ரெண்டு நாளைக்கு குழம்பு வைக்க வேண்டிய அவசியமே இருக்காது. அதுவும் தக்காளி போடாமல் இந்த குழம்பு ரெசிபி கிடைத்தது ஒரு பெரிய வரப்பிரசாதம் தான் போங்க.

kuzambu
- Advertisement -

தினமும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு குழம்பு வைக்கும் வேலை ஒரு மிகப்பெரிய வேலை. எந்த குழம்பு வைத்தாலும் ருசி இல்லை என்று சொல்லுவார்கள். ருசியாக குழம்பு செய்ய வேண்டும் என்றால் கூடுதலாக தக்காளி தேவைப்படுகிறது. இன்று தக்காளி விற்கும் விலைக்கு தக்காளி போட்டு சமாளிக்க முடியாது. என்ன செய்வது. சூப்பரான இந்த மிளகு குழம்பு ரெசிபியை ஒரு முறை படித்து பாருங்கள். இப்படி மிளகு குழம்பு வைத்தால் இது இரண்டு நாள் வரை கூட கெட்டுப் போகாது. இட்லி தோசை சுட சுட சாதம், சப்பாத்திக்கு கூட தொட்டு சாப்பிடலாம் என்றால் பாருங்களேன். அருமையான ஆரோக்கியம் தரும் மிளகு குழம்பு வைப்பது எப்படி? ரெசிபி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

செய்முறை

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். இதில் சில மசாலா பொருட்களை எல்லாம் வறுத்து அரைக்க போகின்றோம். கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பட்டை – 1 சின்ன துண்டு, வரமிளகாய் – 2, மிளகு – 2 ஸ்பூன், வர மல்லி – 3 ஸ்பூன், சோம்பு – 1 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், முந்திரி பருப்பு – 6, தோல் நீக்கிய சின்ன வெங்காயம் – 10 பல், பூண்டு – 6 பல், எல்லா பொருட்களையும் வாசம் வரும் வரை வறுக்கவும்.

- Advertisement -

இந்த பொருட்கள் எல்லாம் முக்கால் பாகம் வறுபட்டு வந்தவுடன் தேங்காய் துருவல் – 1 கைப்பிடி அளவு போட்டு தேங்காய் துருவலையும் சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளுங்கள். இறுதியாக கருவாப்பிலை – 1 கொத்து போட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த கலவை நன்றாக ஆறட்டும். ஆறிய பிறகு மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நைசாக விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து குழம்பை தாளிக்கலாம். அடுப்பில் ஒரு கடாயை வைத்து 3 ஸ்பூன் நல்லெண்ணெயில் வெங்காய வடகம் அப்படி இல்லை என்றால் கடுகு, சீரகம் தாளித்து, கருவேப்பிலை – 1 கொத்து, நறுக்கிய சின்ன வெங்காயம் – 1 கைப்பிடி அளவு, போட்டு ஒரு சின்ன எலுமிச்சம்பழம் அளவு புளியை நீர்க்க தண்ணீரில் கரைத்து இதில் ஊற்றிக் கொள்ளவும்.

- Advertisement -

புளியின் பச்சை வாடை போக 3 நிமிடங்கள் கொதிக்கட்டும். அடுத்து மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் அரவையை இதில் ஊற்றி கொழும்புக்கு தேவையான அளவு – உப்பு, போட்டு குழம்புக்கு தேவையான அளவு தண்ணீரையும் ஊற்றி நன்றாக கலந்து விட்டு ஒரு மூடி போட்டு குழம்பை ஐந்திலிருந்து ஏழு நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும். குழம்பு பச்சை வாடை நீங்கி கொதித்து வரட்டும். இறுதியாக இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெயை ஊற்றி ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விட்டால் சூப்பரான மிளகு குழம்பு ருசியாக தயாராகி இருக்கும்.

இதையும் படிக்கலாமே: மணக்க மணக்க மணத்தக்காளி கீரையை வைத்து சூப்பரான ஒரு சட்னி கூட அரைக்கலாமே. அது எப்படின்னு தெரிஞ்சுக்க உங்களுக்கும் ஆர்வம் இருக்கா?

அவ்வளவு தாங்க. இதை இரண்டு நாட்களுக்கு வைத்து சாப்பிடலாம். அருமையான ருசியில் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய குழம்பும் கூட இது. காரணம் மிளகு பூண்டு வெங்காயம் எல்லாம் அரைத்து சேர்த்து இருக்கிறோம் எதையும் எடுத்து தூர வைக்காமல் சாப்பிட்டு விடுவார்கள். சுட சுட சாதத்தோடு இந்த குழம்பும் கூட, இரண்டு வடாம் இருந்தால் போதும் சொர்க்கம் தான்.

- Advertisement -