சளி, இருமல், மார் சளி அறுபட காரசாரமான ஆரோக்கியமான மிளகு துவையல் எப்படி வீட்டிலேயே எளிதாக தயாரிப்பது?

milagu-thuvaiyal_tamil
- Advertisement -

அடிக்கடி சளி, இருமல் தொந்தரவால் பாதிக்கப்படுபவர்கள் இது போல காரசாரமான ஆரோக்கியம் நிறைந்த மிளகுத் துவையலை செய்து பார்க்கலாம். இஞ்சி, மிளகு, சின்ன வெங்காயம் என்று மூலிகை பொருட்களால் செய்யக்கூடிய இந்த மிளகு துவையல் சாப்பிடுவதற்கு கொஞ்சம் காரமாகத்தான் இருக்கும். இட்லி, தோசையுடன் தொட்டு சாப்பிட்டால் ருசியாக இருக்கக்கூடிய இந்த ஆரோக்கியமான மிளகு துவையல் எப்படி செய்யப் போகிறோம்? என்பதை தொடர்ந்து இந்த பதிவில் பார்ப்போம்.

Milagu-1

மிளகு துவையல் செய்ய தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் – ஒரு கப், சமையல் எண்ணெய் – ரெண்டு டேபிள் ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், மிளகு – ஒரு ஸ்பூன், இஞ்சி – ரெண்டு இன்ச், கருவேப்பிலை – ஒரு கொத்து, வரமிளகாய் – 2, உப்பு – சுவைக்கு ஏற்ப, தேங்காய் துருவல் – ஒரு கப், சீரகம் – அரை டீஸ்பூன், தாளிக்க: சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், உளுந்து – ஒரு ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன், வெந்தயம் – 10, கறிவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

மிளகு துவையல் செய்முறை விளக்கம்:
இந்த மிளகு துவையல் செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். சின்ன வெங்காயத்தை தோலுரித்து முழுதாக அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து பற்ற வையுங்கள். அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள்.

thuvaiyal

எண்ணெய் நன்கு காய்ந்து வந்ததும், அதில் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் மிளகு ஒரு ஸ்பூன் அளவிற்கு சேர்த்து கொள்ளுங்கள். மிளகு சேர்த்ததும் இரண்டு இன்ச் அளவிற்கு இஞ்சியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். இவை இரண்டும் லேசாக வதங்கியதும் நீங்கள் தோல் உரித்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தை முழுதாக சேர்த்து அப்படியே வதக்க வேண்டும்.

- Advertisement -

வெங்காயம் சுருள வதங்கி வரும் பொழுது ஒரு கொத்து கருவேப்பிலையை போடுங்கள். காரத்திற்கு இரண்டு வரமிளகாயை போட்டு, தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கலந்து விடுங்கள். அவ்வளவுதான் பிறகு அடுப்பை அணைத்து நன்கு ஆறவிட்டு விடுங்கள். ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்து அதில் இந்த பொருட்களை எல்லாம் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கப் அளவிற்கு துருவிய பிரஷ்ஷான தேங்காய் மற்றும் இதனுடன் அரை ஸ்பூன் அளவிற்கு சீரகம் சேர்த்து அரைக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
இட்லி தோசைக்கு ஒரு முறை இந்த இஞ்சி, தக்காளி கார சட்னியை செஞ்சு பாருங்க. இஞ்சி வாடையே பிடிக்காதவங்க கூட இன்னும் கொஞ்சம் சட்னி இருந்தால் தாங்கன்னு கேட்பாங்க. அந்த அளவுக்கு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்.

நைசாக துவையலை கெட்டியாக அரைத்து எடுத்ததும், சிறு தாளிப்பை இதற்கு கொடுக்க வேண்டும். தாளிப்பு கரண்டி ஒன்றை வைத்து தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக சிவக்க வறுத்துக் கொள்ளுங்கள். இவை வறுபட்டதும் ஒரு கொத்து கருவேப்பிலையும், 10 வெந்தயத்தையும் சேர்த்து தாளித்து துவையலில் கொட்டுங்கள். அவ்வளவுதாங்க, சூப்பரான காரசாரமான இந்த ஆரோக்கியமான மிளகு துவையல் ரெசிபி இப்பொழுது ரெடி! இதே மாதிரி நீங்களும் செஞ்சு பாருங்க, மார்பு சளியை நன்கு அறுத்து விடும்.

- Advertisement -