த வகையில் இந்த முறை ஆடி அமாவாசை கழித்து ஆடி மாதத்திலேயே பௌர்ணமி வருவதால் அன்றைய தினத்தையே நாம் ஆவணி அவிட்டமாக கொண்டாட இருக்கிறோம். அப்படிப்பட்ட நாளில் பலரும் பூனல் மாற்றும் வழக்கத்தை வைத்திருப்பார்கள். ஆனால் அது அப்படி கிடையாது. நமக்கு இருக்கக்கூடிய நான்கு வேதங்களை வழிபாடு செய்வதற்குரிய நாளாக தான் இந்த ஆவணி அவிட்டம் நாள் திகழ்கிறது. அந்த நாளில் நாம் செய்யக்கூடிய வழிபாடு இதுவரை நாம் மந்திரம் சொல்லும் பொழுது செய்த தவறுகளால் உண்டான தோஷத்தை நீக்க கூடியது.
இந்த வழிபாட்டை ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் தேதி சனிக்கிழமை அன்று செய்ய வேண்டும். பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய சுவாமி படங்களுக்கு மலர்களை சாற்றி ஒரே நேர்கோட்டில் வடக்கு அல்லது கிழக்கு திசை பார்த்தவாறு நான்கு நெய் தீபங்களை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். மொத்தமாக ஒற்றைப்படை எண்ணிக்கையில் தீபம் எரிய வேண்டும் என்பதை கணக்கில் வைத்துக் கொள்ளுங்கள். பிரம்ம முகூர்த்த நேரத்தில் கண்டிப்பான முறையில் நான்கு தீபங்களையும் நாம் ஏற்ற வேண்டும்.. இந்த தீபங்களுக்கு முன்பாக கோதுமையால் செய்யப்பட்ட ஏதாவது ஒரு நெய்வேத்தியத்தை வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக விநாயகர் பெருமானின் மந்திரமான “ஓம் கணபதியே போற்றி ஓம்” என்னும் மந்திரத்தை 11 முறை கூற வேண்டும். அடுத்ததாக காயத்ரி மந்திரத்தை 11 முறை கூற வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ள வேண்டும். இதே ஆவணி அவிட்ட நாளில் சூரிய உதயம் ஆகும் பொழுது சூரிய பகவானை நாம் வழிபாடு செய்ய வேண்டும். அவ்வாறு சூரிய பகவானை வழிபாடு செய்யும்பொழுது “ஓம் நமோ ஆதித்யாய நமஹ” என்னும் மந்திரத்தை 11 முறை கூறி வழிபாடு செய்ய வேண்டும். அன்றைய தினம் அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று அங்கு இருக்கக்கூடிய நவக்கிரகங்களில் வீற்றிருக்கும் சூரிய பகவானை நாம் வழிபாடு செய்யும்பொழுது நம் வாழ்வில் அளவில்லா நன்மைகள் உண்டாகும்.
காயத்ரி மந்திரம்
“ஓம் பூர் புவ ஸ்வஹ தத் சவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ நஹ ப்ரசோதயாத்”
இதையும் படிக்கலாமே: வறுமையும் தரித்திரமும் நீங்க செய்ய வேண்டிய வழிபாடு
வேதங்களை வழிபாடு செய்வதற்குரிய நாளான ஆவணி அவிட்ட நாளன்று இந்த மந்திரங்களை கூறி வழிபாடு செய்பவர்களுக்கு மந்திரங்களால் ஏற்பட்ட தோஷங்கள் முற்றிலும் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.