முடக்கத்தான் கீரை பணியாரம்

mudakathan keerai paniyaram
- Advertisement -

உணவே மருந்து என்னும் அடிப்படையில் மருந்தாக திகழக்கூடிய முடக்கத்தான் கீரையை வைத்து உணவு தயார் செய்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும். முடக்கத்தானை வைத்து முடக்கத்தான் கீரை பொரியல், முடக்கத்தான் கீரை தோசை, முடக்கத்தான் கீரை அடை என்று பல வகைகளில் நாம் செய்திருந்தாலும் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் முடக்கத்தான் பணியாரம் செய்யும் முறையை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

முடக்கு வாதம் என்று சொல்லக்கூடிய நோயை குணப்படுத்தும் அற்புதமான ஆற்றல் கொண்ட கீரை என்பதால் தான் இதற்கு முடக்கத்தான் கீரை என்று பெயரை வந்தது. எலும்புகள் பலவீனமாக இருப்பவர்கள் இந்த கீரையை சாப்பிடுவதன் மூலம் உடல் வலிமை பெறும். அதோடு மூட்டு வலி, இடுப்பு வலி என்று வரக்கூடிய அனைத்து வலிகளையும் குணப்படுத்தும் ஆற்றல் முடக்கத்தானிற்கு இருக்கிறது. அப்படிப்பட்ட முடக்கத்தானை வைத்து மிகவும் எளிமையான முறையில் செய்யக்கூடிய குழிப்பணியாரத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • இட்லி மாவு – ஒரு கிண்ணம்
  • முடக்கத்தான் கீரை – ஒரு கைப்பிடி அளவு
  • மிளகு – 3/4 ஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 4
  • இஞ்சி – ஒரு இன்ச்
  • பூண்டு – 10 பல்
  • சீரகம் – 1/2 ஸ்பூன்
  • பெருங்காயம் – 1/4 ஸ்பூன்

செய்முறை

முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சுத்தம் செய்து வைத்துள்ள கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன் மிளகு, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு போன்றவற்றை சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி கெட்டியான பதத்திற்கு நல்ல விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது இட்லி மாவை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதனுடன் சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து அரைத்து வைத்திருக்கும் கீரையும் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். தண்ணீர் அதிகமாக ஊற்றக்கூடாது. இட்லி மாவில் ஏற்கனவே உப்பு சேர்த்திருப்பதால் அந்த உப்பை இதற்கு போதுமானதாக இருக்கும். மேற்கொண்டு எந்த உப்பும் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. இதை நன்றாக கிளற வேண்டும். இட்லி மாவும் கீரையும் ஒன்றோடு ஒன்று நன்றாக கலந்த பிறகு பணியார கல்லை அடுப்பில் வைக்க வேண்டும்.

- Advertisement -

பணியார கல் நன்றாக சூடானதும் ஒவ்வொரு குழியிலும் சிறிதளவு எண்ணெயை ஊற்றி அரை குழி அளவிற்கு இந்த முடக்கத்தான் கீரை மாவை ஊற்ற வேண்டும். பிறகு அதன் மேல் லேசாக எண்ணையை ஊற்றி ஒரு மூடி போட்டு மூடி வைக்க வேண்டும். பணியாரம் வெந்த பிறகு அதை திருப்பி போட்டு மற்றொரு புறமும் வேகவிட்டு எடுக்க வேண்டும். மிகவும் சுவையான முடக்கத்தான் கீரை குழிப்பணியாரம் தயாராகிவிட்டது.

மாவு அரைக்க வேண்டிய எந்தவித அவசியமும் இல்லாமல் அனைவர் வீட்டிலும் இருக்கக்கூடிய இட்லி மாவிலேயே இப்படி குழிப்பணியாரம் செய்து கொடுப்பதன் மூலம் வீட்டில் இருக்கும் குழந்தைகள் அதை விரும்பி உண்பார்கள் என்பதுதான் முக்கியமான குறிப்பு. இதற்கு தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி மிகவும் அருமையாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: முருங்கைக் கீரை குழம்பு

எந்தவித சிரமமும் இல்லாமல் அதே சமயம் சுலபமாக செய்யக்கூடிய ஒரு ஆரோக்கியமான உணவாக இந்த முடக்கத்தான் கீரை பணியாரம் திகழ்கிறது. அனைவரும் தங்கள் இல்லங்களில் மாதத்திற்கு ஒரு முறையாவது இந்த முடக்கத்தான் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் இருக்கக்கூடிய எலும்புகள் அனைத்தும் வலிமை அடையும்.

- Advertisement -